Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ கிளாம்பாக்கம் கால நிலை பூங்கா முழு நேரமும் திறந்திருக்க எதிர்பார்ப்பு

கிளாம்பாக்கம் கால நிலை பூங்கா முழு நேரமும் திறந்திருக்க எதிர்பார்ப்பு

கிளாம்பாக்கம் கால நிலை பூங்கா முழு நேரமும் திறந்திருக்க எதிர்பார்ப்பு

கிளாம்பாக்கம் கால நிலை பூங்கா முழு நேரமும் திறந்திருக்க எதிர்பார்ப்பு

ADDED : மே 20, 2025 12:36 AM


Google News
Latest Tamil News
கிளாம்பாக்கம், கிளாம்பாக்கம் பேருந்து முனையம் அருகே அமைக்கப்பட்டுள்ள காலநிலைப் பூங்காவை, காலை 5:30 மணி முதல் இரவு 10:00 மணி வரை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என, பேருந்து பயணியர் எதிர்பார்க்கின்றனர்.

வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து முனையம் அருகே, ஜி.எஸ்.டி., சாலையோரம், 16 ஏக்கர் பரப்பில், 15.2 கோடி ரூபாய் செலவில், காலநிலைப் பூங்கா உருவாக்கப்பட்டு, கடந்தாண்டு திறக்கப்பட்டது.

இதில் அகழிகள், மழைநீர் குளங்கள், உயர்மட்ட நடைபாதை, மரத்தோட்டம், சிறுவர் விளையாட்டு பூங்கா, விளையாட்டு மைதானம், திறந்தவெளி அரங்கம் மற்றும் கண்காட்சி மேடைகள் என, பல பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.

தவிர, 50 கார்கள் மற்றும் 500 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையிலான,'பார்க்கிங்' சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், உடற்பயிற்சிக்கூடம், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. பூங்காவை சுற்றிப் பார்க்க, வாகன நிறுத்த கட்டணம் இல்லை.

அரிய வகை தாவரங்கள், பூச்செடிகள், கொடிகளும் வளர்க்கப்படுகின்றன. இந்த பூங்கா தற்போது, காலை 5:30 மணி முதல் 9:00 மணி வரையிலும், மாலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரையிலும், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படுகிறது.

இந்த கால அளவை, காலை 5:30 மணி முதல், தொடர்ந்து இரவு 10:00 மணி வரை நீட்டிக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, பேருந்து பயணியர் கூறியதாவது:

வெளியூர் செல்வதற்காக கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரும் போது, இந்த பூங்காவில் சிறிது நேரம் இளைப்பாறி, அதன் பின் பயணத்தை தொடரும் போது, மனம் புத்துணர்ச்சி பெறுகிறது.

தவிர, குழந்தைகளுடன் வரும் பெற்றோர் பொழுதுபோக்க, சிறந்த இடமாக உள்ளது. புதர் காடுகள், கடலோர நிலப்பரப்பு, புல்வெளிகள், அழிந்துவரும் பூர்விக காடுகள், குன்றுகள் பற்றி இங்கு வைக்கப்பட்டுள்ள குறிப்புகள் சுவரசியமாக உள்ளன.

இப்பூங்கா குறிப்பிட்ட நேரமே திறந்திருப்பதால், பயணியர் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் உள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டி உள்ளது.

எனவே, காலை 5:30 மணி முதல் இரவு 10:00 மணி வரை தொடர்ந்து பூங்கா திறந்திருந்தால், அனைத்து பயணியரும் பூங்காவில் இளைப்பாறி, புத்துணர்ச்சியுடன் பயணிப்பர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us