/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/வனத்துறை ஒப்புதல் கிடைத்தும் சாலை பணி...இழுத்தடிப்பு!:விடிவு கிடைக்காமல் நல்லம்பாக்கத்தினர் அவதிவனத்துறை ஒப்புதல் கிடைத்தும் சாலை பணி...இழுத்தடிப்பு!:விடிவு கிடைக்காமல் நல்லம்பாக்கத்தினர் அவதி
வனத்துறை ஒப்புதல் கிடைத்தும் சாலை பணி...இழுத்தடிப்பு!:விடிவு கிடைக்காமல் நல்லம்பாக்கத்தினர் அவதி
வனத்துறை ஒப்புதல் கிடைத்தும் சாலை பணி...இழுத்தடிப்பு!:விடிவு கிடைக்காமல் நல்லம்பாக்கத்தினர் அவதி
வனத்துறை ஒப்புதல் கிடைத்தும் சாலை பணி...இழுத்தடிப்பு!:விடிவு கிடைக்காமல் நல்லம்பாக்கத்தினர் அவதி
ADDED : ஜூன் 09, 2024 02:41 AM

செங்கல்பட்டு:நல்லம்பாக்கம் வனப்பகுதியில் குறுக்கீடும் சாலையை சீரமைக்க, 6.90 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 'டெண்டர்' விடப்பட்டும் பணிகள் துவக்கப்படாமல் உள்ளது. இப்பணியை விரைந்து துவக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், சென்னை -- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து, ஊரப்பாக்கம், காட்டூர், காரணை புதுச்சேரி, அருங்கால், குழுளி, கீரப்பாக்கம், நல்லம்பாக்கம் வரை, நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் சாலை உள்ளது.
இச்சாலையில், நல்லம்பாக்கம் 2 கி.மீ., துாரம் சாலை, வனத்துறை வழியாக செல்கிறது.
இப்பகுதியில், மத்திய தார் சுடுகலவை இயந்திரங்கள், ஜல்லி அரவை என, தலா 100க்கும் மேற்பட்ட இயந்திரங்கள் உள்ளன. ரெடிமிக்ஸ் கான்கிரீட் கலவை இயந்திரங்கள் 30க்கும் மேற்பட்டவை உள்ளன.
இங்கிருந்து, 1,000க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. இப்பகுதியினர், கூடுவாஞ்சேரி, வண்டலுார், தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு, பள்ளி, கல்லுாரி, அத்தியாவசிய பணி, அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பு, அரசு மருத்துவமனை உள்ளிட்ட தேவைக்காக சென்று வருகின்றனர்.
இத்தடத்தில், தாம்பரம் -- கீரப்பாக்கம் வரை, மாநகர போக்குவரத்து கழகத்தின், தடம் எண்: 55டி என்ற அரசு பேருந்து இயக்கப்பட்டது.
இப்பகுதியில் இருந்து, தினமும் 1,000க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.
இதனால், சாலை பலத்த சேதமடைந்து, குண்டும் குழியுமாக பரிதாப நிலையில் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும், இந்த தடத்தில் இயக்கப்பட்ட தடம் எண்: 55டி என்ற மாநகர பேருந்து, 15 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, வனப்பகுதியில் சாலையை புதுப்பிக்க, வனத்துறை அனுமதி தராததால், நெடுஞ்சாலைத் துறையினர், சாலை அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது.
கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சேதம்அடைந்த இச்சாலை, கற்கள் பெயர்ந்து, அபாய பள்ளங்களுடன் காட்சிஅளிக்கிறது.
இந்நிலையில், சாலையை சீரமைக்கக் கோரி, தேர்தல் புறக்கணிப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை, அப்பகுதி வாசிகள் நடத்தினர்.
இதைத் தொடர்ந்து, சாலை அமைக்க வனத்துறை அனுமதி வழங்க, நெடுஞ்சாலைத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்தது.
இதையேற்று, சாலை அமைப்பதற்கு வனத்துறை அனுமதி அளித்து, நெடுஞ்சாலைத் துறைக்கு உத்தரவிட்டது. பின், நல்லம்பாக்கம் 2 கி.மீ., சாலை அமைக்க, 6.90 கோடி ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்தது.
இதனால், அப்பகுதி வாசிகளின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற உள்ளது. இப்பணிக்கு, கடந்த ஜன., மாதம் 'டெண்டர்' விடப்பட்டது.
ஆனால், பணிகள் துவக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுஉள்ளது. பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நல்லம்பாக்கம் சாலை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 'டெண்டர்' விடப்பட்டது.இப்பணிகளை 10 மாதங்களில் முடிக்க, தனியார் ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தி உள்ளோம். பணிகள் விரைவில் துவக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்,
செங்கல்பட்டு.
நல்லம்பாக்கம் சாலையை சீரமைக்க, பலகட்ட போராட்டத்திற்கு பின், வனத்துறை அனுமதி அளித்தது. சாலை அமைக்க நிதி ஒதுக்கியும், பணிகள் துவக்கப்படாமல் உள்ளது. பள்ளி, கல்லுாரி திறக்கப்படுவதால், சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ்.பிரபாகரன்,
வழக்கறிஞர், ஊனமாஞ்சேரி, வண்டலுார்.