/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மழை வெள்ளம் பாதிக்கும் 40 இடங்கள்...-கணக்கெடுப்பு! முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு சிறப்பு குழு மழை வெள்ளம் பாதிக்கும் 40 இடங்கள்...-கணக்கெடுப்பு! முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு சிறப்பு குழு
மழை வெள்ளம் பாதிக்கும் 40 இடங்கள்...-கணக்கெடுப்பு! முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு சிறப்பு குழு
மழை வெள்ளம் பாதிக்கும் 40 இடங்கள்...-கணக்கெடுப்பு! முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு சிறப்பு குழு
மழை வெள்ளம் பாதிக்கும் 40 இடங்கள்...-கணக்கெடுப்பு! முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு சிறப்பு குழு
ADDED : ஜூலை 08, 2024 11:40 PM

சென்னை,: சென்னையில் தாழ்வான பகுதியாக உள்ள மடிப்பாக்கம், சதுப்பு நில பகுதிகள், புளியந்தோப்பு உள்ளிட்ட 40 இடங்களில், மழை வெள்ள பாதிப்பை தடுக்க முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள, சிறப்பு குழுக்களை மாநகராட்சி ஏற்படுத்தி உள்ளது. இந்த குழுவினர், மழைக்காலத்தில் 24 மணி நேரமும் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர் என, மாநகராட்சி தெரிவித்து உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், கடந்தாண்டு வடகிழக்கு பருவமழையின்போது, பெரியளவில் வெள்ளம்சூழ்ந்து, சேதம் ஏற்பட்டது.
சென்னையின் மைய பகுதி மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகளவு மழைநீர் தேங்கியதால், ஒரு வாரத்திற்கு மேல் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இதற்கு, அதிக அளவிலான மழை பெய்தது ஒரு காரணமாக இருந்தாலும், மழைநீர் வடிகால்களில் வண்டல், பிளாஸ்டிக் கழிவுகள் ஆகியவை அடைத்து, நீர் செல்ல முடியாத சூழலை உருவாக்கியது.
பராமரிப்பில்லை
அதேபோல், கூவம், அடையாறு, பகிங்ஹாம் போன்ற பிரதான கால்வாய்கள், உட்புற கிளை கால்வாய்களை முறையாக பராமரிக்காததும் காரணமாக கூறப்பட்டது.
இதனால், பல இடங்களில் மழைநீர் செல்ல முடியாமல், சாலைகளையும், குடியிருப்புகளையும் சூழ்ந்தது. இது போன்ற அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, மாநகராட்சி துவக்கி உள்ளது.
இதுகுறித்து, மாநகராட்சி கமிஷனர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
சென்னை மாநகராட்சி, 426 சதுர கி.மீ., பரப்பளவு இருந்தாலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களின், 5,119 சதுர கி.மீ., பரப்பளவில் பெய்யக்கூடிய மழைநீர் வடிநிலப்பகுதியாக, சென்னை உள்ளது.
வடிகால் கட்டமைப்பு
குறிப்பாக, சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்படும் 33 கிளை கால்வாய்கள், நீர்வளத்துறையால் பராமரிக்கப்படும் கூவம், அடையாறு, கோவளம், பகிங்ஹாம் கால்வாய் உள்ளிட்ட பிரதான கால்வாய் வாயிலாக தான், மழைநீர் கடலில் கலக்கிறது.
இதற்காக மாநகரில்,2,600 கி.மீ.,க்கு மேல் மழைநீர் வடிகால் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய சூழலில், அனைத்து சுரங்கப்பாதையிலும் எவ்வித பிரச்னையும் இல்லை. அனைத்து இடங்களிலும் மழைநீர் உடனே வடிந்து, நான்கு வடிநிலை பகுதிகளில் வெளியேறுகிறது.
பல்வேறு சவால்கள்
தாழ்வான சில பகுதிகளில் மழை பெய்யும் நேரத்தில் நீர்த்தேக்கம் ஏற்பட்டு, நின்றவுடன் வடிந்து விடுகிறது.
அதேநேரம், கடந்த காலங்களில் நீர்நிலை போக்கு, வரத்து கால்வாய்களாக இருந்த தாழ்வான பகுதிகளான, பேரிடர் மேலாண்மையின் வாயிலாக அறிவிக்கப்பட்ட 40 இடங்கள், தாழ்வான பகுதிகளாக கண்டறியப்பட்டு உள்ளன.
அதேபோல், பல்துறையால் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்ட பணிகளாலும், மழைநீர் தேக்கப்படும்.
இதனால், மேற்கண்ட 40 இடங்களில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற, மோட்டார் பம்புகள் அமைக்கப்படும். இதற்காக, பணிக்குழு ஏற்படுத்தி, 24 மணி நேரமும் மழைநீர் தேக்கத்தை தடுக்க கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.
மேலும், பெருங்குடி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம் போன்ற சேவைத்துறைகளின் பணிகள் நடக்கும் பகுதிகள், கோயம்பேடு, மணப்பாக்கம் போன்ற பகுதிகளில் குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் மேற்கொண்டுள்ள பணிகளால், அங்கு பல்வேறு சவால்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
இதுபோன்ற பகுதிகளில் பணிக்குழு அமைத்து கண்காணிப்பதுடன், மழைநீர் வடிகால்கள், வண்டல் வடிகட்டி தொட்டிகளில் வண்டல் அடைப்பு, குழாய்களில் நீர்த்தேக்கம் ஏற்படாத வகையில், தனிக்குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்படும்.
மருத்துவ முகாம்கள்
மழைக்காலத்தில், பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படாத வகையில், நீர் மற்றும் உணவுகளால் ஏற்படும் நோய்கள், கொசுக்களால் ஏற்படக்கூடிய நோய்களை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். தேவைப்படும் இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்படும்.
புளியந்தோப்பு, சைதாப்பேட்டை பகுதிகளில் வயிற்றுப்போக்கு பாதிப்பு கண்டறியப்பட்டாலும், பெரியளவில் பாதிப்பு இல்லாமல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.