/உள்ளூர் செய்திகள்/சென்னை/ துாய்மை பணியில் அலட்சியம் வாரிய குடியிருப்புவாசிகள் அதிருப்தி துாய்மை பணியில் அலட்சியம் வாரிய குடியிருப்புவாசிகள் அதிருப்தி
துாய்மை பணியில் அலட்சியம் வாரிய குடியிருப்புவாசிகள் அதிருப்தி
துாய்மை பணியில் அலட்சியம் வாரிய குடியிருப்புவாசிகள் அதிருப்தி
துாய்மை பணியில் அலட்சியம் வாரிய குடியிருப்புவாசிகள் அதிருப்தி
ADDED : ஜூன் 10, 2024 02:18 AM

சென்னை:பெரும்பாக்கம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு, 200 ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு, 25க்கும் மேற்பட்ட தெருக்களில், 25,000க்கும் மேற்பட்ட அடுக்குமாடி வீடுகள், 8 பள்ளிகள், ஐ.டி.ஐ., கல்லுாரி, பேருந்து நிலையம், துணை மின்நிலையம் உள்ளிட்ட அலுவலகங்கள் உள்ளன.
இந்த பகுதி, சோழிங்கநல்லுார் மண்டலம், 200வது வார்டை ஒட்டி, பெரும்பாக்கம் ஊராட்சி எல்லையில் உள்ளது. இப்பகுதி துாய்மை பணியை ஊராட்சி நிர்வாகம் செய்யாததால், மாநகராட்சி செய்கிறது. இதற்கு, ஆண்டுக்கு 2.31 கோடி ரூபாய், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், மாநகராட்சிக்கு செலுத்துகிறது.
தினமும், 20,000 கிலோ குப்பை சேகரிக்கப்படுகிறது. 'பிளாக்' வாரியாக குப்பை சேகரிப்பு மற்றும் சாலை துாய்மை பணி மேற்கொள்ள, 105 ஊழியர்கள் இருக்க வேண்டும்.
ஆனால், 55 பேர் தான் உள்ளனர். இதனால், பல தெருக்களில் குப்பை தேங்கி உள்ளது. காற்றடித்தால் குப்பை பறந்து சாலை, தெருக்களில் சிதறுகிறது. மண் குவியலால், சாலையில் புழுதியும் பறக்கிறது. மழை பெய்தால், குப்பை மட்கி துர்நாற்றம் வீசுவதுடன், புழுக்கம் அதிகரித்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. இதனால், தொற்று நோய் பரவும் அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, பகுதி மக்கள் கூறியதாவது:
வாரிய அதிகாரிகளிடம் கூறினால், சோழிங்கநல்லுார் மண்டல அதிகாரிகளிடம் தான் புகார் தெரிவிக்க வேண்டும் என்றனர். மண்டல அதிகாரியிடம் கூறினால், முறையான பதில் இல்லை. வாரியம் பணம் செலுத்தியும், துாய்மை பணி மேற்கொள்ளாதது குறித்து, உயர் அதிகாரிகள் விசாரிக்க வேண்டும். முறையாக துாய்மை பணி மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
மண்டலத்தில் தனியார் வாயிலாக துாய்மை பணி மேற்கொள்கிறோம். வாரிய குடியிருப்பின் துாய்மை பணியை, ஏற்கனவே இருந்த ஊழியர்களை கொண்டு செய்கிறோம். பணி ஓய்வு, வேறு வார்டுகளுக்கு இடமாற்றம் போன்ற காரணத்தால், வாரிய குடியிருப்பில் துாய்மை பணி மேற்கொள்ள, ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஒப்பந்த ஊழியர்களை நியமிக்க வேண்டும். இதற்கு, உயரதிகாரிகள் தான் முடிவு செய்ய வேண்டும். அப்போது தான் துாய்மை பணியை முறையாக செய்ய முடியும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.