/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மகள் சாவுக்கு பழி தீர்க்க திட்டமிட்ட தந்தை உட்பட 6 பேர் கும்பல் கைது மகள் சாவுக்கு பழி தீர்க்க திட்டமிட்ட தந்தை உட்பட 6 பேர் கும்பல் கைது
மகள் சாவுக்கு பழி தீர்க்க திட்டமிட்ட தந்தை உட்பட 6 பேர் கும்பல் கைது
மகள் சாவுக்கு பழி தீர்க்க திட்டமிட்ட தந்தை உட்பட 6 பேர் கும்பல் கைது
மகள் சாவுக்கு பழி தீர்க்க திட்டமிட்ட தந்தை உட்பட 6 பேர் கும்பல் கைது
ADDED : ஜூன் 12, 2024 12:21 AM
தரமணி, விழுப்புரம், வண்டிமேடு பகுதியை சேர்ந்தவர் முகமது அலி, 26. இவர், கொட்டிவாக்கத்தில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தில் ஓட்டுனராக வேலை செய்கிறார்.
நேற்று முன்தினம் இரவு, நிறுவனம் அருகில் உள்ள கடையில் சக ஊழியர்களுடன் டீ குடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, டாடா சுமோ காரில் வந்த நபர்கள், முகமது அலியை கடத்தி சென்றனர். சக ஊழியர் கிறிஸ்டோபர், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தரமணி போலீசார் விசாரணையில், முகமது அலியை கடத்தி சென்ற கார், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தது என தெரிந்தது. கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, விழுப்புரம், ஓங்கூர் சுங்கச்சாவடியில் அங்குள்ள போலீசார், காரை மடக்கினர்.
பின், முகமது அலியை மீட்டு, கடத்தலில் ஈடுபட்ட ஆறு பேரை பிடித்து, தரமணி போலீசில் ஒப்படைத்தனர்.
விழுப்புரம், கள்ளக்குறிச்சியை சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சண்முகம், 50, வைத்தி, 75, ஆறுமுகம், 43, அருள், 26, ரவிசங்கர், 24, மற்றும் ஓட்டுனர் சிலம்பரசன், 33 ஆகியோரை கைது செய்தனர்.
போலீசார் கூறியதாவது:
முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சண்முகத்தின் மகள் ரங்கீலா, 25. இவர், விழுப்புரத்தில் நர்சிங் படித்துக் கொண்டிருந்தார். அப்போது, விழுப்புரத்தை சேர்ந்த முகமது அலியுடன் காதல் ஏற்பட்டது.
ரங்கீலா படித்து முடித்தபின், பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை செய்தார். முகமது அலி, சென்னையில் வேலை செய்தார். ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்களுக்குள், மூன்று மாதமாக பிரச்னை ஏற்பட்டுள்ளது.
கடந்த மே 13ம் தேதி, பெங்களூரில் ரங்கீலா தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக வழக்கின் விசாரணைக்கு, முகமது அலியை பெங்களூரு போலீசார் அழைத்துள்ளனர். அவர், விசாரணைக்கு செல்லவில்லை என, கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த ரங்கீலாவின் தந்தை சண்முகம், முகமது அலியை கடத்தி சென்று பெங்களூரு போலீசில் ஒப்படைக்க முடிவு செய்துள்ளார். சென்னையில் இருந்து பெங்களூரு அழைத்துச் செல்லாமல், விழுப்புரம் நோக்கி ஏன் கடத்தி சென்றனர் என்பது குறித்து, தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.