Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மதுக்கடைகளால் ஜி.எஸ்.டி., சாலையில் நெரிசல்...திணறல்!:அதிகாரிகளுடன் வியாபாரிகள் காரசார விவாதம்

 மதுக்கடைகளால் ஜி.எஸ்.டி., சாலையில் நெரிசல்...திணறல்!:அதிகாரிகளுடன் வியாபாரிகள் காரசார விவாதம்

 மதுக்கடைகளால் ஜி.எஸ்.டி., சாலையில் நெரிசல்...திணறல்!:அதிகாரிகளுடன் வியாபாரிகள் காரசார விவாதம்

 மதுக்கடைகளால் ஜி.எஸ்.டி., சாலையில் நெரிசல்...திணறல்!:அதிகாரிகளுடன் வியாபாரிகள் காரசார விவாதம்

ADDED : ஜூன் 19, 2024 12:26 AM


Google News
Latest Tamil News
தாம்பரம்:ஜி.எஸ்.டி., சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவது குறித்து, வியாபாரிகளுடனான ஆலோசனை கூட்டம், தாம்பரம் மாநகராட்சியில் நேற்று நடந்தது. அதில், சாலையோர டாஸ்மாக் கடைகளால் தான், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக, வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றுவது தொடர்பாக, தாம்பரத்தில் நேற்று, ஆலோசனை கூட்டம் நடந்தது.

தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் அழகுமீனா தலைமையில், வியாபாரிகள் சங்கம், குடியிருப்போர் நலச்சங்கம், வியாபாரிகள் மற்றும் நெடுஞ்சாலைத் துறை, போலீஸ், மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், மாநகராட்சி கமிஷனர் அழகுமீனா பேசியதாவது:

ஜி.எஸ்.டி., சாலையில், சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை, தொடர் விடுமுறை மற்றும் 'பீக் ஹவர்ஸ்' நேரத்தில், கடும் நெரிசல் ஏற்படுகிறது.

விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கத்தை கடக்க, குறைந்தபட்சம், 2 மணி நேரம் ஆகிறது. இதேபோல், பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல், தாம்பரம் - வேளச்சேரி, தாம்பரம் - முடிச்சூர், திருநீர்மலை, பல்லாவரம்- குன்றத்துார் சாலைகளிலும், கடும் நெரிசல் ஏற்படுகிறது.

போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கு, சாலையை ஆக்கிரமித்து கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்துவது, நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் அமைப்பது முக்கிய காரணமாக உள்ளன.

கடப்பேரி முதல் மெப்ஸ் சிக்னல் வரை, ஜி.எஸ்.டி., சாலையின் பெரும் பகுதியை ஒர்க் ஷாப் கடைக்காரர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.

பல்லாவரத்தில், வணிக வளாகங்களுக்கு வரும் வாகனங்கள், சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. இதுபோன்ற பல வகையான ஆக்கிரமிப்புகளால், ஆறுவழிச் சாலையான ஜி.எஸ்.டி., சாலை, இரண்டு வழிச்சாலையாக மாறிவிட்டது.

அதனால், நெரிசல் ஏற்படுவதை தடுக்க, அனைவரும் இணைந்து ஒத்துழைப்பு தர வேண்டும். ஒவ்வொரு கடைக்காரரும், தங்களது அளவை தாண்டி, சாலையோரத்தில் கடையை நீட்டிக்கக்கூடாது.

நடைபாதை என்பது நடப்பதற்கே; நடைபாதையை ஆக்கிரமிக்க வேண்டாம். நடைபாதையில் பொதுமக்கள் நடந்து செல்ல வழி ஏற்படுத்தினாலே, 90 சதவீத நெரிசல் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து, வியாபாரிகள் கூறியதாவது:

'டாஸ்மாக்' கடைகளால் தான், குரோம்பேட்டை, தாம்பரம், சானடோரியம் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டியுள்ள, டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும்.

ஓரிடத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய பின், அச்சாலையை அளந்து குறியிடுங்கள். அதைத் தாண்டி, கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு செய்ய மாட்டார்கள்.

அதேபோல், ஆக்கிரமிப்பு அகற்றப்படவுள்ள விஷயத்தை, வியாபாரிகள் சங்கங்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்தால், கடைக்காரர்களை அழைத்து விபரத்தை எடுத்துக்கூறி, மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு கொடுத்து அகற்றவும் தயாராக உள்ளோம்.

தாம்பரம் - முடிச்சூர் சாலையில், நெரிசல் ஏற்படுவதற்கு கடைக்காரர்கள் மட்டுமே காரணம் இல்லை.

இச்சாலையில், தனியார் வடம், காஸ் குழாய் பதிக்க தோண்டும் பள்ளங்களை, சம்பந்தப்பட்ட ஆட்கள் முறையாக மூடாததாலும், சாலையிலேயே குழாய்களை போடுவதாலும் நெரிசல் ஏற்படுகிறது. நேராக ஆய்வு செய்தால், உண்மை தெரியும்.

குரோம்பேட்டையில், மழைநீர் கால்வாய் கார் நிறுத்தமாக மாறிவிட்டதால் நெரிசல் ஏற்படுகிறது. நெடுஞ்சாலைத் துறைக்கும், போக்குவரத்து போலீசாருக்கும் இது தெரியாமல் போனது எப்படி?

சாலைகளை பராமரிக்க வேண்டியது, நெடுஞ்சாலைத் துறையே. ஆனால், தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள சாலைகளில் பள்ளம் தோண்டி, குண்டும் குழியுமாக மாற்றிவிட்டனர்.

எந்த சாலைகளை எடுத்தாலும், மழைநீர் கால்வாயை வளைத்து வளைத்துக் கட்டி நாசப்படுத்தி விட்டனர். பெரும்பாலான பிரச்னைகளுக்கு, நெடுஞ்சாலைத் துறையே காரணம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தொடரும் ஆக்கிரமிப்பு அகற்றம்


தாம்பரம் மாநகராட்சியில் உள்ள முக்கிய சாலைகளில், பெரும்பகுதியை ஆக்கிரமித்து வாகன நிறுத்தமாக பயன்படுத்துவது, நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் போடுவது, அளவை தாண்டி சாலையில் கடைகளை நீட்டிப்பது போன்ற பலவகையான ஆக்கிரமிப்புகளால், போக்குவரத்து நெரிசல் அதிகரித்துவிட்டது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
இது தொடர்பாக, புகார் வந்ததை அடுத்து, சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. நேற்று முன்தினம், பல்லாவரம் - குன்றத்துார் சாலையில், பம்மல் முதல் அனகாபுத்துார் வரை, இருபுறத்திலும் இருந்த ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றினர்.தொடர்ந்து, இரண்டாவது நாளாக மேற்கு தாம்பரம், கக்கன் சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகளை, மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் வாயிலாக இடித்து அகற்றினர். இந்த நடவடிக்கை தொடரும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us