Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ செங்கை அருகே முன்விரோதத்தில் பா.ம.க., நிர்வாகி அடித்து கொலை

செங்கை அருகே முன்விரோதத்தில் பா.ம.க., நிர்வாகி அடித்து கொலை

செங்கை அருகே முன்விரோதத்தில் பா.ம.க., நிர்வாகி அடித்து கொலை

செங்கை அருகே முன்விரோதத்தில் பா.ம.க., நிர்வாகி அடித்து கொலை

ADDED : செப் 17, 2025 12:07 AM


Google News
Latest Tamil News
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அருகே, முன்விரோதம் காரணமாக பா.ம.க., நிர்வாகியை அடித்துக்கொன்ற நபரை, போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

செங்கல்பட்டு அடுத்த பட்டரவாக்கம், இளந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் வாசு, 56. பா.ம.க., மாவட்ட துணை செயலர். காட்டாங்கொளத்துார் ஒன்றிய முன்னாள் சேர்மனான இவர், மகேந்திரா சிட்டி பகுதியிலுள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிவோருக்கு உணவு தயார் செய்து கொடுக்கும், 'கான்ட்ராக்ட்' மற்றும் டேங்கர் லாரிகளில் தண்ணீர் 'சப்ளை' செய்து வந்தார்.

இந்நிலையில், நேற்று மதியம் 1:30 மணியளவில் இளந்தோப்பு பகுதியில், தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் சப்ளை செய்ய, கிணற்றில் இருந்து டேங்கர் லாரியில் தண்ணீர் நிரப்பும் பணி நடந்தது.

அங்கு, கிணற்றின் அருகே வாசு அமர்ந்திருந்தார்.

அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன், 35, என்பவர் அங்கு வந்து, திடீரென கிரிக்கெட் 'ஸ்டெம்ப்'பால் வாசுவை தாக்கியுள்ளார்.

பின், தலையில் கல்லைப் போட்டு கொன்று விட்டு, தப்பிச் செல்ல முயன்றுள்ளார். இதைப் பார்த்த டேங்கர் லாரி டிரைவர் கூச்சலிட்டதால், அங்கிருந்தோர் மாரியப்பனை துரத்திச் சென்று, கொளவாய் ஏரி அருகே மடக்கிப் பிடித்தனர்.

தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார், வாசு உடலை 108 ஆம்புலன்ஸ் மூலமாக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்தை, செங்கல்பட்டு டி.எஸ்.பி., புகழேந்தி கணேஷ் ஆய்வு செய்தார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, மாரியப்பனிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

விசாரணை நடக்கிறது இதுகுறித்து, போலீசார் கூறியதாவது: மாரியப்பன் மது போதையில் அடிக்கடி, இளந்தோப்பு பகுதியில் செல்லும் தண்ணீர் டேங்கர் லாரிகளை மடக்கி, ரகளை செய்து வந்துள்ளார். கடந்த வாரம், மாரியப்பனை அழைத்து வாசு கண்டித்துள்ளார். இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, வாசு தனியாக இருந்த நேரத்தில் அடித்துக் கொலை செய்துள்ளார். இந்த கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா எனவும் விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.



அன்புமணி கண்டனம்

'எக்ஸ்' தளத்தில் அன்புமணி கூறியுள்ளதாவது: செங்கல்பட்டு மாவட்டம், இளந்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த பா.ம.க., செங்கல்பட்டு மத்திய மாவட்ட துணை செயலர் வாசு, கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
செல்வாக்கு மிக்க ஒருவரை பட்டப்பகலில் ஒரு கும்பல் கொலை செய்துவிட்டு தப்பி ஓடுகிறது என்றால், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு எந்த அளவிற்கு சீர்குலைந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். வாசுவின் படுகொலைக்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். இதற்கு காரணமான குற்றவாளிகளை தமிழக அரசும், காவல் துறையும் உடனடியாக கைது செய்து, சட்டப்படி தண்டனை பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us