Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பெரிய கட்டுமானங்களுக்கு நீர்நிலைகளில் விலக்கு? குடிசைகளை மட்டும் அகற்றி அரசு கண்துடைப்பு

பெரிய கட்டுமானங்களுக்கு நீர்நிலைகளில் விலக்கு? குடிசைகளை மட்டும் அகற்றி அரசு கண்துடைப்பு

பெரிய கட்டுமானங்களுக்கு நீர்நிலைகளில் விலக்கு? குடிசைகளை மட்டும் அகற்றி அரசு கண்துடைப்பு

பெரிய கட்டுமானங்களுக்கு நீர்நிலைகளில் விலக்கு? குடிசைகளை மட்டும் அகற்றி அரசு கண்துடைப்பு

ADDED : ஜூன் 18, 2024 12:12 AM


Google News
Latest Tamil News
சென்னை, விரிவாக்கத்திற்கு முந்தைய சென்னை மாநகராட்சி எல்லைக்குள், வேளச்சேரி ஏரி 265.48 ஏக்கர் பரப்பில் இருந்தது. ஏரிக்குள் புதிதாக செயல்படுத்தப்பட்ட அரசு திட்டங்கள், ஆக்கிரமிப்புகளால், ஏரி சுருங்கியது. தற்போது, 55 ஏக்கர் பரப்பில், வேளச்சேரி ஏரியாக சுருங்கி விட்டது.

இதில், 80 சதவீதம் மேற்கு திசையிலும், 20 சதவீதம் கிழக்கு திசையிலும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு மேற்கு திசையில், 1,600 ஆக்கிரமிப்புகள் இருந்தன. இந்த ஆண்டு, 1,800 ஆக அதிகரித்துள்ளது.

கிழக்கு திசையில், 450 ஆக்கிரமிப்புகள் இருந்தன. இந்த ஆண்டு, ஆக்கிரமிப்புகளின் எண்ணிக்கை 550 ஆக அதிகரித்து உள்ளது.

மேலும், ஒற்றையடி பாதையாக இருந்த கிழக்கு திசை கரை, மண் கொட்டி 30 அடி அகலத்திற்கு சாலையாக மாற்றப்பட்டு வருகிறது. அதற்கும் ஏரியின் இடமே மண்கொட்டி, கபளீகரம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஏரி, பொதுப்பணித் துறை பாதுகாப்பில் உள்ளது. ஆனால், ஆகாய தாமரை அகற்றும் பணியை, மாநகராட்சி செய்கிறது. இதற்காக, ஒவ்வொரு ஆண்டும், மாநகராட்சி ஒரு கோடி ரூபாய் செலவு செய்கிறது.

கடந்த 2016ம் ஆண்டு, 65 லட்சம் ரூபாயில், 900 அடி நீளம், 10 அடி அகல நடைபயிற்சி பாதை அமைக்கப்பட்டது. இது தான், 45 ஆண்டுகளில், பொதுப்பணித் துறை சார்பில் ஏரிக்கு ஒதுக்கிய நிதி.

ஆக்கிரமிப்புகளை தடுக்க வேண்டிய பொதுப்பணித் துறை அலுவலகம், 30 கி.மீ., துாரத்தில், காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை பகுதியில் உள்ளது. ஊழியர்கள் பற்றாக்குறை, பயண நேரம் அதிகரிப்பு போன்ற காரணத்தால், படப்பையில் இருந்து, ஏரியை பார்வையிட யாரும் வருவதில்லை.

முதல்வர், அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், மத்தியக்குழுவினர் இந்த ஏரியை பார்வையிடப்போவதாக அறிவிப்பு வந்தால் மட்டும், அவர்களுடன் சேர்ந்து தலைகாட்டுகின்றனர்.

அதிகாரிகள் அடிக்கடி ஏரியை பார்வையிடாதது, ஆக்கிரமிப்பாளர்களுக்கு வசதியாக உள்ளது. ஏரியை பாதுகாக்கவிடாமல் தடுக்க முக்கிய காரணம், உள்ளூர் அரசியல்வாதிகள் என, பகுதிமக்கள் கூறுகின்றனர்.

'கடந்த 2006 - -2011ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில், ஏரியை பாதுகாத்து, படகு குழாம் அமைக்கப்படும்' என, அறிவிக்கப்பட்டது. ஆட்சி மாற்றம் காரணமாக, இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

அத்துடன் ஆக்கிரமிப்புகள் அதிகரித்ததுடன், பெரியளவிலான கட்டுமான திட்டங்களும் ஏரியை சுற்றிலும் உருவாக்கப்பட்டன.

மீண்டும், தி.மு.க., ஆட்சிக்கு வந்த நிலையில் அக்கட்சி அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏரி மீட்கப்பட்டு பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, வேளச்சேரி மக்கள் நம்பினர். ஆனால், குடிசை வீடுகளை அகற்றுவதில் அதிரடி காட்டிய அதிகாரிகள், பெரிய அளவிலான கட்டுமானங்கள், குடியிருப்புகளை கண்டுகொள்ளவில்லை.

இதற்கு தங்களின் வாழ்நாள் சம்பாத்திய தொகை, இங்குள்ள குடியிருப்புகளில் முதலீடு செய்யப்பட்டிருப்பதாக ஒரு பிரிவினர், குரல் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

வேளச்சேரி தவிர்த்து கொளத்துார், முடிச்சூர், பெரும்பாக்கம், ஆதம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளை ஆக்கிரமித்தும் பெரிய கட்டடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன.

எனவே, பெரிய கட்டுமானங்களும், குடியிருப்புகளையும் அகற்றாமல், ஏரி மேம்பாடு திட்டத்தை மாற்றியமைக்க சி.எம்.டி.ஏ., நிபுணர் குழு திட்டமிட்டுள்ளது. இதற்கான சாத்தியக்கூறுகளையும் தயாரித்து வருகிறது.

சென்னையில் உள்ள 10 ஏரிகளை மேம்படுத்த, தனியார் நிறுவனம் வாயிலாக தயாரிக்கப்பட்டுள்ள திட்ட அறிக்கையில், தற்போது சில மாற்றங்கள் கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது.

சென்னையில் இரண்டு நாள் பெய்யும் சாதாரண மழைக்கே, வேளச்சேரி, ஆதம்பாக்கம் உள்ளிட்ட நீர்நிலை ஆக்கிரமிப்பு பகுதிகளில் கடும் வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது.

எனவே, ஏரி ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றாமல் மேம்படுத்தினால், வெள்ள பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என, நீர்நிலை ஆர்வலர்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.

அதே நேரம் பெரிய கட்டுமானங்களை அகற்றுவதில் உள்ள இடர்பாடுகள் குறித்தும் சி.எம்.டி.ஏ., நிபுணர் குழு சுட்டிக்காட்டி உள்ளது.

எனவே, நீர்நிலைகளில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டு நிலையில், மிகப்பெரிய கட்டுமானங்களுக்கு விலக்களித்து, அவற்றை அப்புறப்படுத்தாமல் மாற்றி வடிவமைப்பதற்கான சாத்தியக்கூறு குறித்து அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

இவ்வாரத்தில், நீர்நிலைகள் மேம்பாட்டு திட்டங்கள் குறித்த நிலைக்குழுவின் முதல் கூட்டம் நடக்க உள்ளது. அதில் இப்பிரச்னை குறித்து விவாதித்து முடிவெக்கப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.

குறிப்பாக, வேளச்சேரி மற்றும் ஆதம்பாக்கம் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றுவதா அல்லது மாற்று திட்டம் செயல்படுத்துவதா என்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

வேளச்சேரி ஏரியால், நிலத்தடி நீர் அதிகரிக்கும். இதை உணர்ந்து, 30 ஆண்டுகளாக, முதல்வர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் என முறையிட்டு வருகிறோம். யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. பாரபட்சம் இல்லாமல் ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏரி மேம்பாடு திட்டத்தை செயல்படுத்தினால், ஏரியை பாதுகாப்பதுடன், நிலத்தடி நீர் மட்டமும் உயரும். கழிவுநீரால் ஏற்படும் மாசும் தடுக்கப்படும்.

- நலச்சங்க நிர்வாகிகள், வேளச்சேரி

செய்யப்பட்டது எப்படி?

வேளச்சேரி ஏரி, 265.48 ஏக்கர் பரப்பில் இருந்தது. 1989ல், நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், 280 சதுர அடி பரப்பில், 3,500 வீடுகள் ஒதுக்க ஏரி மூடப்பட்டது. 1993ல், வீட்டுவசதி வாரியம் சார்பில், 100 ஏக்கர் பரப்பை மூடி, 5,200 வீட்டுமனைகள் ஒதுக்க விற்பனை செய்யப்பட்டது.2002ல், விரைவு சாலை அமைக்க, ஏரி இரண்டு துண்டாக்கப்பட்டது. இத்திட்டங்களை பயன்படுத்தி, அவற்றுக்கு அக்கம் பக்கத்தில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் முளைத்தன. தற்போது, 55 ஏக்கர் பரப்பாக ஏரி சுருங்கி உள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us