/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சென்னையில் வீடுகளுக்கு முறையாக எண் வழங்காததால்... குழப்பம்! சர்வே எண்ணை பயன்படுத்தி வரி செலுத்துவதால் சிக்கல் சென்னையில் வீடுகளுக்கு முறையாக எண் வழங்காததால்... குழப்பம்! சர்வே எண்ணை பயன்படுத்தி வரி செலுத்துவதால் சிக்கல்
சென்னையில் வீடுகளுக்கு முறையாக எண் வழங்காததால்... குழப்பம்! சர்வே எண்ணை பயன்படுத்தி வரி செலுத்துவதால் சிக்கல்
சென்னையில் வீடுகளுக்கு முறையாக எண் வழங்காததால்... குழப்பம்! சர்வே எண்ணை பயன்படுத்தி வரி செலுத்துவதால் சிக்கல்
சென்னையில் வீடுகளுக்கு முறையாக எண் வழங்காததால்... குழப்பம்! சர்வே எண்ணை பயன்படுத்தி வரி செலுத்துவதால் சிக்கல்
ADDED : ஜூன் 10, 2024 11:54 PM

சென்னை மாநகராட்சியில், ஒவ்வொரு தெருவில் உள்ள வீடுகளுக்கும், கடந்த 1993ம் ஆண்டு வீட்டு எண் வழங்கப்பட்டது. அதன் பின் வீடு கட்டிய பெரும்பாலான உரிமையாளர்களுக்கு வீட்டு எண் வழங்காததால், சொத்து சர்வே எண்ணை பயன்படுத்தி சொத்து வரி, குடிநீர், கழிவுநீர் வரி செலுத்துகின்றனர். குறிப்பாக, விரிவாக்க மண்டலங்களில், 70 சதவீதம் பேர், சர்வே எண்ணை பயன்படுத்துவதால், பல்வேறு சிக்கல்களை சந்திக்கின்றனர். அனைத்து சேவைகளும் 'ஆன்லைன்' வழியாக நடப்பதால், தெரு வாரியாக வீட்டு எண் வழங்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னை மாநகராட்சி, 174 சதுர கி.மீ., பரப்பில், 155 வார்டுகளை கொண்ட, 10 மண்டலமாக செயல்பட்டது.
நாட்டின் பெருநகர பட்டியலில் சென்னையை சேர்க்கும் வகையில், புறநகரில் உள்ள, 9 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள் மற்றும் 25 ஊராட்சிகளை ஒருங்கிணைத்து, 424 சதுர கி.மீ., பரப்பில், 2011ம் ஆண்டு, மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டது.
இதன்படி, 200 வார்டுகள், 15 மண்டலங்கள் கொண்ட மாநகராட்சியாக செயல்பட்டு வருகிறது.
அதன் பின் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில், மாநகராட்சி விரிவாக்க பகுதியில் உள்ள வருவாய்த்துறை எல்லைகள், சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டன.
சென்னை மாநகராட்சி எல்லையில், 22 சட்டசபை தொகுதிகள் அடிப்படையில், 23 மண்டலங்கள் உருவாக்க திட்டமிடப்பட்டது. ஒரே தொகுதியில் இரு மண்டல தலைவர்கள், நிர்வாக குளறுபடி, நிதி ஒதுக்கீடு போன்ற காரணத்தால், மண்டலங்கள் பிரிப்பது கிடப்பில் போடப்பட்டது.
சென்னை மாநகராட்சி எல்லையை மீண்டும் விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதன்படி திருப்போரூர், சோழிங்கநல்லுார், ஆலந்துார், மதுரவாயல், ஸ்ரீபெரும்புதுார், பூந்தமல்லி, மாதவரம், பொன்னேரி ஆகிய சட்டசபை தொகுதியில் உள்ள 50 ஊராட்சிகளை, சென்னை மாநகராட்சியுடன் சேர்க்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இது ஒருபுறமிருக்க, சென்னையில் உள்ள பல வீடுகளுக்கு முறையான வீட்டு எண் இல்லாததால், பெரும்பாலானோர் நிலத்தின் சர்வே எண்ணை வைத்து சொத்து வரி, குடிநீர், கழிவுநீர் வரி செலுத்தி வருகின்றனர்.
மாநகராட்சி சார்பில், 1993ம் ஆண்டு, தெருக்களுக்கு வீட்டு எண் வரையறுக்கப்பட்டது. ஒரு தெருவில், ஒரு பக்கத்திற்கு 1,3,5... என்ற எண்களும், எதிர் பக்கத்திற்கு, 2,4,6... எண்கள் அடிப்படையிலும் வீட்டு எண் வரையறுத்து வழங்கப்பட்டது.
இடையில் ஒரு நபர் சொத்தை இரண்டாக பிரித்தால், வீட்டு எண்ணுடன் 'எ, பி' என பிரிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த 30 ஆண்டுகளில், கட்டடங்களால் சென்னை அபார வளர்ச்சி அடைந்துள்ளது. சென்னையில், 42,000 தெருக்கள் உள்ளன.
மொத்தம், 13.48 லட்சம் பேர் சொத்து வரி செலுத்துகின்றனர். இதில், சரிபாதி பேருக்கு வீட்டு எண் வழங்கப்படவில்லை. சர்வே எண்களையே பயன்படுத்துகின்றனர்.
குறிப்பாக திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்துார், வளசரவாக்கம், ஆலந்துார், பெருங்குடி, சோழிங்கநல்லுார் மண்டலங்களில், 70 சதவீதம் பேர், சர்வே எண்ணை வைத்து வீட்டு வரி செலுத்துகின்றனர்.
இதனால், ஆவணங்கள் பதிவில் குழப்பம், ஒரே சர்வே எண்ணை ஒன்றுக்கும் மேற்பட்ட வீட்டு உரிமையாளர்கள் பயன்படுத்துவது, சரியாக முகவரி நிர்ணயிக்க முடியாமை போன்ற சிக்கல்கள் ஏற்படுகின்றன.
இதனால், 1993ம் ஆண்டு செய்த பணியை போல், ஒவ்வொரு தெருவில் உள்ள வீடுகளுக்கு, வீட்டு எண் நிர்ணயிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
ஒரு ஏக்கர் இடத்தை மூன்று, நான்காக பிரிக்கும் போது, சர்வே எண்களை பயன்படுத்தி வீட்டு வரி செலுத்தி வருகின்றனர். இது பல ஆண்டுகளாக நடக்கிறது. சில பகுதிகளில், தெருவில் சிலருக்கு வீட்டு எண்ணும், பலருக்கு சர்வே எண்ணும் உள்ளது.
இதனால், பல்வேறு குழப்பங்கள் ஏற்படுகின்றன. மனைகள் விற்பனை, அடுக்குமாடி குடியிருப்பில் பெரிய அளவில் பிரச்னை இல்லை. அனைத்து சேவைகளும் 'ஆன்லைன்' வழியில் உள்ளதால், ஒவ்வொரு தெருவுக்கும் சீரான வீட்டு எண்கள் இருப்பது அவசியம். இதற்கு மாநகராட்சி கமிஷனர், மேயர், கவுன்சிலர்கள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- -நமது நிருபர் - -