Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/சிங்கபெருமாள் கோவில் மேம்பாலம் மே மாதத்தில் முடிக்க திட்டம்

சிங்கபெருமாள் கோவில் மேம்பாலம் மே மாதத்தில் முடிக்க திட்டம்

சிங்கபெருமாள் கோவில் மேம்பாலம் மே மாதத்தில் முடிக்க திட்டம்

சிங்கபெருமாள் கோவில் மேம்பாலம் மே மாதத்தில் முடிக்க திட்டம்

ADDED : ஜன 02, 2024 10:56 PM


Google News
Latest Tamil News
சிங்கபெருமாள் கோவில்:சிங்கபெருமாள் கோவில்- - ஸ்ரீபெரும்புதுார் சாலையில் உள்ள ரயில்வே கேட் பகுதியில், தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைக்கு செல்லும் கனரக வாகனங்கள், தொழிலாளர்கள் மற்றும் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் என, பலர் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

வாகன போக்குவரத்து அதிகரிப்பு காரணமாகவும், நீண்ட நேரம் ரயில்வே கேட் மூடப்பட்டு உள்ளதாலும், இந்த பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, கடந்த தி.மு.க., ஆட்சியில் மேம்பாலம் கட்டும் பணி துவங்கியது. 2011ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து, பல்வேறு காரணங்களுக்காக, 10 ஆண்டுகளுக்கு மேலாக பால பணிகள் கிடப்பில் போடப்பட்டன.

மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், 2021 நவம்பரில் நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலு தலைமையில், பாலம் கட்ட பூமி பூஜை போடப்பட்டது.

தொடர்ந்து, 138.27 கோடி ரூபாயில் பணிகள் துவங்கின.பணிகள் துவங்கிய 30 மாதங்களுக்குள் மொத்த பணிகளும் முடிக்க வேண்டும் என, கால நிர்ணயம் செய்யப்பட்டு பணிகள் துவக்கப்பட்டன.

துவக்கத்தில் வேகமாக நடைபெற்று வந்த பணிகள், தற்போது மந்தகதியில் நடப்பதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறியதாவது:

சிங்கபெருமாள் கோவில் ரயில்வே மேம்பால பணிகள் துவக்கப்பட்டதில் இருந்தே பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. தற்போது, 60 சதவீத பணிகள் முடிந்துள்ளன.

மேலும், பால பணிகள் நடைபெறும் ஜி.எஸ்.டி., சாலையில், செங்கல்பட்டு மார்க்கத்தில் பூமிக்கு அடியில் பாலாற்று குடிநீர் திட்ட குழாய்கள் செல்கின்றன.

இவற்றை மாற்றியமைக்கும் பணிகள் துவக்க நிலையில் உள்ளது. பொங்கல் தொடர் விடுமுறைக்கு பின், பணிகள் மேலும் வேகமாக நடைபெறும். இந்த பணிகள் முடிய மே மாதம் வரை கால அவகாசம் உள்ளது.

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, முதலில் பெருங்களத்துார் மேம்பாலத்தின் ஒரு பக்கம் திறந்ததை போல, இந்த பாலமும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மாணவர்கள் அவதி


சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் சாலையில், காலை 7:00 மணி முதல் 10:00 மணி வரையும், மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரையும் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. தொடர்ந்து, 30 நிமிடங்கள் வரை ரயில்வே கேட் மூடப்படுவதால், இருபுறமும் சாலையில் 1 கி.மீ., துாரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இந்த நேரங்களில் அடிக்கடி ஆம்புலன்ஸ் வாகனங்கள் நெரிசலில் சிக்குகின்றன.கடந்த நவம்பர் மாதம் திருக்கச்சூர் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு, மருத்துவமனை அழைத்து சென்ற போது ரயில்வே கேட் மூடப்பட்டு இருந்ததால், அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போக்குவரத்து நெரிசல் காரணமாக வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லுாரி மாணவ -- மாணவியர் குறித்த நேரத்தில் செல்ல முடிவதில்லை. தினமும் வாகன ஓட்டிகளிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுகிறது. ரயில்வே கேட் திறக்கும் வரை, 30 நிமிடங்கள்வாகனங்கள் காத்திருக்கும் நிலை இருந்து வருகிறது. மேம்பால பணிகள் முடிந்து திறக்கப்பட்டால் பொது மக்களுக்கு வசதியாக இருக்கும்.- எஸ்.ஸ்ரீகாந்த், 25,சிங்கபெருமாள் கோவில்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us