Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/செங்கை புறவழிச்சாலையில் பஸ்களை நிறுத்தாமல் புறக்கணிப்பு! ரூ.200 ஆட்டோக்களுக்கு 'அழ' வேண்டிய அவலம்

செங்கை புறவழிச்சாலையில் பஸ்களை நிறுத்தாமல் புறக்கணிப்பு! ரூ.200 ஆட்டோக்களுக்கு 'அழ' வேண்டிய அவலம்

செங்கை புறவழிச்சாலையில் பஸ்களை நிறுத்தாமல் புறக்கணிப்பு! ரூ.200 ஆட்டோக்களுக்கு 'அழ' வேண்டிய அவலம்

செங்கை புறவழிச்சாலையில் பஸ்களை நிறுத்தாமல் புறக்கணிப்பு! ரூ.200 ஆட்டோக்களுக்கு 'அழ' வேண்டிய அவலம்

ADDED : ஜூலை 28, 2024 11:40 PM


Google News
Latest Tamil News
செங்கல்பட்டு: செங்கல்பட்டு புறவழிச்சாலையில், அனைத்து போக்குவரத்து கழக அரசு பேருந்துகளும் நின்று செல்லும் என, அரசு மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் உத்தரவிட்டும், இரவு நேரங்களில் பேருந்துகள் நிற்காததால், பயணியர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அதனால், பரனுார் சுங்கச்சாவடியில் பேருந்துகள் நிறுத்தப்படுவதால், அங்கிருந்து செங்கல்பட்டு நகர்ப்பகுதிக்கு வர, ஆட்டோக்களுக்கு 200 ரூபாய்க்கு மேல் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது என, செங்கல்பட்டு பயணியர் வேதனை தெரிவிக்கின்றனர்.

செங்கல்பட்டு நகரில், கலெக்டர் அலுவலகம், நீதிமன்றங்கள், வங்கிகள், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, அரசு சட்டக்கல்லுாரி, ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் உள்ளன.

மகேந்திரா வேர்ல்டு சிட்டி, மறைமலை நகர், ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளில் தொழிற்சாலைகள் அதிகமாக உள்ளன. அவற்றில், தென்மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பணிபுரிந்து வருகின்றனர்.

பயணியர் அதிகரிப்பு


அவர்கள் பணிபுரியும் இடத்தின் அருகிலேயே, வாடகை வீடுகளில் அவர்கள் வசிக்கின்றனர்.இத்தொழிலாளர்கள் வார இறுதி, பண்டிகை நாட்களில் சொந்த ஊருக்கு சென்று வருகின்றனர்.

ஆன்மிக வழிபாடு சுற்றுலா உள்ளிட்டவற்றுக்காக, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்லும் பயணியரும் அதிகம்.

இதேபோல், தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் திருக்கழுக்குன்றம் ஆகிய பகுதிகளுக்கு, ஆன்மிக வழிபாட்டிற்கு வருகின்றனர். சுற்றுலா பகுதியான மாமல்லபுரம் வரும் பயணியரும் செங்கல்பட்டு வந்து செல்கின்றர்.

இவர்களின் வசதிக்காக, செங்கல்பட்டு புறவழிச்சாலையில் அனைத்து அரசு போக்குவரத்து கழக பேருந்துகளும் நின்று செல்ல வேண்டும் என, 2022ம் ஆண்டு அரசு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை அடுத்து, புறவழிச்சாலை மேம்பாலத்தின் கீழ், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், விழுப்புரம் கோட்டம் சார்பில், நேரக்காப்பாளர் அலுவலகம் இயங்கி வருகிறது.

வலியுறுத்தல்


துவக்கத்தில், புறவழிச்சாலை மேம்பாலத்தின் கீழ் அனைத்து அரசு பேருந்துகளும், சர்வீஸ் சாலை வழியாக பயணியரை ஏற்றி, இறக்கி சென்றன.

சில மாதங்களாக, விழுப்புரம் கோட்ட பேருந்துகள், பகல் நேரங்களில் மட்டும் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் நிற்கின்றன. இரவு நேரங்களில் நிற்பதில்லை.

அதேபோல், மற்ற போக்குவரத்து கழக பேருந்துகள் எப்போதுமே நிற்பதில்லை. இரவு 9:00 மணிக்கு மேல், புறவழிச்சாலையில் பேருந்துகள் நிற்காமல் செல்கின்றன.

ஆனால், புறவழிச்சாலையில் இருந்து, 3 கி.மீ., தொலைவில் உள்ள பரனுார் சுங்கச்சாவடியில், அனைத்து பேருந்துகளும் நிறுத்தப்படுகின்றன. இதனால், பயணியர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

மதுராந்தகம் புறவழிச்சாலையில் அனைத்து பேருந்துகளும் நின்று செல்கின்றன. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில், அரசு பேருந்துகளில், செங்கல்பட்டு புறவழிச்சாலை செல்ல பயணச்சீட்டு வழங்கப்படுவதில்லை.

எனவே, செங்கல்பட்டு புறவழிச்சாலையில், அனைத்து அரசு பேருந்துகளும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி வருகின்றனர்.

அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் பணியில் இருக்கும் பெரும்பாலான ஓட்டுனர்கள், செங்கல்பட்டு புறவழிச்சாலையில் பேருந்துகளை நிறுத்தாமல் உதாசீனப்படுத்துகின்றனர். ஆம்னி பேருந்துகளைபோல், அரசு போக்குவரத்து கழக பேருந்துகளும் நின்று செல்ல, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கோ.பாண்டியன்,

ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரி, திம்மாவரம்.

புறவழிச்சாலையில் இருந்து நகர் பகுதிக்கு வருவதற்கு, 200 ரூபாய் கொடுத்து, ஆட்டோவில் வர வேண்டி உள்ளது. புறவழிச்சாலையில் இருந்து புதிய பேருந்து நிலையம் வரை, நகர பேருந்து இயக்க வேண்டும். புறக்காவல் நிலையத்தில், போலீசார் 24 மணி நேரமும் பணியில் ஈடுபட வேண்டும். இரவில் போலீசார் பணியில் இல்லாததால், பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.

- இ.தாமரைச்செல்வி,

செங்கல்பட்டு.

செங்கல்பட்டு புறவழிச்சாலையில் உள்ள நேரக்காப்பாளர் அலுவலகத்தில், விழுப்புரம் கோட்ட பேருந்துகளின் நடத்துனர்கள், பதிவு செய்துவிட்டு செல்கின்றனர். மற்ற போக்குவரத்து கழக பேருந்துகள், நிற்காமல் மேம்பாலத்தின் வழியாக செல்கின்றன. அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல, உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

- அரசு போக்குவரத்து துறை அதிகாரிகள்,

செங்கல்பட்டு.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us