Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஏரிகளில் கழிவுநீர் விவகாரம் காஞ்சி கமிஷனர் மீது நடவடிக்கை

ஏரிகளில் கழிவுநீர் விவகாரம் காஞ்சி கமிஷனர் மீது நடவடிக்கை

ஏரிகளில் கழிவுநீர் விவகாரம் காஞ்சி கமிஷனர் மீது நடவடிக்கை

ஏரிகளில் கழிவுநீர் விவகாரம் காஞ்சி கமிஷனர் மீது நடவடிக்கை

ADDED : ஜூலை 04, 2024 12:21 AM


Google News
சென்னை, காஞ்சிபுரம் அருகே 550 ஏக்கர் பரப்பளவில் நத்தப்பேட்டை ஏரி உள்ளது. இந்த ஏரியின் தொடர்ச்சியாக வையாவூர் ஏரி உள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் இருந்து கழிவுநீர், நத்தப்பேட்டை ஏரியில் கலப்பதால், சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயம் பாதிக்கப்படுகிறது.

இது தொடர்பாக 2020, நவ., 2ல் நாளிதழ்களில் செய்தி வெளியானது. அதன் அடிப்படையில் தாமாக முன்வந்து, பசுமை தீர்ப்பாயம் வழக்கு பதிந்து விசாரித்தது.

இதில், 'வையாவூர் - நத்தப்பேட்டை ஏரிகளில் கழிவுநீர் கலப்பதை தடுத்து, அழகுப்படுத்தி பூங்கா, நடைபாதை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும்' என, காஞ்சிபுரம் மாநகராட்சி கமிஷனர், காஞ்சிபுரம் கலெக்டர், பொதுப்பணித் துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அரசு அமைப்புகளுக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:

வையாவூர், நத்தப்பேட்டை ஏரிகளில் கழிவுநீர் கலப்பதை தடுத்து அழகுப்படுத்த, 50 கோடி ரூபாய் திட்டத்திற்கான முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளதாக, தமிழக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். ஆனால், காஞ்சிபுரம் மாநகராட்சி ஏரியில் கழிவுநீரை விடுவதாக கூறப்படுகிறது.வையாவூர் - நத்தப்பேட்டை ஏரிகளை அழகுப்படுத்தும் பொறுப்பை, நீர்வளத்துறை ஏற்றுக்கொண்டால், பணிகளை முடியும்வரை பராமரிப்பது அதன் கடமையாகும்.

அதற்கான நடவடிக்கைகளை, காஞ்சிபுரம் மாநகராட்சி எடுத்திருக்க வேண்டும்.

எனவே, காஞ்சிபுரம் மாநகராட்சி கமிஷனர் மீது, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது தொடர்பாக ஆய்வு செய்து மாசு கட்டுப்பாட்டு வாரியமும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை, வரும் ஜூலை 15ல் நடக்கும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us