/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பல லட்சம் செலவில் உருவான பூங்காக்கள் பாழாகும் அவலம் பல லட்சம் செலவில் உருவான பூங்காக்கள் பாழாகும் அவலம்
பல லட்சம் செலவில் உருவான பூங்காக்கள் பாழாகும் அவலம்
பல லட்சம் செலவில் உருவான பூங்காக்கள் பாழாகும் அவலம்
பல லட்சம் செலவில் உருவான பூங்காக்கள் பாழாகும் அவலம்
ADDED : ஜூன் 18, 2024 12:33 AM

திருவேற்காடு, திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில், பல லட்சம் ரூபாய் மதிப்பீடில் கட்டப்பட்ட 23 பூங்காக்கள் உள்ளன.
இதைத்தொடர்ந்து, 2021ல் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில், 7.65 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால், அதன்பின் கண்டுகொள்ளவில்லை. இதனால், சிறுவர்கள் பூங்கா 'விஷ ஜந்துக்களின் பூங்கா'வாக மாறியுள்ளது.
பாலகிருஷ்ணா நகர்
திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டு, சுந்தர சோழபுரத்தில் பாலகிருஷ்ணா நகர் பூங்கா உள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் திறந்தவெளி கட்டண நிதி 2017- - 18ன் கீழ், 47 லட்சம் மதிப்பீடில் கட்டப்பட்டு, கடந்த 2019ல் திறக்கப்பட்டது.
நடைப்பயிற்சி பாதை, குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள், உடற்பயிற்சி உபகரணங்கள் மற்றும் காவலாளி அறையுடன் கட்டப்பட்ட இந்த பூங்கா, தற்போது கருவேல மரங்கள் வளர்ந்து புதர்மண்டி காட்சி அளிக்கிறது. திறக்கப்பட்ட சில நாட்களில், பூங்காவில் இருந்த மின் விளக்குகளும் 'அவுட்' ஆகின.
தற்போது, சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பாரதி நகர்
திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட 12வது வார்டு, கோலடி சாலை, பாரதி நகர் பிரதான சாலையில் பாரதி நகர் பூங்கா உள்ளது.
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் திறந்தவெளி கட்டண நிதி 2017- - 18ன் கீழ், 16 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு கடந்த 2019ல் திறக்கப்பட்டது. பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் வீணாகி வருகின்றன. பூங்கா முகப்பில், கழிவுநீர் ஆறாக ஓடுவதால், பகுதிவாசிகள் பூங்காவை பயன்படுத்த தயங்குகின்றனர்.
பூங்காவில் காவலாளி இல்லாததால், வெளியில் இருந்து வரும் நபர்களால் பூங்கா சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது.
சூர்ய நாராயணன் நகர்
திருவேற்காடு, 12வது வார்டு, சூர்ய நாராயணன் நகர் 1வது தெருவில், சூர்ய நாராயணன் நகர் பூங்கா உள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் திறந்தவெளி கட்டண நிதி 2017- - 18ன் கீழ், கட்டப்பட்டு கடந்த 2019ல் திறக்கப்பட்டது. இந்த பூங்காவில், விளையாட்டு உபகரணங்கள், உடற்பயிற்சி உபகரணங்கள் மழையில் பாழாகி உள்ளன.
பல லட்சம் செலவில் பராமரிக்கப்பட்ட நிலையில், 'பழைய ஈயம் பித்தளைக்கு பேரீச்சம் பழம்' போல காயலான் கடை பொருட்களாக காட்சி அளிக்கிறது.
மின் விளக்குகள் எரியாததால், இரவு நேரங்களில் திறந்தவெளி மது கூடமாகவும் செயல்பட்டு வருகிறது.
கண்காணிப்பு தேவை
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
திருவேற்காடு நகராட்சி அதிகாரிகள் பூங்காக்களை புனரமைப்பதோடு, முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்காணிப்பு கேமரா அமைத்து, சட்டவிரோத செயல்கள் நடக்காமல் தடுக்க ஆவன செய்ய வேண்டும்.
சில பயனற்ற பூங்காக்களை சீரமைப்பதற்கு பதில், அந்த இடங்களில் வணிக வளாகங்கள், ரேஷன் கடைகள் உள்ளிட்ட மக்கள் திட்ட பணிகளை மேற்கொள்ளலாம்.
இதன் வாயிலாக நகராட்சிக்கு போதிய வருமானம் கிடைக்கும். மேலும், பராமரிப்பு என்ற பெயரில் அடிக்கடி செலவிடும் பணமும் மிச்சமாகும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.