Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மானாமதி மின்வாரிய அலுவலகத்தில் போதிய ஊழியர்களின்றி பணிகள் பாதிப்பு

மானாமதி மின்வாரிய அலுவலகத்தில் போதிய ஊழியர்களின்றி பணிகள் பாதிப்பு

மானாமதி மின்வாரிய அலுவலகத்தில் போதிய ஊழியர்களின்றி பணிகள் பாதிப்பு

மானாமதி மின்வாரிய அலுவலகத்தில் போதிய ஊழியர்களின்றி பணிகள் பாதிப்பு

ADDED : ஜூன் 12, 2025 11:02 PM


Google News
திருப்போரூர்:மானாமதி மின்வாரிய அலுவலகத்தில், போதிய ஊழியர்கள் இல்லாததால், அடிக்கடி ஏற்படும் மின் பழுது உள்ளிட்ட பிரச்னைகளை சரிசெய்வதில் தாமதம் ஏற்பட்டு, பகுதிவாசிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய மானாமதி ஊராட்சியில், மின்வாரிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் மானாமதி, அருங்குன்றம், குன்னப்பட்டு, ஆமூர், சிறுதாவூர் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

மேற்கண்ட கிராமங்களுக்கு மின்சாரம் வழங்குதல், பராமரித்தல், மின் பழுதுகளை சரிசெய்தல் போன்ற பல்வேறு பணிகளை, மானாமதி மின்வாரியம் மேற்கொண்டு வருகிறது.

விவசாயம் பாதிப்பு


ஆனால், இந்த மின்வாரிய அலுவலகத்தில் போதிய ஊழியர்கள் இல்லாததால், அடிக்கடி ஏற்படும் மின் பழுது சிக்கல்களை குறித்த நேரத்தில் சரி செய்ய முடியவில்லை. இதனால், மின் வினியோகமின்றி பகுதிவாசிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து பகுதிவாசிகள் கூறியதாவது:

கிராமங்களில் வசிக்கும் மக்கள் அனைவரும் விவசாயத்தையே முக்கிய தொழிலாக செய்து வருகின்றனர். அடிக்கடி ஏற்படும் மின்தடையால், பயிர்களுக்கு போதுமான நீர் பாய்ச்ச முடியாமல், விவசாயம் பாதிக்கப்படுகிறது.

மானாமதி மின்வாரிய பிரிவில், போதுமான ஊழியர்கள் இல்லை. 10க்கும் மேற்பட்டோர் இருக்க வேண்டிய இடத்தில், ஆறு பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். 20 கி.மீ., சுற்றுவட்டார கிராமங்களில் ஏற்படும் மின் பிரச்னைகளை, இவர்கள் தான் கண்காணிக்க வேண்டும்.

எனவே, தற்போது உள்ள பணியாளர்களை வைத்து, அடிக்கடி ஏற்படும் மின் பழுதுகளை குறித்த நேரத்தில் சரி செய்ய முடியவில்லை.

கால்நடைகள் இறப்பு


பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதிலும் சிக்கல் ஏற்படுகிறது. பல நேரங்களில் மின்மாற்றிகள் பழுதாவது, மின்கம்பிகள் ஆங்காங்கே அறுந்து விழுந்து கால்நடைகள் இறப்பது போன்ற பிரச்னைகள் தொடர் கதையாக உள்ளன.

இனி மழைக்காலம் என்பதால், அடிக்கடி மின் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மானாமதி மின்பகிர்மான பிரிவிற்கு போதுமான பணியாளர்களை நியமித்து, சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு சரியான முறையில் மின்சாரம் வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us