/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ வழிகாட்டி பலகை இல்லாத மேம்பாலங்களால்...குழப்பம்!: தட்டுத் தடுமாறி செல்லும் வாகன ஓட்டிகள் வழிகாட்டி பலகை இல்லாத மேம்பாலங்களால்...குழப்பம்!: தட்டுத் தடுமாறி செல்லும் வாகன ஓட்டிகள்
வழிகாட்டி பலகை இல்லாத மேம்பாலங்களால்...குழப்பம்!: தட்டுத் தடுமாறி செல்லும் வாகன ஓட்டிகள்
வழிகாட்டி பலகை இல்லாத மேம்பாலங்களால்...குழப்பம்!: தட்டுத் தடுமாறி செல்லும் வாகன ஓட்டிகள்
வழிகாட்டி பலகை இல்லாத மேம்பாலங்களால்...குழப்பம்!: தட்டுத் தடுமாறி செல்லும் வாகன ஓட்டிகள்
UPDATED : செப் 21, 2025 01:20 AM
ADDED : செப் 21, 2025 01:19 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கட்டப்பட்டுள்ள மேம்பாலங்களில், வழிகாட்டி பலகைகள் இல்லாததால், வாகன ஓட்டிகள் தட்டுதடுமாறி செல்கின்றனர். தடம் மாறி சென்ற வாகனங்கள் திரும்ப, 'யுடர்ன்' அடிப்பதால் விபத்துக்களும் நிகழ்கின்றன.
![]() |
புதிதாக சென்னைக்கு வரும் வாகன ஓட்டிகளுக்கு, செங்கல்பட்டு முதல் ஊரப்பாக்கம் வரையிலான, 24 கி.மீ., ஜி.எஸ்.டி., சாலை எவ்வித குழப்பத்தையும் தருவதில்லை. ஆனால், ஊரப்பாக்கம் அடுத்த ஒரு கி.மீ., துாரத்தில் உள்ள கிளாம்பாக்கம் பேருந்து முனையம் எதிரே வந்த உடன், இடது பக்கம், வலது பக்கம் தலா ஒரு பாலங்கள் உள்ளன. இந்த இரண்டு பாலங்களுக்கும் நடுவே பிரதான ஜி.எஸ்.டி., சாலை செல்கிறது.
இந்த பாலங்களின் முகப்பு பகுதியிலும், வழிகாட்டி பலகை எதுவும் இல்லை. இதனால், புதிதாக சென்னை வரும் வாகன ஓட்டிகளுக்கு குழப்பம் ஏற்படுகிறது. தாம்பரம் நோக்கி செல்ல வலது பக்கம் உள்ள மேம்பாலத்தில் செல்வதா அல்லது இரண்டு பாலத்திற்கும் நடுவே உள்ள சாலையில் செல்வதா என்ற குழப்பம் வருகிறது.
சிலர், தவறுதலாக, கிளாம்பாக்கம் பேருந்து முனையம் எதிரே இடது பக்கம் உள்ள பாலத்தில் பயணிக்கின்றனர்.
அரை கி.மீ., துாரம் சென்ற பின், வண்டலுார் கிராமத்திற்குள் புகுந்து, அங்கு திக்கித் திணறி, சந்து பொந்துக்குள் புகுந்து, சுதாரித்து, 'யு டர்ன்' அடித்து, அதே பாலத்தில் மீண்டும் பயணித்து, ஜி.எஸ்.டி., சாலைக்கு மீண்டும் வந்து, தாம்பரம் நோக்கி பயணிக்கும் போது, வண்டலுார் ரயில் நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தால் மீண்டும் ஒரு குழப்பம் வருகிறது.
வண்டலுார் ரயில் நிலையம் அருகே உள்ள பாலத்தின் மீது பயணித்து, இடது பக்கம் திரும்பினால் வாலாஜாபாத் நோக்கி செல்ல முடியும்.
நேராக பயணித்தால், தாம்பரம் நோக்கி செல்லலாம். இந்த மேம்பாலத்தின் நுழைவு பகுதியிலும் வழிகாட்டி பலகை இல்லை.
இதனால், சில வாகன ஓட்டிகள் மேம்பாலத்தில் பயணித்து, இடது பக்கம் திரும்பி, வாலாஜாபாத் சாலைக்கு திரும்பி விடுகின்றனர். அதுபோல, வாலாஜாபாத் சாலையில் இருந்து வரும் வாகன ஓட்டிகள், வண்டலுார் மேம்பாலத்தில் பயணித்து வலது பக்கம் திரும்பினால் செங்கல்பட்டு மார்க்கமாகவும், இடது பக்கம் திரும்பினால் தாம்பரம் மார்க்கமாகவும் செல்ல முடியும்.
ஆனால், வாலாஜாபாத் சாலையில் இருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு, வண்டலுார் மேம்பாலத்தில், கண்களுக்கு தெரியும்படி வழிகாட்டி பலகை அமைக்கப்படவில்லை.
இதனால், தாம்பரம் செல்ல வேண்டியவர்கள் செங்கல்பட்டு மார்க்கத்திலும், செங்கல்பட்டு நோக்கி செல்ல வேண்டியவர்கள் தாம்பரம் நோக்கியும் பயணிப்பது தினமும் நடந்தேறுகிறது.
புதிதாக வரும் வாகன ஓட்டிகள் கூறியதாவது:
ஒரு சாலை, குறிப்பிட்ட ஓரிடத்தில் இரண்டாக அல்லது மூன்றாக பிரியும் போது, நாம் எந்த வழியாக செல்ல வேண்டும் என்கிற குழப்பம் அனைவருக்கும் எழுவது வாடிக்கை.
கிளாம்பாக்கம் பேருந்து முனையம் எதிரே, சாலையும் பிரிந்து, மேம்பாலங்களும் அடுத்தடுத்து வருவதால், புதிதாக தாம்பரம் நோக்கி செல்வோருக்கு பெரும் குழப்பம் நிலவுகிறது.
எனவே, கிளாம்பாக்கம் பேருந்து முனையம் எதிரே இடது பக்கம், வண்டலுார் கிராமத்திற்குள் செல்லும் மேம்பாலத்தில், இரவிலும் நன்றாக தெரியும்படி, பெரிய அளவிலான வழிகாட்டி பலகை வைக்க வேண்டும். இதையடுத்து, அதே இடத்தில், வலது பக்கம் உள்ள மேம்பாலத்திலும், இரண்டு பாலங்களுக்கும் நடுவே செல்லும் ஜி.எஸ்.டி., சாலையிலும் பெரிய அளவிலான வழிகாட்டி பலகை நிறுவ வேண்டும்.
பின், வண்டலுார் வெளிவட்ட சாலை துவங்கும் இடத்தில், தாம்பரம் செல்வோர், இடது பக்கமாக பயணிக்கவும், வலது பக்கம் உள்ள பாலத்தில் செல்லக்கூடாது என்ற அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். மேலும், வண்டலுார் ரயில் நிலையம் மேம்பாலத்தின் முகப்பில், தாம்பரம் செல்வோர் நேராக செல்லவும், காஞ்சிபுரம் செல்வோர் இடது பக்கம் செல்லவும் என்ற, வழிகாட்டி பலகை பொருத்த வேண்டும்.
தவிர, கவன குறைவாக வழி தவறி செல்வோர், உடனடியாக சுதாரிக்கும்படி, ஒவ்வொரு பாலத்திலும், 100 மீ., துாரத்திற்குள், அந்த சாலை எங்கே செல்கிறது என்ற அறிவிப்பு பலகையும் வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.