/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சி.பி.ஐ., விசாரணை கோரி அ.தி.மு.க., போராட்டம் சி.பி.ஐ., விசாரணை கோரி அ.தி.மு.க., போராட்டம்
சி.பி.ஐ., விசாரணை கோரி அ.தி.மு.க., போராட்டம்
சி.பி.ஐ., விசாரணை கோரி அ.தி.மு.க., போராட்டம்
சி.பி.ஐ., விசாரணை கோரி அ.தி.மு.க., போராட்டம்
ADDED : ஜூன் 25, 2024 12:28 AM

சென்னை, தி.மு.க., அரசை கண்டித்தும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகளுக்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலகக்கோரியும் சென்னை மற்றும் புறநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் அ.தி.மு.க., அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, மாவட்டச் செயலர்கள் ஆதிராஜாராம், தி.நகர் சத்யா, விருகை ரவி, பாலகங்கா, ஆர்.எஸ்.ராஜேஷ், வேளச்சேரி அசோக், வெங்கடேஷ்பாபு , கே.பி.கந்தன் ஆகியோர் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர்.
ஜெயகுமார் கூறியதாவது:
தமிழகத்தில், தி.மு.க., அரசு பொறுப்பேற்றது முதல் கள்ளச்சாராய மரணங்கள், போதை பொருள் புழக்கம் சர்வ சாதாரணமாக நடக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து, 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் 150க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் பலர் கண் பார்வை இழந்துள்ளனர். அரசு மருத்துவமனையில் போதிய மருந்து, மாத்திரைகள் பற்றாக்குறையால் பலி எண்ணிக்கை அதிகமானது. ஒரு நபர் ஆணையம் வெறும் கண் துடைப்புக்காக அமைக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க ., ஆட்சியில் கள்ளச்சாராயம் பிரச்னை நடந்தபோது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது. கள்ளச்சாராய மரணங்களே இல்லாத நிலை இருந்தது.
ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது, டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி, கருப்புக்கொடி ஏந்தி குடும்பத்துடன் போராட்டம் நடத்தினர்.
இப்போது ஏன் அவர் வாயை மூடிக்கொண்டார். தேர்தல் வாக்குறுதிப்படி டாஸ்மாக் கடைகளை மூடலாமே. டாஸ்மாக் கடை மூலமாக 48,000 கோடி ரூபாய் வசூலித்ததே இந்த ஆட்சியின் சாதனை.
ஏற்கனவே விழுப்புரம், செங்கல்பட்டில் விஷ சாராயம் அருந்தி பலர் பலியான விவகாரத்தில், கள்ளச்சாராய புழக்கத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்கப்போவதாக, முதல்வர் ஸ்டாலின் வாய் சவடால் விட்டார்.
மடியில் கனமில்லை என்றால், கள்ளச்சாராய மரண வழக்கை, சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும். சி.பி.ஐ.,க்கு மாற்றினால் ஆளும் கட்சியினர் பலர் சிக்குவர்.
வெளிமாநிலங்களில் இருந்து மெத்தனால் கொண்டுவரப்பட்டுள்ளதால் சி.பி.ஐ., விசாரணை தானே நடத்தப்பட வேண்டும். இப்பிரச்னையில் நீதிமன்றம் சென்றுள்ளோம். நல்ல முடிவு வரும் என்ற நம்பிக்கை உள்ளது.
தமிழகத்தையே உலுக்கியுள்ள இந்த பிரச்னையை, சட்டசபையில் கேள்வி நேரத்தை ஒதுக்கி வைத்து விவாதிக்க அனுமதி மறுக்கின்றனர்.
சட்டசபையில் தான் மக்கள் பிரச்னையை விவாதிக்க முடியும். சட்டசபையில் தான் இத்தகைய பிரச்னை என்றால் ஆர்ப்பாட்டம் நடத்துவதிலும் காவல்துறையினர் அனுமதி மறுக்கின்றனர். கருத்து சுதந்திரம் கூட இந்த ஆட்சியில் இல்லை.
அமைச்சர் சுப்பிரமணியத்தையும், முதல்வர் ஸ்டாலினையும் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்த 62 பேரின் ஆன்மா, சும்மா விடாது. 2026ல் ஸ்டாலினை மக்கள் நிரந்தரமாக சஸ்பெண்ட் செய்து விடுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
அண்ணாசாலை ஸ்பென்சர் சிக்னல் அருகே, அ.தி.மு.க.,வின் ஐ.டி.,பிரிவு மாநிலத் துணைத் தலைவர் பிரசாத் தலைமையில், 30க்கும் மேற்பட்டோர் நேற்று சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
அவர்களை அண்ணாசாலை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய சாவு தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக்கு வலியுறுத்தி கோஷமிட்டனர். அவர்களை கைது செய்து, வி.ஆர்.பிள்ளை தெருவில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் வைத்து, மாலையில் விடுவித்தனர்.