/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ ஊனமாஞ்சேரி சந்திப்பில் 'சிக்னல்' அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை ஊனமாஞ்சேரி சந்திப்பில் 'சிக்னல்' அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
ஊனமாஞ்சேரி சந்திப்பில் 'சிக்னல்' அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
ஊனமாஞ்சேரி சந்திப்பில் 'சிக்னல்' அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
ஊனமாஞ்சேரி சந்திப்பில் 'சிக்னல்' அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
ADDED : மே 16, 2025 02:26 AM

ஊனமாஞ்சேரி, வண்டலுார் -- கேளம்பாக்கம் சாலையில், ஊனமாஞ்சேரி சந்திப்பில், 'சிக்னல்' அமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகள், பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாம்பரம் அடுத்த வண்டலுார் -- கேளம்பாக்கம் இடையிலான 20 கி.மீ., துாரமுள்ள சாலையில், இரு பக்கமும் 15க்கும் மேற்பட்ட ஊராட்சிகள், 40க்கும் மேற்பட்ட இணைப்பு சாலைகள், 20க்கும் மேற்பட்ட தனியார் கல்லுாரிகள் மற்றும் பள்ளிகள் உள்ளன.
தாம்பரம், வண்டலுார், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி பகுதியிலிருந்து ஓ.எம்.ஆர்., சாலையில் உள்ள ஐ.டி., நிறுவனங்களுக்கு பணிபுரிய செல்வோர், இந்த சாலையில் தான் பயணிக்கின்றனர்.
தவிர, திருப்போரூர் முருகன் கோவில், மாமல்லபுரம் செல்வோர் இந்த வழித்தடத்தையே பயன்படுத்தி வருவதால், நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகமாகிறது.
தவிர, இதே வழித்தடத்தில், நெல்லிக்குப்பம் சாலையில், 80க்கும் மேற்பட்ட கல் அரைவை ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளுக்கு நாளொன்றுக்கு 300க்கும் மேற்பட்ட அதி கனரக லாரிகள் வந்து செல்கின்றன.
இதனால், ஜி.எஸ்.டி., சாலைக்கு நிகராக, இந்த சாலையில் வாகன போக்குவரத்து உள்ளது.
இந்த வழித்தடத்தில், ஊனமாஞ்சேரி சந்திப்பு முக்கிய பகுதியாக உள்ளது. இந்த சந்திப்பில் திரும்பும் வாகனங்கள், சாலையைக் கடக்கும் பொது மக்கள், பாதுகாப்பாக செல்ல, இங்கு 'சிக்னல்' இல்லை.
தவிர, இந்த சந்திப்பின் அருகிலேயே பேருந்து நிறுத்தமும் உள்ளதால், எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக இந்த சந்திப்பு உள்ளது.
இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:
ஊனமாஞ்சேரி வழியாக இதர பகுதிக்குச் செல்வோர், இந்த சந்திப்பில் திரும்பி பயணிக்கின்றனர். இதனால், நிமிடத்திற்கு 60க்கும் குறையாத வாகனங்கள் இந்த சந்திப்பை பயன்படுத்தி திரும்பிச் செல்கின்றன.
இங்கு சிக்னல் இல்லாததால், பிரதான சாலையில் நேராக செல்லும் வாகனங்களும், சந்திப்பில் திரும்பும் வாகனங்களும், அடிக்கடி மோதி விபத்தில் சிக்குகின்றன.
குறிப்பாக, 'பீக் ஹவர்ஸ்' நேரங்களில், யார் முந்திச் செல்வது, யார் வழிவிடுவது என, வாகன ஓட்டிகள் இடையே போட்டி எழுந்து, பல நேரங்களில் வாக்குவாதமும், கைகலப்பும் நிகழ்கிறது.
எனவே, இந்த சந்திப்பில் 'சிக்னல்' அமைப்பது மிக அவசியம். இல்லாவிட்டால், போக்குவரத்தை ஒழுங்குபடுத்த, போலீசாரை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.