Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கழிப்பறை சீர்கேடால் விபரீதம் குடிநீரில் கலக்கும் கழிவுநீர்

கழிப்பறை சீர்கேடால் விபரீதம் குடிநீரில் கலக்கும் கழிவுநீர்

கழிப்பறை சீர்கேடால் விபரீதம் குடிநீரில் கலக்கும் கழிவுநீர்

கழிப்பறை சீர்கேடால் விபரீதம் குடிநீரில் கலக்கும் கழிவுநீர்

ADDED : ஜூன் 28, 2024 12:20 AM


Google News
Latest Tamil News
செங்குன்றம், பேருந்து நிலைய கட்டண கழிப்பறையின் கழிவுநீர் வெளியேற உரிய கால்வாய் வசதியில்லாததால், பொது குடிநீர் குழாய் மற்றும் ஆழ்துளை குழாய் கிணறுகளில் கழிவுநீர் கலந்து, நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.

சென்னை செங்குன்றம் பேருந்து நிலையத்தில் இருந்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் ஆந்திர மாநிலம் ஆகியவற்றுக்கு, 200க்கும் மேற்பட்ட, அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தினமும், 50,000 பயணியர் பயன்படுத்துகின்றனர்.

அங்குள்ள கட்டண கழிப்பறை, நாரவாரிக்குப்பம் பேரூராட்சி வாயிலாக ஏலம் விடப்பட்டுள்ளது.

மோசமான நிலை


கட்டணம் வசூலித்தும், பராமரிப்பு இல்லாததால், சுகாதார சீர்கேடு மலிந்துள்ளது. 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அந்த கட்டடமும், போதிய பராமரிப்பின்றி சிதிலமடைந்துள்ளது. அதனால், அவற்றில் இருந்து திட, திரவ கழிவுகள் வெளியேற வழியின்றி, கழிப்பறை கட்டடத்தை சுற்றி தேங்குகிறது.

கழிப்பறை கட்டடத்தையொட்டி செங்குன்றத்தின் குடிநீர் தேவைக்கு உதவும், 6 லட்சம் லிட்டர் கொள்ளளவு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. அங்குள்ள கீழ்நிலை தொட்டியில் குடிநீர் தேக்கப்பட்டு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு ஏற்றப்பட்டு, பொது மற்றும் வீட்டிணைப்பு குழாய் மூலம் வினியோகிக்கப்படுகிறது.

கட்டண கழிப்பறைகளின் மோசமான நிலையால், செங்குன்றத்தின் 18 வார்டுகளில் உள்ள, 115 தெருக்களுக்கும், வினியோகிக்கப்படும் குடிநீரில் கழிவுநீர் கலக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கழிப்பறை அருகே உள்ள மழைநீர் தொட்டியிலும் கழிவுநீர் கலக்கிறது. அதனால் ஏற்படும் சுகாதார சீர்கேடால், வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் உள்ளிட்ட உடல் நல பாதிப்பு ஏற்படுகிறது.

சுகாதார சீர்கேடு


இது குறித்து, நாரவாரிக்குப்பம் பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் சுகாதார அலுவலர்களிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அந்த பழைய கழிப்பறையை இடித்து, புதிய கழிப்பறை கட்டினால் தான் பிரச்னை தீரும்; அதற்கு இப்போது வாய்ப்பில்லை என அவர்கள் கைவிரித்துள்ளனர்.

நாரவாரிக்குப்பம் பேரூராட்சியில், பல்வேறு சுகாதார சீர்கேடுகள் அதிகரித்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

செங்குன்றம் ஜி.என்.டி., சாலை மற்றும் தெருக்களில் தினமும் அகற்றப்படும் குப்பை கழிவுகளை, வண்டிமேடு, பனையாத்தம்மன் கோவில் தெரு, திரு.வி.க., தெரு சந்திப்பு ஆகியவற்றில், ஓரிரு நாட்கள் இருப்பு வைத்து, மினி லாரி, டிராக்டர் கிடைத்த பிறகே அகற்றுகின்றனர்.

இந்த பிரச்னைகளால் அப்பகுதியினர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us