/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ துாய்மை பணியாளர்கள் பற்றாக்குறையால் 'கப்' அடிக்கும் காட்டாங்கொளத்துார் ஒன்றியம் துாய்மை பணியாளர்கள் பற்றாக்குறையால் 'கப்' அடிக்கும் காட்டாங்கொளத்துார் ஒன்றியம்
துாய்மை பணியாளர்கள் பற்றாக்குறையால் 'கப்' அடிக்கும் காட்டாங்கொளத்துார் ஒன்றியம்
துாய்மை பணியாளர்கள் பற்றாக்குறையால் 'கப்' அடிக்கும் காட்டாங்கொளத்துார் ஒன்றியம்
துாய்மை பணியாளர்கள் பற்றாக்குறையால் 'கப்' அடிக்கும் காட்டாங்கொளத்துார் ஒன்றியம்
ADDED : மார் 22, 2025 11:16 PM

காட்டாங்கொளத்துார்,
காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தில், குப்பை கழிவுகள் ஆங்காங்கு தேங்கி கிடப்பதற்கு துாய்மை பணியாளர்கள் பற்றாக்குறையே காரணம் என, அதிகாரிகள் கூறுகின்றனர். துப்புரவு பணியாளர்களுக்கு, மிக குறைந்த ஊதியம் வழங்குவதால், இந்த பணியில் ஈடுபட யாரும் முன்வருவதில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார்ர் ஒன்றியத்தில் 39 ஊராட்சிகள் உள்ளன. அனைத்து ஊராட்சியிலும் துப்புரவு பணியாளர்கள் எண்ணிக்கை பெரும் பற்றாக்குறையாக உள்ளதால், தேங்கும் குப்பை கழிவுகளை வாரம் ஒரு முறை மட்டுமே அகற்ற முடிகிறது.
தவிர, ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம், சராசரி கூலியைவிட பன்மடங்கு குறைவாக உள்ளது. எனவே, தற்போது பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் விரக்தியுடன் தான் வேலை செய்கிறார்கள்.
ஆகவே, பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, போதுமான சம்பளம் வழங்காவிடில், இப்போதுள்ள நிலைமைதான் தொடரும் என, அதிகாரிகள், துப்புரவு பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதிகாரிகள் கூறியதாவது:
ஒன்றியத்தின் 39 ஊராட்சிகளிலும் 289 துப்புரவு பணியாளர்கள்தான் உள்ளனர். இவர்களில் 240 நபர்களுக்கு மாத ஊதியம் 5,000 ரூபாய் எனவும், 49 நபர்களுக்கு 7, 000 ரூபாய் எனவும், சம்பளம் வழங்கப்படுகிறது.
அரசின் கடை நிலை ஊழியர் பெறும் ஊதியத்தில் ஐந்தில் ஒரு பங்குகூட இந்த ஊதியம் இல்லை. இதனால், துப்புரவு தொழிலில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் மன உளைச்சலுடன் தான் இப்பணியை தொடர்கின்றனர்.
இதே சம்பளத்தில் புதிய ஊழியர்கள் நியமிக்கும்படி, அரசுத் தரப்பில் அழுத்தம் தரப்படுகிறது ஆனால், இந்தச் சம்பளத்தில் பணியாற்ற எவரும் முன்வருவதில்லை. எனவே, ஊழியர்கள் சம்பளத்தை குறைந்தபட்சம் 10,000 ரூபாய் என மாற்ற வேண்டும்.
துப்புரவு பணியாளர்கள் கூறியதாவது:
காலை 7:00 மணிக்கு பணியைத் துவக்கி மாலை 4:00 மணிக்கு முடிக்கிறோம். ஆட்கள் பற்றாக்குறையால், ஒரு வார்டிற்கு வாரம் ஒரு முறை மட்டுமே செல்ல முடிகிறது.
கடினமான பணி செய்யும் எங்களுக்கு, மிகக் குறைந்த ஊதியம் வழங்கப்படுகிறது.
குறைவான ஊதியம் என்பதால், புதியவர்கள் இந்த வேலைக்கு வர விரும்புவதில்லை. எனவே, ஊதியத்தை, மூன்று மடங்காக உயர்த்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.