/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தள்ளிப்போகும் மீன் அங்காடி திறப்பு லுாப் சாலையில் தொடரும் நெரிசல் தள்ளிப்போகும் மீன் அங்காடி திறப்பு லுாப் சாலையில் தொடரும் நெரிசல்
தள்ளிப்போகும் மீன் அங்காடி திறப்பு லுாப் சாலையில் தொடரும் நெரிசல்
தள்ளிப்போகும் மீன் அங்காடி திறப்பு லுாப் சாலையில் தொடரும் நெரிசல்
தள்ளிப்போகும் மீன் அங்காடி திறப்பு லுாப் சாலையில் தொடரும் நெரிசல்
ADDED : ஜூன் 09, 2024 01:27 AM

பட்டினப்பாக்கம்:பட்டினப்பாக்கம் லுாப் சாலையில் போடப்பட்டுள்ள மீன்கடைகளில், மீன் வாங்க வருவோர் அவர்கள் இஷ்டத்திற்கு வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து அங்குள்ள மீன் கடைகளை அகற்றுவதற்கு மாநகராட்சி உத்தரவிட்டது.
மீனவர்கள் போராட்டத்திற்கு பின், 'நவீன முறையில் மீன் அங்காடி அமைக்கப்படும்' என மாநகராட்சி அறிவித்தது. இதற்காக, 10.75 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, நவீன மீன் அங்காடியின் கட்டுமானப்பணிகள் துவங்கப்பட்டன.
நவீன மீன் அங்காடியில் சுற்றுச்சுவருடன் 366 மீன் அங்காடிகள், குடிநீர், கழிப்பிட வசதிகள், மீன்களை சுத்தம் செய்ய தனியாக இரண்டு பகுதிகள், அங்காடி வளாகத்தில் சேகரமாகும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து வெளியேற்றும் வகையில் 40 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களுக்காக 65 பைக்குகள், 110 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்த வசதி, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் மற்றும் உயர் கோபுர மின் விளக்குகளும் அமைக்கப்பட்டு உள்ளன. கூரை அமைக்கும் பணிகளும் முடிவடைந்துள்ளன.
இந்நிலையில், கடை ஒதுக்குவது தொடர்பாக, நொச்சிக்குப்பம் மீனவர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கிடையே பேச்சு நடந்தது. எந்தெந்த மீனவர்களுக்கு கடை ஒதுக்க வேண்டும் என, மீனவர்கள் சங்கம் சார்பில் கணக்கெடுக்கப்பட்டு, சென்னை மாநகராட்சியிடம் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது இதனை சரிபார்க்கும் பணியையும் மாநகராட்சி முடித்துள்ளது. அங்காடி திறப்பதற்கான தேதி அவ்வப்போது குறிக்கப்பட்டும், தள்ளிப்போகிறது.
மீனவர்கள் கூறியதாவது:
அங்காடி பணிகள் முழுவதும் முடிந்து விட்டது என அதிகாரிகள் கூறி வருகின்றனர். ஆனால், மீன் அங்காடி திறப்பு எப்போது என தெளிவாக தெரியவில்லை.
இன்னும் சில பணிகள் உள்ளதாக கூறி, அங்காடி திறப்பை தள்ளிப்போட்டு வருகின்றனர். தொடர்ந்து லுாப் சாலையில் தான் கடைகள் அமைத்து மீன் வியாபாரம் செய்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.