Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கடற்கரை, சாலையோரம் வாகனங்கள் நிறுத்த... இலவசம்! மறுடெண்டர் வரை பார்க்கிங் கட்டணம் ரத்து

கடற்கரை, சாலையோரம் வாகனங்கள் நிறுத்த... இலவசம்! மறுடெண்டர் வரை பார்க்கிங் கட்டணம் ரத்து

கடற்கரை, சாலையோரம் வாகனங்கள் நிறுத்த... இலவசம்! மறுடெண்டர் வரை பார்க்கிங் கட்டணம் ரத்து

கடற்கரை, சாலையோரம் வாகனங்கள் நிறுத்த... இலவசம்! மறுடெண்டர் வரை பார்க்கிங் கட்டணம் ரத்து

ADDED : ஜூன் 06, 2024 11:21 PM


Google News
Latest Tamil News
'சென்னையில் புதிய ஒப்பந்தம் விடும் வரை சாலையோரங்கள், கடற்கரைகளில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு பொதுமக்கள் கட்டணம் செலுத்த வேண்டாம். அவ்வாறு கட்டணம் வசூலிப்போர் குறித்து, போலீசில் புகார் அளிக்கலாம்' என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சியில் 1.25 கோடி பேர் வசிக்கின்றனர். அதன்படி, 13 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஒரு குடும்பத்தில் சராசரியாக ஒன்று முதல் இரண்டு இருசக்கர வாகனங்கள் உள்ளன. சமீப காலமாக, நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

பெரும்பாலான வீடுகளில் வாகன நிறுத்த வசதி இல்லாத நிலையில், சென்னை மாநகராட்சியின் பேருந்து தட சாலையோரங்களில் வாகன நிறுத்த திட்டத்தை மாநகராட்சி துவக்கியது. அத்துடன், வாகன நிறுத்த கட்டணம் வசூலிக்க, தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டது.

தி.நகர், பாண்டி பஜார், அண்ணா நகர், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட முக்கிய சந்தை பகுதிகள் அடங்கிய பிரதான சாலைகளில், மாநகராட்சியின் சாலையோர வாகன நிறுத்தங்கள் உள்ளன.

இவற்றுடன் மெரினா, பெசன்ட் நகர் கடற்கரையோர சாலைகளிலும் வாகன நிறுத்தங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த வாகன நிறுத்தங்களில் இருசக்கர வாகனங்களுக்கு, ஒரு மணி நேரத்திற்கு 5 ரூபாய், நான்கு சக்கர வாகனங்களுக்கு 20 ரூபாய் என, மாநகராட்சி கட்டணம் நிர்ணயித்தது.

பாண்டி பஜார் பகுதியில் பல அடுக்கு வாகன நிறுத்த வசதி ஏற்படுத்தப்பட்டது. ஆனால், பலர் அங்கு வாகனங்களை நிறுத்தாமல், சாலையோர வாகன நிறுத்தங்களையே அதிகம் பயன்படுத்துகின்றனர்.

இதனால், அப்பகுதியில் சிறப்பு கட்டணமாக இருசக்கர வாகனங்களுக்கு 15 ரூபாய், நான்கு சக்கர வாகனங்களுக்கு 60 ரூபாய் என, ஒரு மணி நேரத்திற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது.

ஆனால், தனியார் ஒப்பந்த நிறுவனத்தினர், நிர்ணயிக்கப்பட்ட வாகன நிறுத்த கட்டண தொகையை விட, கூடுதலாக வசூலித்து வந்தனர்.

இது குறித்து நம் நாளிதழ் அவ்வப்போது செய்தி வெளியிட்டு வந்தது.

குறிப்பாக, பல்வேறு இடங்களில் கட்டண விபரம் அடங்கிய பலகைகளில், இருசக்கர வாகனத்திற்கான 15 ரூபாய் கட்டண விபரத்தை மறைத்து, அனைத்து இருசக்கர வாகனங்களுக்கும் தலா 20 ரூபாய் வசூலித்தனர்.

அதாவது, 15 ரூபாய் கூடுதலாக வசூலிக்கின்றனர். அத்துடன், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ரசீதும் தரப்படுவதில்லை. இதேபோல் கடற்கரை, வணிக சந்தை பகுதிகளில் நிறுத்தப்படும் நான்கு சக்கர வாகனங்களுக்கு, நிர்ணயிக்கப்பட்ட 20 ரூபாய்க்கு பதிலாக, 60 ரூபாய் வரை வசூலிக்கப்பட்டது.

இதனால், தனியார் நிறுவனத்திற்கு வழங்கிய ஒப்பந்தத்தை, சென்னை மாநகராட்சி ரத்து செய்தது. ஆனால், அந்நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, மாநகராட்சியின் ஒப்பந்த ரத்துக்கு தடை பெற்று, மீண்டும் அடாவடி வசூலில் ஈடுபட்டு வந்தது.

தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்த நிலையில், 'தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது செல்லும்' என, சமீபத்தில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து, மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்த போதும், மாநகராட்சி அதிகாரிகளின் அறிவுறுத்தலை கேட்காமல், தனியார் ஒப்பந்த நிறுவனத்தினர் கட்டணம் வசூல் செய்து வந்தனர். இந்த விவகாரத்தில் தற்போது மாநகராட்சிக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது.

எனவே, சாலையோர வாகன நிறுத்தத்திற்கு மறு டெண்டர் விடும் வரை மெரினா, பெசன்ட் நகர், பாண்டி பஜார் உள்ளிட்ட சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட எல்லைகளில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு, கட்டணம் செலுத்த வேண்டாம்.

மீறி, ரவுடிகளை வைத்து சிலர் மிரட்டி கட்டணம் கேட்டால், சம்பந்தப்பட்டவர்கள் குறித்து போலீசில் புகார் அளிக்கலாம். மெரினாவில் அதுபோன்று கட்டணம் வசூலித்தவர்கள் குறித்து, அண்ணா சதுக்கம் போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் சாலையோர வாகன நிறுத்தத்திற்கு கட்டணம் செலுத்த வேண்டாம் என, செய்திக்குறிப்பு விரைவில் வெளியிடப்படும். மறு டெண்டர் விட்ட பின், மீண்டும் பழைய முறைப்படி சாலையோர வாகன நிறுத்தத்திற்கு கட்டணம் செலுத்தலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us