/உள்ளூர் செய்திகள்/சென்னை/ விதிமீறல் கட்டட புகார்கள் உள்ளாட்சி அமைப்புகள் அலட்சியம் விதிமீறல் கட்டட புகார்கள் உள்ளாட்சி அமைப்புகள் அலட்சியம்
விதிமீறல் கட்டட புகார்கள் உள்ளாட்சி அமைப்புகள் அலட்சியம்
விதிமீறல் கட்டட புகார்கள் உள்ளாட்சி அமைப்புகள் அலட்சியம்
விதிமீறல் கட்டட புகார்கள் உள்ளாட்சி அமைப்புகள் அலட்சியம்
ADDED : ஜூன் 09, 2024 01:16 AM
சென்னை:சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நகர், ஊரமைப்பு சட்டப்படி பெரிய கட்டடங்களுக்கு சி.எம்.டி.ஏ., ஒப்புதல் வழங்குகிறது.
இதில், அனுமதி வழங்கப்பட்டதன் அடிப்படையில் கட்டடங்கள் கட்டப்படுகின்றனவா என்பதை சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். ஆனால், இது தொடர்பாக பொதுமக்கள் சி.எம்.டி.ஏ.,வுக்கு புகார் அளிப்பதற்கே, பல்வேறு தடைகளை கடக்க வேண்டிய நிலை இருந்தது.
இந்நிலையில் சி.எம்.டி.ஏ., அதிகாரிகள், பல்வேறு சமூக வலைதளங்களில் பக்கங்கள் உருவாக்கி உள்ளனர். அவற்றில், பொதுமக்கள் தங்கள் கருத்துகள், புகார்களை தெரிவிக்க அனுமதிக்கப்படுகிறது.
இதனால், பொதுமக்கள் தரப்பில் இருந்து கட்டட விதிமீறல் புகார்கள் அதிகமாக குவிய துவங்கியுள்ளது.
இவ்வாறு வரும் புகார்களை, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புக்கு அனுப்பி உள்ளதாக சி.எம்.டி.ஏ., அதிகாரிகள், சமூக வலைதளங்களில் பதில் அளிக்கின்றனர். ஆனால், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள், இதை துளியும் பொருட்படுத்துவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழக வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவோர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பி.மணிசங்கர் கூறியதாவது:
விதிமீறல் கட்டடங்கள் மீதான புகார்கள் விஷயத்தில் சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் மிகுந்த அலட்சியமாக நடக்கின்றனர்.
உதாரணமாக, வேளச்சேரி - தரமணி சாலையில், பக்கவாட்டு காலியிடங்கள் துளியும் விடாமல் விதிகளை அப்பட்டமாக மீறி ஒருவர், கட்டடம் கட்டியுள்ளார்.
இதுகுறித்து, மாநகராட்சிக்கு புகார் அளித்தும் பலனில்லை என்பதால், சி.எம்.டி.ஏ.,வுக்கு புகார் அனுப்பினோம். இதுபோன்ற புகார்களை எங்களுக்கு ஏன் அனுப்புகிறீர்கள் என, சி.எம்.டி.ஏ., அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த ஒரு பெண் அதிகாரி திட்டினார்.
உள்ளாட்சிகள், சி.எம்.டி.ஏ., வழங்கிய அதிகாரத்தை பயன்படுத்தாத நிலையில் அதன் மீது யார் நடவடிக்கை எடுப்பது என்ற கேள்வி எழுகிறது. இது விஷயத்தில், சி.எம்.டி.ஏ.,வின் நிலைப்பாடு என்ன என்பது புதிராக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
சி.எம்.டி.ஏ., பரிந்துரைத்த புகார்கள் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதில் உள்ளூர் அளவில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. போதிய அதிகாரிகள், பணியாளர்கள் இல்லாததும் இதற்கு முக்கியக் காரணம் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.