/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ செங்கை நகராட்சியுடன் 15 ஊராட்சிகள் இணைப்பு... கிடப்பில் :4 ஆண்டுகளாக கண்டுகொள்ளாததால் அதிருப்தி செங்கை நகராட்சியுடன் 15 ஊராட்சிகள் இணைப்பு... கிடப்பில் :4 ஆண்டுகளாக கண்டுகொள்ளாததால் அதிருப்தி
செங்கை நகராட்சியுடன் 15 ஊராட்சிகள் இணைப்பு... கிடப்பில் :4 ஆண்டுகளாக கண்டுகொள்ளாததால் அதிருப்தி
செங்கை நகராட்சியுடன் 15 ஊராட்சிகள் இணைப்பு... கிடப்பில் :4 ஆண்டுகளாக கண்டுகொள்ளாததால் அதிருப்தி
செங்கை நகராட்சியுடன் 15 ஊராட்சிகள் இணைப்பு... கிடப்பில் :4 ஆண்டுகளாக கண்டுகொள்ளாததால் அதிருப்தி
ADDED : செப் 04, 2025 09:51 PM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு நகராட்சியுடன், 15 ஊராட்சிகளை இணைக்கும் திட்டத்திற்கு, அரசிடம் பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், நான்கு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. நகரின் வளர்ச்சி கருதி, இதை நடைமுறைப்படுத்த வேண்டுமென, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள செங்கல்பட்டு நகராட்சி, 1889ம் ஆண்டு உருவானது. 1947ம் ஆண்டில் மூன்றாம் நிலை நகராட்சியாகவும், 1972ம் ஆண்டில், இரண்டாம் நிலை நகராட்சியாகவும், 1984ம் ஆண்டு, முதல் நிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது.
மொத்தம், 6.09 சதுர கி.மீ., பரப்பளவு கொண்ட இந்த நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், சப் -- கலெக்டர் அலுவலகம், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, முதன்மை மாவட்ட நீதிமன்றம், வங்கிகள், ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
ஆனால், செங்கல்பட்டு நகரில், பெரிய அளவில் தொழில் நிறுவனங்கள் இல்லை. நகராட்சியில் வீட்டு வரி, சொத்து வரியினங்கள் மூலம் மட்டும், நிர்வாகத்திற்கு வருவாய் வருகிறது.
நத்தம், அனுமந்தபுத்தேரி, மும்மலை, குண்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், அரசு புறம்போக்கு நிலமாகவும், தொல்லியல் துறை இடமாகவும் உள்ளன.
இங்கு வசிக்கும் மக்களிடம் வீட்டு வரி, நிலம், குடிநீர் வரி போன்ற வரியினங்களை வசூலிப்பதில், நகராட்சிக்கு சிக்கல் உள்ளது.
இதுபோன்ற காரணங்களால், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற, ஒவ்வொரு திட்டத்திற்கும், மாநில அரசிடமிருந்து நிதி உதவியை எதிர்பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படு கிறது. செங்கல்பட்டு நகரில், அடிப்படை வசதிகளை செய்து தர, 15 கோடி ரூபாய்க்கு மேல் நிதி தேவைப்படுகிறது. இதனால், நகரட்சியின் எல்லைப் பகுதியை விரிவுபடுத்துவதன் மூலமாக, வரி வருவாயை பெருக்கலாம் என, நகராட்சி நிர்வாகம் ஆலோசித்தது.
இதையடுத்து காட்டாங்கொளத்துார் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மேலமையூர், வல்லம், உள்ளிட்ட 14 ஊராட்சிகள், திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள திருமணி ஊராட்சி என, 15 ஊராட்சிகளை, செங்கல்பட்டு நகராட்சியுடன் இணைக்க திட்டமிடப்பட்டது.
இதற்காக, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஊராட்சி பகுதிகளை, நகராட்சியுடன் இணைத்தால், பெருநகராட்சியாக தரம் உயர்த்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், அதிகாரிகள் கருதினர்.
அதன் பின், 15 ஊராட்சிகளையும் இணைக்க, அப்போதைய கலெக்டர் ராகுல்நாத், தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பினார்.
இந்த அறிக்கை அனுப்பி நான்கு ஆண்டுகள் ஆகியும், அரசு பரிசீலனையில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், நகராட்சியில் வளர்ச்சித் திட்டங்களை மேம்படுத்துவதில் சிக்கல் நீடிக்கிறது.
எனவே, வரும் சட்டசபை கூட்டத்தொடரில், நகராட்சி மானியக் கோரிக்கையில், 15 ஊராட்சிகளையும் செங்கல்பட்டு நகராட்சியுடன் இணைக்கும் அறிவிப்பு வெளியிட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வலுத்துள்ளது.
செங்கல்பட்டு நகராட்சியுடன், 15 ஊராட்சிகளை இணைக்க, தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளோம். 15 ஊராட்சிகளை சேர்ப்பதால், நகராட்சியின் பரப்பளவு 75.42 சதுர கி.மீ., சராசரி ஆண்டு வருவாய் 40.17 கோடி ரூபாயாக உயரும் வாய்ப்பு உள்ளது. - நகராட்சி அதிகாரிகள், செங்கல்பட்டு.
செங்கல்பட்டு நகராட்சி வளர்ச்சியடைய, நகரைச் சுற்றியுள்ள 15 ஊராட்சிகளை இணைக்க வேண்டும் என, கலெக்டர் மற்றும் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை மனு அனுப்பி வருகிறோம். இத்திட்டத்தை, முதல்வர் அறிவிக்க வேண்டும். - ஆர்.முரளி மோகன், சமூக ஆர்வலர், செங்கல்பட்டு.