/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/வெளியூர் செல்லும் பயணியருக்கு அமைச்சர்கள்... உறுதி!வெளியூர் செல்லும் பயணியருக்கு அமைச்சர்கள்... உறுதி!
வெளியூர் செல்லும் பயணியருக்கு அமைச்சர்கள்... உறுதி!
வெளியூர் செல்லும் பயணியருக்கு அமைச்சர்கள்... உறுதி!
வெளியூர் செல்லும் பயணியருக்கு அமைச்சர்கள்... உறுதி!
ADDED : பிப் 12, 2024 12:31 AM

சென்னை : வெளியூர்களுக்கு செல்ல, கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கத்தில் இருந்து போதிய பேருந்துகள் இல்லாததால், இரு நாட்களாக பயணியர் அதிருப்தி அடைந்த நிலையில், வார இறுதி நாட்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது எனவும், அதனால் வரும் நாட்களில் இதுபோன்ற பிரச்னைகள் வராது எனவும், அமைச்சர்கள் உறுதி அளித்துள்ளனர்.
கிளாம்பாக்கத்தில் இனி பிரச்னை இருக்காது
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து வகை அரசு பேருந்துகளும், கோயம்பேடில் இருந்து வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்திற்கு மாற்றப்பட்டு உள்ளன.
இ.சி.ஆர்., மற்றும் பூந்தமல்லி வழியாக செல்லும் பேருந்துகள் மட்டுமே, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில், கிளாம்பாக்கத்தில் இருந்து திருச்சி, திருவண்ணாமலை, செஞ்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லாததால், பயணியர் போராட்டத்தில் ஈடுபடுவது தொடர்கிறது.
வார இறுதி நாளான கடந்த வெள்ளிக்கிழமை, திருச்சி, மதுரை, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு போதிய பேருந்துகள் கிடைக்காததால் அதிருப்தியடைந்த பயணியர், நள்ளிரவில் மறியலில் ஈடுபட்டனர்.
காத்திருங்கள்
அதேபோல், நேற்று முன்தினம் வந்த பயணியர், திருச்சிக்கு செல்ல போதிய பேருந்துகள் இல்லாததால், கிளாம்பாக்கம் நிலைய மேலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து நிலைய வளாகத்தில் அமர்ந்து, நள்ளிரவு 12:30 மணி அளவில் தர்ணா போராட்டம் செய்தனர்.
போலீசார் வந்து, அவர்களிடம் பேச்சு நடத்தினர். 'அதிகாலை 4:00 மணிக்கு தான் பேருந்து இயக்கப்படும். அதுவரை பேருந்து நிலைய வளாகத்தில் காத்திருங்கள்' என சமரசப்படுத்தினர்.
அதேபோல், இ.சி.ஆர்., வழியாக புதுச்சேரி செல்ல போதிய பேருந்துகள் இல்லாததால், நேற்று முன்தினம் நள்ளிரவு 12:00 மணிக்கு, கோயம்பேடிலும் 150க்கும் மேற்பட்ட பயணியர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள், பேருந்துகளை வரவழைத்து அவர்களை அனுப்பிவைத்தனர்.
அதேபோல், கோயம்பேடில் இருந்து நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு மேல் கிளாம்பாக்கம் செல்ல போதிய பேருந்துகள் இல்லாததால், பயணியர் மிகவும் சிரமப்பட்டனர். கிடைத்த சொற்ப பேருந்துகளின் படிகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்தனர்.
வந்த பேருந்துகள் அனைத்தும் கூட்டத்தால் நிரம்பி வழிந்ததால், கிளாம்பாக்கம் செல்ல போரூர் சுங்கச்சாவடியில் காத்திருந்த 200க்கும் மேற்பட்ட பயணியர், அவ்வழியே சென்ற பேருந்துகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த போலீசார், பிரச்னை பெரிதாகாமல் இருக்க, அவ்வழியாக வந்த கார், வேன், லாரி உள்ளிட்ட வாகனங்களில் பயணியரை ஏற்றி, கிளாம்பாக்கத்திற்கு அனுப்பி வைத்தனர். உடைமைகள், குழந்தைகள், முதியோருடன் செல்ல சிரமப்பட்ட குடும்பத்தினர், புலம்பலுடன் பயணித்தனர்.
கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் பயணியர் கூறியதாவது:
இன்று - நேற்று - முகூர்த்த நாள் என்பதால், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏராளமான பயணியர் குவிந்தனர். இ.சி.ஆர்., வழியாக புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் மிகவும் குறைவான எண்ணிக்கையிலே இயக்கப்பட்டன. இதனால், பயணியர் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அதேபோல், கோயம்பேடில் இருந்து கிளாம்பாக்கம் செல்ல இயக்கப்பட்ட மாநகர பேருந்துகளும் அரை மணி நேர இடைவெளியிலே இயக்கப்பட்டதால் மிகவும் பிரச்னை ஏற்பட்டது.
வார இறுதி நாட்களில் சொந்த ஊர் செல்வோர் வசதிக்காக கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும். குறிப்பாக, கிளாம்பாக்கம் - கோயம்பேடு இடையே இணைப்பு பேருந்துகளை, அதிகளவில் இயக்க வேண்டும்.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில், எந்த நேரத்தில் சென்றாலும் வெளியூர் செல்ல பேருந்துகள் இருக்கும். ஆனால் கிளாம்பாக்கத்தில் நள்ளிரவு 12:00 மணிக்கு மேல், திருச்சி செல்வதற்கு பேருந்து இல்லை. அவசர அவசரமாக, இந்த நிலையத்தை திறந்து, பேருந்துகளை அதிகம் இயக்காமல் பயணியரை மிகவும் சிரமப்படுத்துகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கடந்த இரு நாட்களாக, பேருந்துகள் இயக்குவதில் ஏற்பட்ட குளறுபடியால், கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்தில் அமைச்சர்கள் சேகர்பாபு, சிவசங்கர் நேற்று ஆய்வு செய்தனர்.
இதையடுத்து, நிருபர்களிடம் அவர்கள் கூறியதாவது:
கோயம்பேடு பேருந்து நிலையம் வரும்போதும், ஆரம்பத்தில் பல்வேறு வசதி குறைபாடு புகார்கள் எழுந்தன. படிப்படியாக அவை சரிசெய்யப்பட்டன.
அதேபோல் தான், கிளாம்பாக்கத்திற்கும் புகார்கள் வந்துள்ளன. இந்த புகார்கள் மீது, உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம். சுகாதாரம், குடிநீர் வசதிகள் தொடர்பான புகார்கள் எதுவும் இல்லை.
ஆனால், உணவு அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் வந்துள்ளது. அரசிடம் பேசி, விரைவில் மலிவு விலை உணவகம் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து, கடந்த வெள்ளிக்கிழமை 1,097 பேருந்துகள், 495 சிறப்பு பேருந்துகள் என, 1,592 பேருந்துகள் இயக்கப்பட்டன. சனிக்கிழமை, 1,097 பேருந்துகள், 610 சிறப்பு பேருந்துகள் என, 1,707 பேருந்துகள் இயக்கப்பட்டன.
இந்நிலையில், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய பகுதிகளுக்கு, போதுமான அளவில் பேருந்துகள் இயக்கப்படவில்லை என, புகார் எழுந்தது.
அந்த வழித்தடத்தில் நாள் ஒன்றுக்கு, திருச்சிக்கு 199 பேருந்துகளும், கும்பகோணத்திற்கு 125 பேருந்துகளும், திருவண்ணாமலைக்கு 253 பேருந்துகளும் இயக்கப்பட்டன. இது, கடந்த பொங்கல் பண்டிகைக்கு இயக்கப்பட்ட பேருந்துகளைவிட அதிகம்.
வார இறுதி நாட்களை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகங்கள் முன்கூட்டியே திட்டமிட்டு, பயணியருக்கு தேவையான பேருந்துகளை, வழக்கம்போல இயக்கி வருகின்றன.
விடுமுறை காலங்களில், நள்ளிரவில், 12:00 மணி முதல், 4:00 மணி வரை தான் பேருந்துகள் கிடைக்கவில்லை என, புகார்கள் வருகின்றன. இந்த நேரத்தில், உரிய முறையில் பேருந்துகளை இயக்க உத்தரவுகள் வழங்கப்பட்டு உள்ளன. வரும் காலத்தில் இது போன்ற பிரச்னைகள் வராது.
வெளிவட்ட சாலையில் முடிச்சூர் பகுதியில், ஆம்னி பேருந்துகள் நிறுத்துமிடத்தில் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. ஏப்., மாதத்தில் இந்த வசதி பயன்பாட்டுக்கு வந்துவிடும். அதன் பின், அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே இயக்கப்படும்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து, ஆம்னி பேருந்து நிறுவனங்கள் தவறான பரப்புரை மேற்கொள்கின்றன. இதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.