ADDED : ஜூலை 12, 2024 12:19 AM
வேலு மயிலும் துணை
முருகப்பெருமானின் அடையாளமாகஇருப்பது வேல். இது 'வெற்றி'யை குறிக்கிறது. வேல் ஒரு ஆயுதம் அல்ல. ஞானசக்தியே அவரது கையில் வேலாக உள்ளது. போரில் சூரபத்மன் தன் மாய சக்தியால் மாமரமாக மாறினான். அப்போது முருகன் வேலை ஏவி இரு கூறாகப் பிளந்து ஒரு பகுதியை மயிலாகவும், ஒரு பகுதியை சேவலாகவும் மாற்றினார். மயிலை வாகனமாகவும், சேவலை கொடியிலும் சேர்த்துக் கொண்டார். இப்படி எதிரியை அழிக்காமல் ஆட்கொண்ட பெருமை முருகப்பெருமானுக்குரிய தனிச்சிறப்பு. வேலுக்குரிய மந்திரமாக 'வேலும் மயிலும் துணை' என முருகனடியார்கள் ஜெபிப்பர். ஆனால், 'வேலுமயிலும்' என ஆறெழுத்தாக உச்சரிப்பதே சரி. இந்த மந்திரத்தை ஜபித்தால் மனம் ஒருநிலைப்படும்.
பிரச்னை தீர...
முருகனைத் தவிர வேறு யாரையும் வணங்குவதில்லை என்ற கொள்கையுடன் வாழ்ந்தவர் பாம்பன் சுவாமிகள். முருகன் மீது 6,666 பாடல்கள் பாடியவர். இவர் பாடிய 'சண்முக கவசம்' பாடல்கள் நோய் தீர்க்கும் மருந்து.
அவரின் இறுதிக்காலத்தில் சென்னையில் வாழ்ந்த போது குதிரை வண்டி மோதியதில் இடதுகால் ஒடிந்தது. 73 வயதில் விபத்து நேர்ந்ததால் நடக்க வாய்ப்பில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். சண்முக கவசம் பாடி முருகனருளால் குணம் அடைந்தார். இதைக் கண்டு மருத்துவர்கள் ஆச்சரியப்பட்டனர்.
உயிரெழுத்து 12, மெய்யெழுத்து 18ஐ முதல் எழுத்தாகக் கொண்ட 30 பாடல்கள் சண்முக கவசத்தில் உள்ளன. இதை தினமும் ஆறுமுறை பாடினால் பிரச்னை தீரும்.
உப்பும் உண்மை பக்தியும்
முருக பக்தரான பாம்பன் சுவாமிகள் உடல்நலக் குறைவாக இருந்தார். அவர் உணவில் உப்பு சேர்க்க மாட்டார் என்பதை அறிந்த மருத்துவர்கள், உப்புச்சத்து குறைபாடு இருப்பதால் குணமாகும் வாய்ப்பு கிடையாது எனத்தெரிவித்தனர். படுக்கையில் கிடந்த சுவாமிகள், 'முருகா! உப்பை நம்பவில்லை. உன்னையே நம்புகிறேன்' என்று சொல்லி சண்முக கவசத்தை பாடி வந்தார். நாளடைவில் மருத்துவர்கள் வியக்கும் விதத்தில் குணமடைந்தார். 'எந்த கடவுளும் கந்தக் கடவுளுக்கு மிஞ்சாது' என்னும் சுவாமிகளின் வாக்கு உண்மையானது.
ஞான பண்டிதன்
உலகத்தை காப்பவர் சிவபெருமான், பார்வதி. இவர்களுக்கு சுட்டியாக பிறந்த குழந்தையே முருகன். சிவ - சக்தி ஜோதியில் பிறந்த இவர் மகா தேஜஸ்வி (பேரொளி மிக்கவர்). வீரம் மிக்கவர். எவராலும் வெல்ல முடியாத சூரன். தாரகன் முதலான அசுரர்களை வெல்லவே தோன்றிய மகா சக்திமான். அதனால் இவரை 'சக்திவேல்' என்பர். வீரத்தில் மட்டுமல்ல. ஞானத்திலும் அவரை வெல்ல யாரும் இல்லை. இதனால் 'ஞானபண்டிதன், ஞானஸ்கந்தன்' என அழைக்கிறோம்.
குழந்தை சுவாமி
பாவக் கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வையால் பாலாரிஷ்ட தோஷம் குழந்தைகளுக்கு வருகிறது. இதனால் ஆயுள், ஆரோக்கியம் பாதிக்கும். பெற்றோர், தாய்மாமனுக்கும் தோஷத்தை ஏற்படுத்தும். இதற்காக முருகன் கோவிலில் குழந்தையைத் தத்து கொடுக்கும் வழிபாட்டை செய்வர்.
அப்போது குழந்தைக்கு அர்ச்சனை செய்து சன்னதியை மூன்று முறை வலம் வருவர். பின்னர் கொடி மரத்தின் முன்போ அல்லது சன்னதி முன்போ குழந்தையை கிடத்தி, முருகனிடம் ஒப்படைப்பதாக எண்ணி வழிபடுவர். பின்னர் அர்ச்சகர் குழந்தையை எடுத்துக் கொடுக்க வாங்க வேண்டும். இதன் மூலம் குழந்தை சுவாமியான முருகன் அருளால் தோஷம் நீங்கும்.
கண்ணால் மலரும் பூக்கள்
முருகப்பெருமானின் வலதுபுறம் வள்ளியும்,இடது புறம் தெய்வானையும் நின்றிருப்பர்.வள்ளி கையில் தாமரை மலரும், தெய்வானை கையில் நீலோற்பலம் மலரும் இருக்கும். முருகனுக்கு வலக்கண்ணாக சூரியனும், இடக்கண்ணாக சந்திரனும் உள்ளனர். சூரியக் கண்ணால் தாமரையும், சந்திரக்கண்ணால் நீலோற்பலம் மலரையையும் பார்ப்பதால் எப்போதும் அவை மலர்ந்திருக்கும். இந்த மலரைப் போலவே முருக பக்தர்களின் வாழ்வும் மலர்ந்திருக்கும்.
விடியல் எப்போது
அதிகாலையில் கூவும் சேவல் போல, எப்போது எனக்கு விடியல் பிறக்கும் என வேண்டுவது சேவல் காவடி.
குழந்தைக்கு தாய்ப்பால் உணவு. முதுமைக்கு பசுவின் பால் உணவு. இறக்கும் முன் உயிர் துடிக்கும் போதும் பால் ஊற்றுவர். மறைந்த பின் இரண்டாம் நாளன்றும் பாலுாற்றுவர். 'பிறப்பு முதல் இறப்பு வரை என்னுடன் துணையிரு... முருகா!' என வணங்குவதே பால்காவடி.
துன்பங்களால் ஏற்பட்ட வேதனையை தணியச் செய்வது பன்னீர், சந்தனக்காவடிகள்.
'மனைவி, குழந்தைகள், உறவினர் என எத்தனையோ பேர் உதிரிப்பூக்களாக என்னுடன் உள்ளனர். அவர்களை கரை சேர்ப்பாய் முருகா...' என வேண்டுவது புஷ்பக்கா வடி.
கடலில் உள்ள மீன் போலவும், கருடனைக் கண்ட பாம்பு போலவும் தவிக்கிறேன். இதில் இருந்து மீட்டு கரை சேர்க்க வேண்டும் என்பது மச்ச, சர்ப்பக் காவடிகள்.