Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ கொள்முதல் நிலையங்களில் 20,000 நெல்மூட்டை நாசம் வேதனை ரூ.62 கோடி நிலுவை வைத்ததால் விவசாயிகள் தவிப்பு

கொள்முதல் நிலையங்களில் 20,000 நெல்மூட்டை நாசம் வேதனை ரூ.62 கோடி நிலுவை வைத்ததால் விவசாயிகள் தவிப்பு

கொள்முதல் நிலையங்களில் 20,000 நெல்மூட்டை நாசம் வேதனை ரூ.62 கோடி நிலுவை வைத்ததால் விவசாயிகள் தவிப்பு

கொள்முதல் நிலையங்களில் 20,000 நெல்மூட்டை நாசம் வேதனை ரூ.62 கோடி நிலுவை வைத்ததால் விவசாயிகள் தவிப்பு

ADDED : மே 19, 2025 11:47 PM


Google News
Latest Tamil News
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில், மத்திய அரசு தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு நெல் கொள்முதல்நிலையங்களில், 20,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி உள்ளன. மேலும்,நெல் கொள்முதல் செய்த வகையில், 62 கோடி ரூபாயை விவசாயிகள் வங்கிக் கணக்கில் வரவு வைக்காததால், விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நவரை பருவத்தில், 75,475 ஏக்கர் விவசாய நிலங்களில் பொன்னி, பி.பி.டி., குண்டு, என்.எல்.ஆர்., உள்ளிட்ட நெல் சாகுபடி செய்யப்பட்டது.

விவசாயிகளிடம் இருந்து, 1.6 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகம் சார்பில், 99 மற்றும் மத்திய அரசின் தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் 41 என, மொத்தம் 140 அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில், நெல் கொள்முதல் செய்யப்பட்டது.

இதில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் நடத்திய நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகள் விற்பனை செய்த நெல்லிற்கான தொகை, அவரவர் வங்கி கணக்கில் உடனே செலுத்தப்பட்டது.

ஆனால், மத்திய அரசின் தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு நடத்திய, 41 கொள்முதல் நிலையங்களில், விவசாயிகள் நெல் விற்பனை செய்து, 45 நாட்கள் ஆகியும், 62 கோடி ரூபாய் இன்னும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படாததால், வேதனையில்உள்ளனர். இதை கண்டித்து, சில நாட்களாக, பல்வேறு இடங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், சில நாட்களாக பெய்துவரும் மழையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் முள்ளிப்பாக்கம், பெரியவிப்பேடு, சூணாம்பேடு, நான்கொளத்துார், பொலம்பாக்கம், சிறுங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில், நெல் கொள்முதல் நிலையங்களில், 20,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்துள்ளன. பெரும்பாலான நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் மூட்டைகளை அடுக்கி தார்ப்பாய் போட்டிருந்தாலும், பூமியில் மழைநீர் பெருக்கெடுத்து, மூட்டைகள் நனைந்துள்ளன.

மேலும், நெல் மூட்டைகளின் ஈரப்பதத்தால் நெல் முளைப்பு ஏற்பட்டு உள்ளது. முறையான பாதுகாப்பு இல்லாததே இதற்கு காரணம் என, விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.

இதனால், கொள்முதல்நிலையங்களில், விவசாயிகள் கொட்டி வைத்துள்ள நெல்லை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் வாயிலாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொள்முதல் செய்துள்ள நெல் மூட்டைகளை, சேமிப்பு கிடங்கில் பத்திரப்படுத்த வேண்டும் எனவும் எதிர்பார்க்கின்றனர்.

நெல்லை பாதுகாக்க தார்ப்பாய் வழங்கினாலும், கனமழைக்குதாங்காமல், நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசமாகிஉள்ளன. பல பகுதிகளில் செயல்படும் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்த விவசாயிகளுக்கு, வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படவில்லை. இதனால், பள்ளி, கல்லுாரி கட்டணங்கள் செலுத்த முடியாமல், விவசாயிகள் தவித்து வருகிறோம். விவசாயிகளுக்கு உடனே பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- நா.ராஜி, விவசாயி, தொன்னாடு.

பாதிப்பு இல்லை

மத்திய அரசு தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு நடத்திய நெல் கொள்முதல் நிலையங்களை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. விவசாயிகளுக்கு 62 கோடி ரூபாய் நிலுவை பணம் வழங்க, அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. நெல் மூட்டைகள் நனைந்ததால், விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

- வேளாண்மை துறை அதிகாரிகள்,

செங்கல்பட்டு.

விவசாயிகள் மறியல்

திருக்கழுக்குன்றம் அடுத்த வழுவதுார் ஊராட்சியில் அடங்கிய காட்டூர் கிராமத்தில் செயல்படும் கொள்முதல் நிலையத்தில், 100க்கும் மேற்பட்ட விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.ஆனால், அதற்கான தொகையை, இரண்டு மாதங்களாகியும் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்காமல் உள்ளனர்.இதனால், விவசாயிகள் வாங்கிய கடனை அடைக்க முடியாமல், பல்வேறு வகையில் விரக்தியடைந்து உள்ளனர்.இதனால் நேற்று, அப்பகுதி விவசாயிகள் திருக்கழுக்குன்றம் - கருங்குழி சாலையில், காட்டூர் பேருந்து நிறுத்தம் அருகே சாலையில் அமர்ந்து, மறியலில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்த திருக்கழுக்குன்றம் போலீசார்சம்பவ இடத்திற்கு வந்து, விவசாயிகளிடம் பேச்சு நடத்தி, மறியலை கைவிட கூறினர். மேலும், விவசாயிகளுக்கு பணத்தை வழங்கவும்வழிவகை செய்வதாக போலீசார் உறுதிஅளித்தனர்.இதையடுத்து, விவசாயிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us