Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ வண்டலுாரில் பஸ் நிறுத்தம் ஆக்கிரமிப்பு தனியார் வாகனங்கள் அட்டூழியம்

வண்டலுாரில் பஸ் நிறுத்தம் ஆக்கிரமிப்பு தனியார் வாகனங்கள் அட்டூழியம்

வண்டலுாரில் பஸ் நிறுத்தம் ஆக்கிரமிப்பு தனியார் வாகனங்கள் அட்டூழியம்

வண்டலுாரில் பஸ் நிறுத்தம் ஆக்கிரமிப்பு தனியார் வாகனங்கள் அட்டூழியம்

ADDED : மார் 25, 2025 07:42 AM


Google News
Latest Tamil News
வண்டலுார், : வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தை, தங்களுக்கான 'பார்க்கிங்' பகுதியாக தனியார் வாகனங்கள் ஆக்கிரமித்துள்ளதால், பயணியர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தாம்பரம் அடுத்த சானடோரியம் பேருந்து நிலையத்திலிருந்து வண்டலுார் வழியாக வாலாஜாபாத், காஞ்சிபுரம், வேலுார், ஆரணி, சித்தூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நேரடி பேருந்து சேவைகள் உள்ளன.

வண்டலுார் பகுதிவாசிகள், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொழில், பணி, கல்லுாரி செல்ல இந்த பேருந்துகளையே நம்பி உள்ளனர்.

இதற்காக, வண்டலுார் மேம்பாலத்தின் முடிவில், தாங்கல் குளம் ஓரமாக, எதிரெதிரே இரண்டு பேருந்து நிறுத்தங்கள் உள்ளன.

ஆனால், இந்த இரண்டு பேருந்து நிறுத்தங்களைச் சுற்றியும் கார், லாரி, வேன் உள்ளிட்ட தனியார் வாகனங்கள் எப்போதும் 'பார்க்கிங்' செய்யப்பட்டுள்ளன.

இதனால், இவ்வழியாக செல்லும் அரசு பேருந்துகள், இந்த பேருந்து நிறுத்தத்தில் நிற்க முடியாமல், கடந்து சென்று விடுகின்றன.

இதன் காரணமாக, பணிக்கு செல்வோரும், கல்லுாரி மாணவர்களும் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியாமல், அடுத்த பேருந்து வரும் வரை காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

சில நேரம், அடுத்தடுத்து வரும் பேருந்துகளும், இதுபோல் நிற்காமல் செல்வதால், மாதத்தில் சில நாட்கள் பணிக்கு செல்ல முடியாமல், கல்லுாரிக்கு செல்ல முடியாமல் தத்தளிக்கும் சூழலும் எழுகிறது.

இதுகுறித்து, பயணியர் கூறியதாவது:

வண்டலுார் மட்டுமல்லாது கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், ஊனமாஞ்சேரி உள்ளிட்ட பகுதியிலிருந்து காஞ்சிபுரம், வேலுார், ஆரணி உள்ளிட்ட பகுதிக்கு பேருந்தில் பயணிப்போரும், வண்டலுார் தான் வருகின்றனர்.

ஆனால், வண்டலுார் பேருந்து நிறுத்தத்தைச் சுற்றிலும் தனியார் வாகனங்கள் 'பார்க்கிங்' செய்யப்பட்டுள்ளதால், பல நேரங்களில் நடு சாலையில் நின்று தான் பேருந்தில் ஏறி, இறங்க வேண்டி உள்ளது.

பேருந்தை சரியாக ஓரம் கட்டி நிறுத்த இடம் இல்லாமல் போவதால், சில பேருந்து ஓட்டுனர்கள், நிற்காமலே சென்று விடுகின்றனர்.

எனவே, வாலாஜாபாத் சாலையின் இரு பக்கமும் உள்ள, வண்டலுார் பேருந்து நிறுத்தத்தின் முன், தனியார் வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:

தாம்பரம் சானடோரியத்தில் இருந்து வண்டலுார் மார்க்கமாக காஞ்சிபுரம் செல்ல, தடம் எண் 79, ஆரணி செல்ல தடம் எண் 279, வேலுார் செல்ல தடம் எண் 155, ஆந்திர மாநிலம், சித்துார் செல்ல தடம் எண் 166, பெங்களூரு செல்ல தடம் எண் 444 என, மொத்தம் 75 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்த பேருந்துகள் அனைத்தும் வண்டலுார் பேருந்து நிறுத்தத்தில் நிற்க வேண்டும் என, அரசு ஆணை உள்ளது.

ஆனால், வண்டலுாரில் உள்ள இரண்டு பேருந்து நிறுத்தத்தை சுற்றிலும், எப்போதும் தனியார் வாகனங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.

தவிர, தள்ளுவண்டி உணவுக் கடைகளும் உள்ளன. இதனால், பல நேரங்களில் பேருந்தை நிறுத்த முடியாத சூழல் நிலவுகிறது.

நடு சாலையில் பேருந்தை நிறுத்தினால், பின்னால் அடுத்தடுத்து வரக்கூடிய வாகனங்களுக்கு வழி இல்லாமல், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு, விபத்தும் நடக்கிறது.

எனவே, அரசு பேருந்துகள் எளிதாக நின்று செல்ல, வண்டலுார் பேருந்து நிறுத்தத்தை சுற்றி தனியார் வாகனங்கள் 'பார்க்கிங்' செய்ய தடை விதிக்க வேண்டும். தள்ளு வண்டிக் கடைகளையும் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us