/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/மதுராந்தகம் - மோச்சேரி சுரங்கப்பாதை பணி...கிடப்பில்:நிதி ஒதுக்கி ஓராண்டாகியும் மக்கள் தவிப்புமதுராந்தகம் - மோச்சேரி சுரங்கப்பாதை பணி...கிடப்பில்:நிதி ஒதுக்கி ஓராண்டாகியும் மக்கள் தவிப்பு
மதுராந்தகம் - மோச்சேரி சுரங்கப்பாதை பணி...கிடப்பில்:நிதி ஒதுக்கி ஓராண்டாகியும் மக்கள் தவிப்பு
மதுராந்தகம் - மோச்சேரி சுரங்கப்பாதை பணி...கிடப்பில்:நிதி ஒதுக்கி ஓராண்டாகியும் மக்கள் தவிப்பு
மதுராந்தகம் - மோச்சேரி சுரங்கப்பாதை பணி...கிடப்பில்:நிதி ஒதுக்கி ஓராண்டாகியும் மக்கள் தவிப்பு
ADDED : ஜூன் 08, 2025 01:59 AM

செங்கல்பட்டு:மதுராந்தகம் - மோச்சேரி தேசிய நெடுஞ்சாலை பகுதியில், சுரங்கப்பாதை அமைக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், 22.39 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும், ஒராண்டாக பணிகள் துவங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், தேசிய நெடுஞ்சாலையில், மதுராந்தகம் பகுதியில், 20 ஆண்டுகளுக்கு முன், பொதுமக்கள் சென்று வரும் வகையில், நடை மேம்பாலம், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அமைத்தது.
இதை முறையாக பராமரிக்காததால், நடைமேம்பாலம் பழுதடைந்துள்ளது. இதனால், பொதுமக்கள், நடைமேம்பாலத்தை பயன்படுத்துவதை தவிர்த்து வந்தனர்.
இந்த பகுதியில், மதுராந்தகம் அடுத்த, மோச்சேரி, கருணாகரவிளகம், அருந்ததிபாளையம், புதுார் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 5,000த்துக்கும் மேற்பட்ட மக்கள், அரசு மருத்துவமனை, பள்ளி, கல்லுாரி மாணவர்கள், அத்தியாவசியபணி உள்ளிட்ட பல்வேறு தேவைக்கு மதுராந்தகம் மற்றும் பிறபகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
நெடுஞ்சாலையில், அசூர வேகத்தில் செல்லும் வாகனங்களால், இப்பகுதியில், ஏற்பட்ட சாலை விபத்துக்களில், 200க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். ஆயிரகணக்கானோர் பலத்தகாயம் அடைந்துள்ளனர்.
இப்பகுதியில், விபத்தை தவிர்க்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்ககோரி, அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர்.
இதைத்தொடர்ந்து, மதுராந்தகம் செங்குந்தர்பேட்டை - மோச்சேரி இடையே சுரங்கப்பாதை, சிக்னல், சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து வலியுறுத்தியது.
அதன்பின், சுரங்கப்பாதை அமைய உள்ள இடத்தை, வருவாய்த்துறை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், காவல்துறை ஆகியோர் கூட்டாக ஆய்வு செய்து, கடந்த ஆண்டு, கலெக்டரிடம் அறிக்கை சமர்ப்பித்தனர்.
இதைத்தொடர்ந்து, மதுராந்தகம் செங்குந்தர் பேட்டை - மோச்சேரி இடையே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என, தேசிய நெடுஞ்சாலை ஆணைய தலைவருக்கு, மாவட்ட நிர்வாகம் கருத்துரு அனுப்பியது.
அதன்பின், சுரங்கபாதை அமைக்க 22.39 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, டெண்டர் விடப்பட்டது.
இப்பணியை, உடனடியாக துவக்கி, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு, மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், உத்தரவிட்டார்.
ஆனால், தேசிய நெடுஞ்சாலை மையப்பகுதியில், அம்பேத்கர் சிலை இருந்ததால், ஓராண்டாக பணி துவக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
தற்போது, அம்பேத்கர் சிலை மாற்று இடத்தில் அமைக்க, இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி, சுரங்கப்பாதை அமைக்கும் பணியை விரைந்து துவக்க வேண்டும். பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.
அத்தியாவசிய பணிக்கு ஏராளமான பொதுமக்கள், சென்று வருகின்றனர். சுரங்கப்பாதை பணியை விரைந்து துவக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மதுராந்தகம் செங்குந்தர்பேட்டை - மோச்சேரி இடையே, 25ம் தேதிக்குள் பணி துவங்கி நடைபெறும் என, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.