/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ வண்டலுாரில் மின் விளக்குகளை மறைக்கும் மரக்கிளைகளை அகற்ற வலியுறுத்தல் வண்டலுாரில் மின் விளக்குகளை மறைக்கும் மரக்கிளைகளை அகற்ற வலியுறுத்தல்
வண்டலுாரில் மின் விளக்குகளை மறைக்கும் மரக்கிளைகளை அகற்ற வலியுறுத்தல்
வண்டலுாரில் மின் விளக்குகளை மறைக்கும் மரக்கிளைகளை அகற்ற வலியுறுத்தல்
வண்டலுாரில் மின் விளக்குகளை மறைக்கும் மரக்கிளைகளை அகற்ற வலியுறுத்தல்
ADDED : ஜூன் 19, 2025 01:19 AM

வண்டலுார்:வண்டலுார் ரயில் நிலையம் செல்லும் வழியில், 10க்கும் மேற்பட்ட மரங்களின் கிளைகள் மின் கம்பங்களை மறைத்துள்ளதால் இருள் சூழ்ந்துள்ளது. எனவே, கம்பங்களை மறைத்து நிற்கும் மரக்கிளைகளை அகற்ற, ரயில் பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாம்பரம் -- செங்கல்பட்டு புறநகர் ரயில் மார்க்கத்தில், வண்டலுார் ரயில் நிலையம் முக்கிய சந்திப்பாக உள்ளது. அதிகாலை 4.30 மணி முதல் நள்ளிரவு 12.30 மணி வரையில், புறநகர் ரயில் இயக்கப்படுகிறது.
வண்டலுார், மண்ணிவாக்கம் மற்றும் சுற்றுப் பகுதி மக்கள், தொழில், வேலை, பள்ளி, கல்லுாரி, மருத்துவமனை மற்றும் இதர தேவைக்கு, இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்தி, செங்கல்பட்டு, சென்னை உட்பட பல இடங்களுக்கு பயணிக்கின்றனர்.
வண்டலுார் - வாலாஜாபாத் மேம்பாலத்தின் கீழ் பகுதியிலும், அண்ணா தெரு பிரதான சாலை வழியாகவும் இந்த ரயில் நிலையத்திற்கு செல்ல, 20 அடி அகலம், 120 மீ., துாரமுள்ள இரண்டு பாதைகள் உள்ளன.
இந்த இரண்டு பாதைகளிலும், மின் கம்பங்களை மறைத்து, மரங்கள், செடிகள் அடர்த்தியாக வளர்ந்து நிற்பதால், மின் விளக்குகளின் வெளிச்சம் தரை நோக்கி பாய்வதில்லை. தவிர, பாதையின் அகலமும், குறைந்து, வாகனங்கள் சென்று வர இடையூறு ஏற்படுகிறது.
போதிய வெளிச்சம் இல்லாததால், இரவு நேரத்தில், ரயில் நிலையம் வருவோர் மற்றும் பணி முடித்து வீடு திரும்புவோர் அச்சத்துடன் இந்த வழித்தடத்தைக் கடக்கின்றனர்.
எனவே, ரயில் நிலையம் செல்லும் இரு பாதையிலும், மின் கம்பங்களை மறைத்து நிற்கும் மரக் கிளைகளை அப்புறப்படுத்தி, எரியாத மின்விளக்குகளை சரி செய்ய, சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, ரயில் பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.