ADDED : ஜூலை 30, 2024 12:31 AM
பூந்தமல்லி, சென்னை - பூந்தமல்லி நெடுஞ்சாலையில், நசரத்பேட்டையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே சென்ற 'மாருதி பிஸ்சா' காரை மடக்கி சோதனை செய்தனர்.
அதில், அரசால் தடை செய்யப்பட்ட, 160 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் இருந்தன.
அவற்றை பறிமுதல் செய்த நசரத்பேட்டை போலீசார், கடத்தலில் ஈடுபட்ட திருநின்றவூரைச் சேர்ந்த உதயகுமார்,39, வாலாஜாபாத்தைச் சேர்ந்த மணிகண்டன்,34, ஆகிய இருவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
அதேபோல, பூந்தமல்லி சுந்தர் நகர், நரசிம்ம முல்லை தெருவிலுள்ள எஸ்.எம்.ஸ்டோர் என்ற மளிகை கடையில், தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. நேற்று, இந்த கடையில் சோதனை நடத்தினர்.
அப்போது, கடையில் குட்கா'புகையிலை பொருட்கள் பதுக்கி விற்பனை செய்வதை கண்டறிந்தனர். தொடர்ந்து, கடையில் இருந்த 100 கிலோ குட்கா புகையிலையை பறிமுதல் செய்து, கடை உரிமையாளர் கண்ணதாசன்,37, என்பவரை கைது செய்தனர். மேலும், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இந்த கடைக்கு,'சீல்' வைத்து 25,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.