Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/செங்கை கடற்கரை பகுதிகளில் தீர்த்தவாரி உற்சவம் விமரிசை

செங்கை கடற்கரை பகுதிகளில் தீர்த்தவாரி உற்சவம் விமரிசை

செங்கை கடற்கரை பகுதிகளில் தீர்த்தவாரி உற்சவம் விமரிசை

செங்கை கடற்கரை பகுதிகளில் தீர்த்தவாரி உற்சவம் விமரிசை

ADDED : பிப் 24, 2024 11:00 PM


Google News
Latest Tamil News
மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில், மாசி மகத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு கோவர்தனகிரி திருக்கோல ஸ்தலசயன பெருமாள், தேவியருடன், புஷ்கரணி திருக்குளத்தில் தெப்பத்தில் எழுந்தருளி, தெப்போற்சவம் கண்டார். அதன்பின் வீதியுலா சென்றார்.

அன்னதானம்


நேற்று காலை உற்சவர், கருட வாகனத்தில் கடற்கரை சென்றார். பூதத்தாழ்வார், சக்கரத்தாழ்வார், ஆதிவராக பெருமாள் ஆகியோரும் சென்றனர். கடற்கரையில் திருமஞ்சனம் செய்து, சுவாமி அம்சமான சக்கரத்தாழ்வார், கடலில் புனித நீராடி, தீர்த்தவாரி உற்சவம் கண்டார்.

மீனவர்கள் சுவாமிக்கு மண்டகப்படி சேவையாற்றி, பிற்பகல் கோவிலை அடைந்தார். பக்தர்களுக்கு, அறநிலையத் துறையின் ஆளவந்தார் அறக்கட்டளை சார்பில், காலை, மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.

திருவிடந்தை


மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவில் உற்சவத்தில், சக்கரத்தாழ்வார் கடற்கரை சென்று நீராடினார். கோவிலை அடைந்த நித்ய கல்யாண பெருமாளுக்கு திருமஞ்சன வழிபாடு நடந்தது. இரவு, நித்ய கல்யாண பெருமாள், தேவியருடன் வீதியுலா சென்றார்.

சதுரங்கப்பட்டினம்


கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினத்தில், மலைமண்டல பெருமாள் எனப்படும் வரதராஜ பெருமாள், ஆதிகேசவ பெருமாள், டச்சுக்கோட்டை பகுதி கடற்கரையை அடைந்தனர். வரதராஜ பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து, சக்கரத்தாழ்வார் கடலில் நீராடினார்.

திருக்கழுக்குன்றம்


திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர், திரிபுரசுந்தரி அம்மனுடன் கோவிலிலிருந்து புறப்பட்டு, வீதியுலாவாக சென்று சங்குதீர்த்த குளத்தை அடைந்தார். பின், மாலை சுவாமி வீதியுலா சென்றார்.

செய்யூர்


செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கடப்பாக்கம் கடற்கரைக்கு, கடப்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள கோவில்களில் இருந்து சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் கடற்கரைக்கு வந்து, நீராடி தீர்த்தவாரி உற்சவம் விமரிசையாக நடந்தது.

இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, கடற்கரையில் நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us