Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சென்னையில் வார்டு எண்ணிக்கை 300 ஆகிறது சட்டசபையில் அமைச்சர் நேரு அறிவிப்பு

சென்னையில் வார்டு எண்ணிக்கை 300 ஆகிறது சட்டசபையில் அமைச்சர் நேரு அறிவிப்பு

சென்னையில் வார்டு எண்ணிக்கை 300 ஆகிறது சட்டசபையில் அமைச்சர் நேரு அறிவிப்பு

சென்னையில் வார்டு எண்ணிக்கை 300 ஆகிறது சட்டசபையில் அமைச்சர் நேரு அறிவிப்பு

ADDED : ஜூன் 23, 2024 01:12 AM


Google News
சென்னை:''சென்னை மாநகராட்சியில் வார்டுகள் மறு சீரமைக்கப்பட்டு, 300 ஆக அதிகரிக்கப்படும்,'' என, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு அறிவித்து உள்ளார்.

சட்டசபையில், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து, அமைச்சர் நேரு வெளியிட்ட அறிவிப்புகள்:

சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில், 89 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். அனைத்து வார்டுகளிலும் ஒரே அளவு வாக்காளர்கள் இருக்கும் வகையில் மறு சீரமைக்கப்பட்டு, வார்டுகளின் எண்ணிக்கை 300 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 கருணாநிதி நுாற் றாண்டு விழா தொடர்ச்சியாக, சென்னை மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ள ரிப்பன் கட்டட வளாகத்தில், 75 கோடி ரூபாயில் புதிய மாமன்ற கூடம் கட்டப்படும்

 சென்னை மாநகராட்சியில், இந்த ஆண்டு 35 கோடி ரூபாயில் பள்ளி கட்டடங்கள் மேம்படுத்தப்படும். 30 கோடி ரூபாயில் 16 புதிய பள்ளி கட்டடங்கள் கட்டப்படும்

 பத்து கோடி ரூபாயில் 14 புதிய பூங்காக்கள், ஆறு நவீன விளையாட்டுத் திடல்கள் அமைக்கப்படும். 10 நீர்நிலைகள் 12.50 கோடி ரூபாயில் சீரமைக்கப்படும்

 வீடுகளில் குப்பையை சேகரிக்க 19.65 கோடி ரூபாயில் 500 பேட்டரி வாகனங்கள், 2,500 மெட்டாலிக் காம்பாக்டர் தொட்டிகள் வாங்கப்படும். 50 பூங்காக்களில் 15 கோடி ரூபாயில் நீர்தங்கும் பூங்காக்கள் அமைக்கப்படும்

 சென்னையில் 5 கோடி ரூபாயில் பரீட்சார்த்த முறையில் அறிவியல் பூங்கா அமைக்கப்படும். மழை நீரை சேமிக்க, 18 கோடி ரூபாயில் 15 இடங்களில் மழைநீர் தொட்டிகள் அமைக்கப்படும்.

நடைபாதைகள்


எம்.கே.பி., நகர் மத்திய நிழற்சாலை, மேற்கு நிழற்சாலை, மீனாம்பாள் சாலை, சத்தியமூர்த்தி நகர் பிரதான சாலை, ரித்தர்டன் சாலை, ராஜா அண்ணாமலைபுரம் இரண்டாவது பிரதான சாலை, நங்கநல்லுார் 4, 5, 6 பிரதான சாலைகள், பழைய திரு.வி.க, பாலம் ஆகிய இடங்களில் ஆரோக்கிய நடைபாதைகள் அமைக்கப்படும்.

அண்ணா நகரில் உள்ள டாக்டர் விஸ்வேஸ்வரய்யா பூங்கா தனியார் பங்களிப்புடன் சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்படும். புளியந்தோப்பு இறைச்சி கூடம் 45 கோடி ரூபாயில் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படும். 12 கோடி ரூபாயில், 7 எரிவாயு தகன மேடைகள் அமைக்கப்படும்.

சென்னை மாநகரில் தெரு நாய்களை கட்டுப்படுத்த, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக 78 பயிற்சி பெற்ற பணியாளர்களும், 116 வாகனங்களும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. சென்னை மாநகராட்சியில் செல்லப்பிராணிகளுக்கு 5,473 உரிமங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

நுாறு ஆண்டுகள் பழமையான, கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சீரமைத்து, செயல்திறனை அதிகரிக்க, திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

சென்னை மாநகராட்சியோடு இணைக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு குடிநீர் வழங்கல், கழிவுநீர் அகற்றும் கட்டமைப்புகளை உருவாக்க, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

புழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து, மாதவரம் குடிநீர் உந்து நிலையத்திற்கு செல்லும் மத்திய பிரதான குடிநீர் குழாய் 40 கோடி ரூபாயில் புதிதாக அமைக்கப்படும்.

குடிநீர் அளவுமானி கொள்கை 2022ன்படி, சென்னை மாநகரில் உள்ள 1 லட்சம் வணிக நிறுவனங்கள், பல மாடி குடியிருப்பு வளாகங்கள், வணிகத்துடன் கூடிய குடியிருப்புகளில் தனியார் பங்களிப்புடன், குடிநீர் பயன்பாட்டை அளவிடும் கருவிகள் பொருத்தப்படும்.

சென்னை அடையாறு, திருவான்மியூரில் உள்ள குடிநீர் வினியோக நிலையங்களில் இருந்து 24 மணி நேரமும் குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய, பழுதடைந்த குழாய்கள் மாற்றப்படும். விடுபட்ட இடங்களில் புதிய குழாய்கள் அமைக்கப்படும். குடிநீர் இணைப்புகளில் அளவு மீட்டர்கள் பொருத்தப்படும்.

சென்னையில் உள்ள 342 கழிவுநீர் உந்து நிலையங்களில் துர்நாற்றத்தை கட்டுப்படுத்த 50 கோடி ரூபாயில் நவீன உபகரணங்கள் நிறுவப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இ.சி.ஆரில் இரும்பு பாலங்கள்


எண்ணுார் நெடுஞ்சாலையில் 75 கோடி ரூபாயில் மேம்பாலம் கட்டப்படும். கொடுங்கையூர் கால்வாய் குறுக்கே தண்டையார்பேட்டையையும், கடும்பாடி அம்மன் கோவில் தெருவையும் இணைக்கும் பாலத்தை இடித்து, 8.2 கோடி ரூபாயில் புதிய பாலம் கட்டப்படும்.தமிழர் வீதியில் பழுதடைந்த பாலத்தை இடித்து, 4.38 கோடி ரூபாயில் புதிய பாலம் அமைக்கப்படும். கிழக்கு கடற்கரை சாலையையும் -- - பழைய மாமல்லபுரம் சாலையையும் இணைக்க, வெங்கடேசபுரம் - - இளங்கோ நகர், மணியம்மை தெரு - வீரமணி சாலை, அறிஞர் அண்ணா சாலை -- பாண்டியன் சாலை ஆகிய இடங்களில், 21 கோடி ரூபாய் செலவில் இரும்பு பாலங்கள் அமைக்கப்படும் என, அமைச்சர் நேரு அறிவித்துள்ளார்.



3வது முறையாக மாடுகள் பிடித்தால் ஏலம் விடப்படும்


சென்னை மாநகரில், தெருக்களில் திரியும் மாடுகளால் பலர் பாதிக்கப்படுகின்றனர். மாடுகளை தெருவில் விடாமல் தடுக்க, மாநகராட்சி கமிஷனர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.தெருவில் திரியும் மாடுகள் முதலில் பிடிபட்டால் 5,000 ரூபாய், இரண்டாவது முறை பிடிபட்டால் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. மூன்றாவது முறை பிடிபட்டால் மாடுகளை பறிமுதல் செய்து, ஏலம் விடவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என, அமைச்சர் நேரு தெரிவித்தார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us