ADDED : செப் 22, 2025 12:42 AM

செங்கல்பட்டு:புரட்டாசி மாதம் மஹாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோருக்கு தர்ப்பணம் செய்வதற்கு நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர்.
மகாளய அமாவாசை அன்று திதி பூஜை செய்தால், முன்னோர் ஆன்மா சாந்தியடையும் என்பது நம்பிக்கை.
மஹாளய அமாவாசையான நேற்று சிங்கபெருமாள் கோவில் அனுமந்தபுரம் சாலையில் உள்ள நரசிம்ம பெருமாள் கோவில் சுத்த புஷ்கரணியில் நீராடி குளக்கரையில் அமர்ந்து முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து, வழிபட்டனர்.
நேற்று அதிகாலை முதலே சிங்கபெருமாள் கோவில், திருத்தேரி, செங்குன்றம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து இக்குளக்கரைகளில் தர்ப்பணம் கொடுக்க வந்தவர்களின் கூட்டம் அலைமோதியது.
நீண்ட வரிசையில் காத்திருந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின், பசுவிற்கு அகத்திக்கீரை வழங்கினர்.
திருப்போரூர் கந்தசுவாமி கோவில் சரவண பொய்கை குளத்தில், ஏராளமான பக்தர்கள் தங்களது முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோவில் எதிரே உள்ள ராம தீர்த்த குளத்தில் ஏராளமானோர் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
அச்சிறுபாக்கம் அருகே பெரும்பேர் கண்டிகை எல்லையம்மன் கோவில் குளக்கரை மற்றும் சோத்துப்பாக்கம் சிவன் கோவில் குளக்கரை பகுதிகளில் முன்னோர்களுக்கான தர்ப்பணம் வழிபாடு நடந்தது.
நென்மேலி கிராமத்தில், லட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலில், நேற்று, அதிகாலை 3:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இக்கோவிலில், மகாளய அமாவாசையில் தர்ப்பணம் செய்வது சிறப்பான பலனை தரும். ஏராளமானவர்கள் பங்கேற்று, முன்னோர்களுக்கு, தர்பணம் கொடுத்து வழிப்பட்டனர்.
இதேபோன்று, செங்கல்பட்டு கோதண்டராமர் கோவில், குளத்தில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிப்பட்டனர்.
மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவில் புண்டரீக புஷ்கரணி குளம், கடற்கரை ஆகிய இடங்களில், மாமல்லபுரம் மற்றும் சுற்றுபுற பகுதியினர் மூதாதையரை வழிபட்டனர்.