/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கழிவுநீர் கலப்பால் செத்து கரை ஒதுங்கிய மீன்கள் கழிவுநீர் கலப்பால் செத்து கரை ஒதுங்கிய மீன்கள்
கழிவுநீர் கலப்பால் செத்து கரை ஒதுங்கிய மீன்கள்
கழிவுநீர் கலப்பால் செத்து கரை ஒதுங்கிய மீன்கள்
கழிவுநீர் கலப்பால் செத்து கரை ஒதுங்கிய மீன்கள்
ADDED : ஜூன் 20, 2024 12:26 AM

சென்னை, சென்னை, புறநகரின் வளர்ச்சி, அடையாறு ஆற்றங்கரையோரங்களில் வர்த்தக நிறுவனங்கள் பெருக்கம், ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பு காரணமாக, பல்வேறு இடங்களில் கழிவுநீர் கலக்க ஆரம்பித்தது.
சென்னை நகரில் கட்டப்பட்ட பல மழைநீர் வடிகால்கள், அடையாறில் இணைக்கப்பட்டன. ஆனால், மழைநீர் வடிகாலில் ஆண்டு முழுதும் கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனால், ஆற்றில் கழிவுகள் கலந்து கடுமையாக மாசடைகிறது.
இதனால், அடையாறு சீரமைப்பு பணிகள் பல கோடி ரூபாய் செலவில் நடந்தன. சில ஆண்டுகளுக்கு முன், இரண்டாம் கட்டமாக, 90 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, 25.4 கி.மீ., துாரம் சீரமைப்பு பணி நடந்தது. அப்படியிருந்தும், அடையாற்றில் கழிவுநீர் கலக்கவிடுவது தொடர்கிறது.
இதன் காரணமாக, காமராஜ் சாலை, மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் எதிரில், கடலில் இறந்த மீன்கள், மெரினா கடற்கரையோரம் கரை ஒதுங்கின.
வரிசையாக ஏராளமான மீன்கள் கரையில் செத்துக்கிடந்ததால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியது. இதனால், கடற்கரைக்கு வந்தோர் சிரமப்பட்டனர்.
சில நாட்களுக்கு முன், கோட்டூர்புரம் சுற்றுச்சூழல் பூங்கா அருகிலும் இதேபோல, மீன்கள் இறந்து ஆற்றங்கரையோரம் ஒதுங்கின.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
கோட்டூர்புரத்தில் இருந்து அடையாறு முகத்துவாரம் வரை, கழிவுநீர் கலப்பு அதிகம் உள்ளது. இதனால் ஆற்று நீர் மாசடைந்து, மீன்கள் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.
அடையாற்றின் வடக்கே, ரிவர் வியூ சாலையில், கோட்டூர்புரம் நகர்ப்புற வனப்பகுதி வழியாகச் செல்லும் வாய்க்காலில், கழிவுநீர் நிரம்பியுள்ளது. அது, அடையாறில் கலக்கிறது. இரண்டு ஆண்டுகளாக பல புகார்கள் அளித்தும், எந்த நிரந்தர தீர்வும் கிடைக்கவில்லை.
அதேபோல், லாக் தெருவின் ஆற்றங்கரையில் உள்ள வாய்க்காலில் இருந்து அடையாற்றில் தொடர்ந்து கழிவுநீர் கலக்கிறது. இதேபோல், அடையாறு ஆற்றின் பல இடங்களில் கழிவுநீர் கலப்பதால், ஆக்சிஜன் அளவு குறைந்து மீன்கள் இறக்கின்றன.
சென்னையில் உள்ள அடையாறு உள்ளிட்ட ஆறுகளை சுத்தப்படுத்துமாறு, மாநில அரசுக்கு, 2022ல் பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. எனினும், பல வடிகாலில் இருந்து வெளியேறும் கழிவுநீர், ஆற்றில் தொடர்ந்து கலந்து மாசு ஏற்படுகிறது.
ஆற்றில் சேரும் கழிவுநீரை தடுக்கும் வகையில் கோட்டூர்புரம், நந்தனம், சைதாப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல் போன்ற பல்வேறு இடங்களில் புதிய கழிவுநீர் பம்பிங் ஸ்டேஷன்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றை, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு திருப்பி விடப்படுவதாக, குடிநீர் வாரியத்தினர் கூறுகின்றனர்.
எனினும், ஆற்றின் அருகில் உள்ள வர்த்த நிறுவனங்கள், ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் சட்டவிரோதமாக கழிவுநீரை வடிகால் வாயிலாக அடையாறில் விடுவதை, முற்றிலும் தடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மீன்பிடி தடைக்காலம் முடிந்து, தற்போது தான் மீன்பிடி தொழிலுக்கு செல்கிறோம். சில மீன்கள் கரையை தொடும் அளவிற்கு நீந்திவரும். அப்போது பொதுமக்கள் சிலர், கடலில் வீசி அடிக்கும் உணவுப் பொருளை உட்கொள்ளும் போது ஒவ்வாமை எற்பட்டு, மீன்கள் இறக்க நேரிடும். ரசாயன கழிவுநீர் கடலில் கலந்திருந்தாலும், மீன்கள் இறக்க அதிகம் வாய்ப்புண்டு. கடல் மாசுப்படாமல் இருக்க, தமிழக அரசு நடவடிக்கை வேண்டும்.
- மீனவர்கள்