/உள்ளூர் செய்திகள்/சென்னை/கொசஸ்தலையில் மின்கோபுரம் வாரியத்திற்கு அபராதம்கொசஸ்தலையில் மின்கோபுரம் வாரியத்திற்கு அபராதம்
கொசஸ்தலையில் மின்கோபுரம் வாரியத்திற்கு அபராதம்
கொசஸ்தலையில் மின்கோபுரம் வாரியத்திற்கு அபராதம்
கொசஸ்தலையில் மின்கோபுரம் வாரியத்திற்கு அபராதம்
ADDED : ஜூலை 24, 2024 12:48 AM
சென்னை, எண்ணுார் அனல் மின் நிலைய விரிவாக்கத்திற்காக, கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
'ஆற்றின் நீரோட்டம் தடைபடும் என்பதாலும், அலையாத்தி காடுகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதாலும் இதனை அகற்ற உத்தரவிட வேண்டும்' என, எண்ணுாரை சேர்ந்த சீனிவாசன், குமரேசன் சூளூரன் ஆகியோர் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அதை விசாரித்த தீர்ப்பாயம், -சி.ஆர்.இசட்., விதிகளுக்கு உட்பட்டுதான் மின் கோபுரங்கள் கட்டப்பட்டதா என்பதை கடலோர ஒழுங்குமுறை மண்டலம், ஆய்வு செய்யுமாறு உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர்குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் அளித்த தீர்ப்பு:
எண்ணுார் அனல் மின் நிலைய விரிவாக்கத்திற்காக கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதற்காக அப்பகுதியில் அனல் மின் நிலைய சாம்பல், கட்டுமான கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. இதனால் ஆற்றில் தண்ணீர் தடையின்றி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சி.ஆர்.இசட்., பகுதிக்குள் வருவதால் மீனவர்கள் படகுகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டு, அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டதால் சதுப்பு நிலங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மாற்று வழியில்லாததால் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே மின் கோபுரங்கள் அமைக்க முடிவெடுத்ததாக மின் வாரியம் தெரிவித்துள்ளது.
கொசஸ்தலை ஆற்றின் நீரோட்டம் பாதிக்கப்பட்டுள்ளதாலும், சதுப்பு நிலங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாலும் தமிழ்நாடு மின் வாரியம் நான்கு வாரங்களுக்குள் 25 லட்சம் ரூபாயை தமிழக வனத்துறைக்கு செலுத்த வேண்டும்.
சதுப்பு நிலங்களை மேம்படுத்த இந்த தொகையை வனத்துறை பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.