Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தாம்பரம் மாநகராட்சியில் குடிநீர் சப்ளை... 24 மணி நேரமும்! முதல் கட்டமாக 5 வார்டுகளில் சோதனை

தாம்பரம் மாநகராட்சியில் குடிநீர் சப்ளை... 24 மணி நேரமும்! முதல் கட்டமாக 5 வார்டுகளில் சோதனை

தாம்பரம் மாநகராட்சியில் குடிநீர் சப்ளை... 24 மணி நேரமும்! முதல் கட்டமாக 5 வார்டுகளில் சோதனை

தாம்பரம் மாநகராட்சியில் குடிநீர் சப்ளை... 24 மணி நேரமும்! முதல் கட்டமாக 5 வார்டுகளில் சோதனை

ADDED : ஆக 06, 2024 12:12 AM


Google News
Latest Tamil News
தாம்பரம், தாம்பரத்திற்கு 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த, மாநகராட்சி நிர்வாகம் திட்டம் வகுத்துள்ளது. முதல்கட்டமாக, 20 கோடி ரூபாயில், ஐந்து வார்டுகளில் இத்திட்டம் சோதனை முறையில் செயல்படுத்தப்படுகிறது.

தாம்பரம் மாநகராட்சி ஐந்து மண்டலம், 70 வார்டுகளை உடையது. மொத்தம் 2.52 லட்சம் வீடுகளில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.

மாநகராட்சிக்கு காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த பழையசீவரம், மேலச்சேரி, வில்லியம்பாக்கம் பகுதி பாலாற்று படுகை ஆழ்துளை கிணறுகளில் இருந்து, குழாய் வாயிலாக குடிநீர் எடுத்து வரப்படுகிறது.

பல்லாவரம், பம்மல், அனகாபுத்துார், சிட்லப்பாக்கம், திருநீர்மலை ஆகிய பகுதிகளுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் மெட்ரோ வாயிலாகவும் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. பீர்க்கன்காரணை உள்ளிட்ட பகுதிகளுக்கு, உள்ளூர் ஆதாரமான கிணறுகளின் தண்ணீர் சுத்திகரித்து விநியோகிக்கப்படுகிறது.

கோடை காலத்தில் குடிநீர் வழங்கும் ஏரிகள் வற்றுவதாலும், நிலத்தடி நீர் குறைவதாலும், மேற்கண்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. எனவே, மூவரசம்பட்டு, திரிசூலம் பகுதி கல்குவாரிகளில் தேங்கியுள்ள தண்ணீரை சுத்திகரித்து, பல்லாவரம் மண்டல பகுதிகளில் வினியோகிக்கப்படுகிறது.

தவிர, நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தில் இருந்து தினம் இரண்டு கோடி லிட்டர் தண்ணீர் பெறப்பட்டு, பல்லாவரம், பம்மல், அனகாபுத்துார் பகுதிகளுக்கு வழங்கப்படுகிறது.

இதன் அடுத்தகட்டமாக, தாம்பரம் மாநகராட்சி முழுதும், 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது.

முதற்கட்டமாக, 2, 3வது மண்டலங்களில் உள்ள 22, 23, 24, 25, 26 ஆகிய ஐந்து வார்டுகள், 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளன. இந்த வார்டுகளில் தங்கு தடையின்றி, நினைத்த நேரத்தில் தண்ணீர் பிடிப்பதற்காக, தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு வளர்ச்சி கழகம், 20 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்து உள்ளது.

இந்த குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவதற்காக 'டெண்டர்' கோரப்பட்டு, விரைவில் பணிகள் துவங்கும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

தேர்வு செய்யப்பட்டுள்ள ஐந்து வார்டுகளில், ஏற்கனவே 10,600 குடிநீர் இணைப்புகள் உள்ளன. புதிதாக 9,400 இணைப்புகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக, 7.4 கி.மீ., துாரத்திற்கு புதிதாக குழாய்கள் பதிக்கப்பட உள்ளன.

தற்போது, சோதனை முயற்சியாக இத்திட்டம் துவங்குகிறது. கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, படிப்படியாக அனைத்து வார்டுகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

எந்த நேரத்தில் குழாயை திறந்தாலும் தண்ணீர் வரும். இதனால், குடியிருப்புகளில் ஆழ்துளை கிணறுகள் அமைக்க வேண்டிய தேவையிருக்காது.

அதேநேரத்தில், அனைத்து வீடுகளுக்கும் தட்டுப்பாடின்றி, சீரான அளவிலே தண்ணீர் செல்லும் வகையில் குழாய்கள் அமைக்கப்படும்.

இத்திட்டத்தை செயல்படுத்தும்போது, கட்டணம் நிர்ணயம் செய்யப்படும். அதற்காக, ஒவ்வொரு வீட்டில் தண்ணீர் பயன்பாட்டு அளவை கணக்கிடும் கருவி அமைக்கப்படும். அதில் காட்டும் அளவை பொறுத்து, கட்டணம் வசூலிக்கப்படும். எவ்வளவு வசூலிக்கப்படும் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. இத்திட்டத்தால், மக்களுக்கு எப்போதும் குடிநீர் பிரச்னை இருக்காது என்பது உறுதி.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஒடிசாவில் ஆய்வு

மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டம், ஒடிசாவில் செயல்படுகிறது. அங்கு குழாயில், குறைந்த, அதிக அழுத்தம் இருந்தாலும், அனைத்து இடத்திற்கும் சீரான வேகத்தில் தண்ணீர் செல்லும் வகையில் திட்டம் உள்ளது. இத்திட்டம் குறித்து அறிய, கடந்த ஜனவரி மாதம், தாம்பரம் மாநகராட்சி பொறியாளர் குழுவினர், ஒடிசாவில் ஆய்வு நடத்தினர். தொடர்ந்து, தாம்பரத்தில் அதேபோல் செயல்படுத்துவதற்காக இப்போது திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us