ADDED : ஜூன் 30, 2025 11:33 PM

வில்லிவாக்கம், வில்லிவாக்கத்தில், சாலை விரிவாக்க பணி தளத்தில், மண் சரிந்து தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கொளத்துார் - பாடி மேம்பாலம் நோக்கி செல்லும் 200 அடி சாலையில், வில்லிவாக்கம், தாதங்குப்பம் பகுதி உள்ளது. இச்சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடக்கின்றன.
துாண்கள் அமைப்பத்தாக, ஒப்பந்த ஊழியர்கள் நேற்று முற்பகல் 11:50 மணியளவில், பொக்லைன் இயந்திரத்தால் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, ஒப்பந்த ஊழியரான உளுந்துார்பேட்டையைச் சேர்ந்த சுரேஷ், 27, என்பவர் 15 அடி பள்ளத்தில் இறங்கி, மண் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.
அவர் மீது, பள்ளத்தின் மேல் பகுதியில் குவித்து வைக்கப்பட்டிருந்த மண் சரிந்துவிழுந்தது. மண்ணுக்குள் முழுதுமாக புதைந்த சுரேஷை, சக தொழிலாளர்கள் 30 நிமிடங்கள் போராடி, பொக்லைன் இயந்திரத்தால் மீட்டனர்.
சுயநினைவின்றி இருந்த சுரேஷை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சுரேஷ் உயிரிழந்தாக தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த வில்லிவாக்கம் போலீசார், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.