/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ சாலையோர குளிர்பான கடைகள் அதிகாரிகள் ஆய்வு செய்வது அவசியம் சாலையோர குளிர்பான கடைகள் அதிகாரிகள் ஆய்வு செய்வது அவசியம்
சாலையோர குளிர்பான கடைகள் அதிகாரிகள் ஆய்வு செய்வது அவசியம்
சாலையோர குளிர்பான கடைகள் அதிகாரிகள் ஆய்வு செய்வது அவசியம்
சாலையோர குளிர்பான கடைகள் அதிகாரிகள் ஆய்வு செய்வது அவசியம்
ADDED : ஜூன் 02, 2025 02:42 AM

செங்கல்பட்டு:கோடை வெயிலை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தின் பிரதான சாலையோரங்களில் சர்பத், எலுமிச்சை சாறு மற்றும் இதர வகை குளிர்பான விற்பனை கடைகள் மற்றும் கூழ் விற்பனைக் கடைகள் புதிது புதிதாய் முளைத்துள்ளன. இவற்றின் தரத்தை, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழகத்தில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரையில், வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால் உடல் சூட்டை தணிக்க பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அதிக அளவில் குளிர்பானங்களை அருந்துவது வாடிக்கை.
இதை வணிகமாக பயன்படுத்தி பிரதான சாலையோரம், நடைபாதை, அணுகுசாலை ஆகியவற்றில் புதுப்புது ரூபத்தில் குளிர்பான கடைகள் முளைத்துள்ளன.
இக்கடைகளில் விதவிதமான வண்ணங்களில்ல பலவித பெயர்களில் குளிர்பானங்கள் விற்கப்படுகின்றன.
குறிப்பாக எலுமிச்சை பழத்தை பயன்படுத்தி நன்னாரி சர்பத், லெமன் சால்ட் சோடா ஆகியவை அதிக அளவில் விற்கப்படுகின்றன. தவிர ரோஸ் மில்க், பாதாம் மில்க், மிக்ஸ்டு புரூட் என்ற பெயரிலும், 'பிரஷ் ஜூஸ்' என்ற பெயரிலும் கடைகளில் வியாபாரம் களைகட்டுகிறது.
அரசால் வகுக்கப்பட்டுள்ள உணவுத் தரம் குறித்த எவ்வித விதிகளையும் பின்பற்றாமல், இந்த கடைகள் செயல்படுவதாகவும், இங்கு தயாரிக்கப்படும் குளிர்பானங்களில் சேர்க்கப்படும் 'நிறமி'கள் உடலுக்கு கேடு விளைவிப்பதாகவும் உள்ளதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து, மருத்துவர் லோகேஸ்வரி கூறியதாவது:
பெரும்பாலான திடீர் சாலையோர வணிகர்கள், மரப்பெட்டி மற்றும் இரும்பாலான பெட்டியின் உள்ளே ஐஸ் கட்டிகளை அடைத்து, அதனுள் நீரைத் தேக்கி, அந்த நீரை குளிர்பான தயாரிப்பிற்கு பயன்படுத்துகின்றனர்.
அந்த மரப்பெட்டியும், இரும்பு பெட்டியும் அழுக்கடைந்து, துர்நாற்றம் தருபவையாக உள்ளன. இதனுள் வைக்கப்படும் ஐஸ் கட்டிகளும், நீரும் எப்படி சுகாதாரமானதாக இருக்க முடியும்?
இந்த சாலையோர கடைகளில், எப்போதும் ஈக்கள் மொய்ப்பதை பார்க்கலாம்.
இரும்பு பெட்டி உள்ளே, உப்புத் துகள்களோடு வைக்கப்பட்டுள்ள ஐஸ் கட்டிகளில் இரும்பு துரு கலந்து, அது குளிர்பானத்திலும் கலந்து, வயிற்றுப் போக்கு உள்ளிட்ட ஜீரண பிரச்னையை உருவாக்கும்.
சாலையோர கடைகளில் பாட்டில்கள் மற்றும் டம்ளர்களை சுத்தப்படுத்தும் முறை, அதற்கு பயன்படுத்தப்படும் நீரின் தரம் குறித்தும் அவசியம் சோதிக்க வேண்டும்.
தரக் கட்டுப்பாட்டிற்கு உட்படுத்தப்படாத, பெயர் தெரியாத பிராண்டுகளில் நன்னாரி சர்பத் என்ற சுவையூட்டியை பயன்படுத்தியே, அதிகளவில் குளிர்பானங்கள் தயாரித்து விற்கப்படுகின்றன.
கரும்பு சாறு பிழியும் இயந்திரங்கள் செயல்பட, 'கிரீஸ்' பயன்படுத்தப்படுகிறது. இது, கரும்பு சாற்றுடன் கலந்து, அருந்துபவரின் உடலுக்குள் செல்லும் போது, பலவித பக்க விளைவுகள் ஏற்படும்.
கூழ் விற்பனைக் கடைகளில், 'சைடிஷ்' எனும் பெயரில் மிளகாய், ஊறுகாய், வற்றல் உள்ளிட்ட பொருட்கள் திறந்த வெளியிலேயே வைக்கப்பட்டுள்ளன.
சுகாதாரமற்ற உணவு பொருட்களை உண்பதாலும், பானங்களை அருந்துவதாலும், உடலின் செரிமான உறுப்புகள் முதலில் பாதிக்கப்படும். குறிப்பாக, கல்லீரல் பாதிப்பு ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.