Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/மூடுகால்வாய் அமைப்பதில் ரயில்வே நிர்வாகம் மெத்தனம்! 3 ஆண்டாக கிடப்பில் உள்ள கொளவாய் ஏரி பணி

மூடுகால்வாய் அமைப்பதில் ரயில்வே நிர்வாகம் மெத்தனம்! 3 ஆண்டாக கிடப்பில் உள்ள கொளவாய் ஏரி பணி

மூடுகால்வாய் அமைப்பதில் ரயில்வே நிர்வாகம் மெத்தனம்! 3 ஆண்டாக கிடப்பில் உள்ள கொளவாய் ஏரி பணி

மூடுகால்வாய் அமைப்பதில் ரயில்வே நிர்வாகம் மெத்தனம்! 3 ஆண்டாக கிடப்பில் உள்ள கொளவாய் ஏரி பணி

ADDED : ஜூலை 07, 2024 11:16 PM


Google News
Latest Tamil News
செங்கல்பட்டு : செங்கல்பட்டு கொளவாய் ஏரி சீரமைப்பு பணி, மூன்று ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஏரியில் இருந்து தண்ணீரை ரயில்வே மேம்பாலம் வழியாக வெளியேற்ற, மூடு கால்வாய் அமைப்பதற்காக, 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, ரயில்வே நிர்வாகம் கால்வாய் பணியை துவக்காமல் மெத்தனமாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

செங்கல்பட்டு கொளவாய் ஏரி, பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோடைகாலத்திலும் தண்ணீர் வற்றாமல், நிரம்பிய நிலையில் கடல்போல் காணப்படும் இந்த ஏரி, 2,210 ஏக்கர் பரப்பு உடையது. ஆழம் 15 அடி; ஐந்து மதகுகள் உள்ளன.

குண்டூர் ஏரி மற்றும் சுற்றுப்புற ஏரிகளில் இருந்துவெளியேறும் உபரி நீர், இங்கு வந்தடையும் வகையில் நீர்வரத்து கால்வாய்கள் உள்ளன.

ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர், நீஞ்சல்மடுவு கால்வாய் வழியாக, பொன்விளைந்தகளத்துார் ஏரியை சென்றடையும்.

படகு குழாம்


செங்கல்பட்டு நகராட்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், ஏரியில் விடப்படுகிறது. இதனால், ஏரி நீரை குடிநீருக்கு பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது.

கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் துார் வாரப்பட்டது. 1998ல், சுற்றுலா வளர்ச்சி கழகம், இங்கு படகு குழாம் அமைத்தது.

அதன்பின், இரண்டு ஆண்டுகளில் ஏரி நீர் மேலும் மாசடைந்ததால், படகு குழாம் மூடப்பட்டது. ஏரியின் ஓரத்திலும், கால்வாய்களிலும் ஆக்கிரமிப்புகள் பெருகியுள்ளன. அதனால், ஏரியின் கொள்ளளவு குறைந்தும், மாசடைந்தும் உள்ளது.

இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏரியை துார்வாரி சீரமைத்து சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள், அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இதைத் தொடர்ந்து, துார்வாரி ஆழப்படுத்தவும், படகு குழாம் மற்றும் பூங்காக்கள் அடங்கிய பொழுதுபோக்கு அம்சங்களுடன் ஏரியை புனரமைக்கவும், 2020ம் ஆண்டு டிச., 16ம் தேதி, 60 கோடி ரூபாய் ஒதுக்கி, நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.

இத்திட்டத்தில், ஏரியை ஆழப்படுத்தி புறக்கரை அமைத்து, புறக்கரை நிலங்களை உயர்த்தி, 476 மி.க., அடி கொள்ளளவிலிருந்து 650 மி.க., அடி உயர்த்துதல். ஏரியின் கரையை பலப்படுத்துதல், அணுகுசாலை மற்றும் நடை மேம்பாலம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டன.

வலியுறுத்தல்


அதோடு, ஏரியில் துார் வாரிய மண்ணை கொண்டு மூன்று திட்டுக்கள், தீவுகள் அமைத்து, பூங்கா, சுற்றுச்சூழல் மேம்பட்டு பணிகள் மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது.

சுற்றுலா பயன்பாடு கட்டடங்கள், வாகன நிறுத்த இடம் உள்ளிட்ட பணிகள் செயல்படுத்தப்படுகின்றன. இப்பணிகளுக்கு, 2021ம் ஆண்டு செப்., மாதம் டெண்டர் விடப்பட்டு, பணிகள் துவங்கின.

இதற்கிடையில், ஏரியின் கலங்கள் பகுதியில், தண்ணீரை வெளியேற்றும் பகுதியில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. இதனால், தண்ணீரை வெளியேற்ற முடியாத சூழல் ஏற்பட்டது.

அதன்பின், ஏரியில் இருந்து தண்ணீரை வெளியேற்ற, கடந்த ஆண்டு, ரயில்வே நிர்வாகத்திற்கு பாலத்தின் வழியாக மூடு கால்வாய் அமைப்பதற்கு, 2 கோடி ரூபாய் நிதியை, பொதுப்பணித் துறையினர் வழங்கினர்.

ஆனால், மூடுகால்வாய் அமைக்கும் பணி துவக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

தொடர்ந்து, ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில், மூடு கால்வாய் கட்ட, ரயில்வே அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள், சில தினங்களுக்கு முன் ஆய்வு செய்தனர்.எனவே, ஏரியை சீரமைக்கும் பணியை விரைந்து துவக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

கொளவாய் ஏரியில் சீரமைக்கும் பணி மேற்கொள்ள, ஏரியில் இருந்து முழுமையாக தண்ணீரை வெளியேற்ற வேண்டும். மூடு கால்வாய் அமைக்கும் பணியை, ரயில்வே நிர்வாகம் செய்தாக வேண்டும். ஆனால், நிதி ஒதுக்கப்பட்டும், மூடுகால்வாய் அமைக்கும் பணி துவக்கப்படாமல் உள்ளது. மூடுகால்வாய் அமைக்கப்பட்டதும், மற்ற சீரமைப்பு பணிகள் அனைத்தும், முழு வீச்சில் நடைபெறும்.

- பொதுப்பணித்துறை அதிகாரிகள்,

செங்கல்பட்டு.

கொளவாய் ஏரி சீரமைப்பு பணிகள், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் துவங்கியது. ஆனால், அது அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. மழைக்காலத்திற்குள் ஏரி பணியை தீவிரப்படுத்த, மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கே.வாசுதேவன்,

சமூக ஆர்வலர், செங்கல்பட்டு.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us