Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ தண்டவாளத்தை அபாயமாக கடக்கும் மாணவர்கள் வண்டலுார் அருகே நடை மேம்பாலம் அவசியம்

தண்டவாளத்தை அபாயமாக கடக்கும் மாணவர்கள் வண்டலுார் அருகே நடை மேம்பாலம் அவசியம்

தண்டவாளத்தை அபாயமாக கடக்கும் மாணவர்கள் வண்டலுார் அருகே நடை மேம்பாலம் அவசியம்

தண்டவாளத்தை அபாயமாக கடக்கும் மாணவர்கள் வண்டலுார் அருகே நடை மேம்பாலம் அவசியம்

ADDED : ஜூலை 04, 2025 01:52 AM


Google News
Latest Tamil News
வண்டலுார்,:வண்டலுார் -- ஓட்டேரி பகுதியில், அரசு பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் ரயில்வே தண்டவாளத்தைக் கடந்து செல்வதால், மாணவர்கள் பாதுகாப்பு கருதி, அப்பகுதியில் உயர்மட்ட நடை மேம்பாலம் அமைக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வண்டலுார் ஊராட்சி, ஓட்டேரி பகுதியில், ரயில் இருப்பு பாதை அருகே, 1987 செப்., 27ம் தேதி, அரசு தொடக்கப்பள்ளி துவக்கப்பட்டது.

2011ல் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட இப்பள்ளியில், 324 மாணவியர், 396 மாணவர்கள் என, 720 பேர் படித்து வருகின்றனர்.

இதில், 30 சதவீத மாணவ- மாணவியர், சுற்றுப்பகுதி கிராமங்களிலிருந்து பேருந்து மூலமாக வண்டலுார் உயிரியல் பூங்கா பேருந்து நிறுத்தம் வந்து, அங்கிருந்து 150 மீட்டர் துாரம் நடந்து பள்ளியை வந்தடைகின்றனர்.

இந்த 150 மீ., இடைவெளியில் ரயில் இருப்பு பாதை உள்ளதால், காலை பள்ளி செல்லும் போதும், மாலை பள்ளி முடிந்து திரும்பும் போதும், அச்சத்துடன் ரயில் இருப்பு பாதையை மாணவர்கள் கடந்து வரும் நிலை உள்ளது.

தவிர, இவ்வழியாகவே பள்ளி ஆசிரியர்களும், பகுதிவாசிகளும் சென்று வருவதால், ரயில் இருப்பு பாதையை பாதுகாப்புடன் கடக்க, உயர்மட்ட நடை மேம்பாலம் அமைக்க வேண்டும் என, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

தமிழ் மற்றும் ஆங்கில வழிக் கல்வியுடன், விளையாட்டுகளிலும் சிறந்து விளங்குவதால் பெருங்களத்துார், ஊரப்பாக்கம் உள்ளிட்ட சுற்று பகுதிகளில் வசிப்போரும், தங்கள் குழந்தைகளை ஓட்டேரி மேல்நிலைப் பள்ளியில் சேர்த்துள்ளனர்.

பள்ளிக்கு வரும் மாணவ- மாணவியர், ரயில் இருப்பு பாதையை ஆபத்தான நிலையில் கடப்பதால், விபத்து அபாயம் உள்ளது.

சென்னை கடற்கரை -- செங்கல்பட்டு இடையிலான புறநகர் ரயில்கள் மட்டுமின்றி, தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில்களும் இவ்வழியாகவே சென்று வருகின்றன.

தவிர, 'பீக் ஹவர்ஸ்' நேரங்களில் அதிக எண்ணிக்கையில் புறநகர் ரயில்கள் செல்கின்றன. அதே 'பீக் ஹவர்ஸ்' நேரத்தில் தான், மாணவர்களும் பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.

மாணவ, மாணவியர், ஆசிரியர், பகுதிவாசிகளின் முக்கிய வழித்தடமாக உள்ள இந்த இருப்பு பாதை, ஆபத்து நிறைந்ததாக உள்ளது.

எனவே, அனைவரின் பாதுகாப்பு கருதி, ஓட்டேரி அரசு மேல்நிலைப் பள்ளி முதல், ஜி.எஸ்.டி., சாலை வரை, 150 மீ., துாரத்திற்கு, மின்துாக்கி வசதியுடன் உயர்மட்ட நடை மேம்பாலம் அமைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

'கேட் கீப்பர்' அவசியம்


சென்னை -- நாகர்கோவில் இடையேயான, 'வந்தே பாரத்' அதிவிரைவு ரயில், இந்த வழியாகவே இயக்கப்படுகிறது.ரயில் தண்டவாளத்தை மாணவர்கள், பகுதிவாசிகள் கடந்து செல்லும் போது, விபத்து அபாயம் உள்ளதால், அவர்கள் பாதுகாப்புடன் செல்லவும், ரயில் வருவதை எச்சரிக்கவும், முதற்கட்டமாக ரயில்வே நிர்வாகம் சார்பில், 'கேட் கீப்பர்' பணியாளர் நியமிக்கப்பட வேண்டும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us