Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/மாமல்லபுரத்தை நகராட்சியாக தரம் உயர்த்த... எதிர்பார்ப்பு!

மாமல்லபுரத்தை நகராட்சியாக தரம் உயர்த்த... எதிர்பார்ப்பு!

மாமல்லபுரத்தை நகராட்சியாக தரம் உயர்த்த... எதிர்பார்ப்பு!

மாமல்லபுரத்தை நகராட்சியாக தரம் உயர்த்த... எதிர்பார்ப்பு!

ADDED : ஜூன் 17, 2024 03:21 AM


Google News
மாமல்லபுரம் : மாமல்லபுரம் உள்ளிட்ட முக்கிய பேரூராட்சிப் பகுதிகளை, நகராட்சியாக தரம் உயர்த்துவது குறித்து, சட்டசபை கூட்டத்தில் அறிவிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில், மாமல்லபுரம் பேரூராட்சி முக்கிய உள்ளாட்சி நிர்வாகமாக உள்ளது. இங்குள்ள பல்லவர் சிற்பங்களை, உள்நாடு, வெளிநாட்டு பயணியர் காண்கின்றனர்.

இப்பகுதி, கடந்த 30 ஆண்டுகளுக்கு முன், சிறிய கிராமம். மக்கள்தொகை குறைவு. சுற்றுலா வளர்ச்சியின்றி, பயணியரும் குறைவாகவே வந்தனர்.

மத்திய, மாநில அரசுகளின் வளர்ச்சித் திட்டங்களால், நாளடைவில் சுற்றுலா மேம்பட்டு, தற்போது சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்துள்ளது.

ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, இங்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், கடந்த 1964ல், நகரிய நிர்வாகமாக இவ்வூரை வகைப்படுத்தி நிர்வகித்தது.

சிறப்பு நிலை தரம்


நாளடைவில், சுற்றுலா வளர்ச்சியடைந்தது. சுற்றுலாவை சார்ந்து, பயணியர் விடுதிகள், சிற்பக்கூடங்கள், கைவினைப்பொருட்கள் விற்பனை கடைகள், பிற தொழில்கள் பெருகின.

தொழில், வியாபாரம் கருதி, பிற மாவட்ட பகுதியினர் அதிகளவில் குடியேறி, இவ்வூர் விரிவடைந்தது. இதையடுத்து, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் நிர்வாகம் உத்தரவிட்டு, கடந்த 1994ல், பேரூராட்சி - சிறப்பு நிலை தரத்திற்கு உயர்த்தியது.

இதற்கிடையே, பேரூராட்சி நிர்வாக பகுதிகளை, சிறப்பு ஊராட்சி நிர்வாகமாக, தமிழக அரசு, கடந்த 2004ல் அறிவித்து, சிறப்பு ஊராட்சியாக மாறியது.

பின், அரசின் உத்தரவில், கடந்த 2005 முதல் மீண்டும் பேரூராட்சியாக செயல்படுகிறது. பிரதமர் மோடி - சீன அதிபர் ஷீ ஜின்பிங், கடந்த 2019ல், முறைசாரா மாநாடாக, இங்கு சந்தித்தனர்.

கடந்த 2022ல், 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, கடந்த ஆண்டு 'ஜி - 20' நாடுகளின், சில மாநாடுகள் இங்கு நடத்தப்பட்டது. இந்நிகழ்வுகள், சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்தன.

சர்வதேச சுற்றுலா முக்கியத்துவம் பெற்றுள்ள இப்பகுதியை, நகராட்சிப் பகுதியாக தரம் உயர்த்த, தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, கடந்த ஆண்டு முடிவெடுத்தது.

கடந்த 2011 மற்றும் கடந்த ஆண்டின் மக்கள்தொகை, 2019 - 20 முதல், 2021 - 22 வரை, ஆண்டு வருமானம், மூன்றாண்டுகள் சராசரி வருமானம் உள்ளிட்ட விபரங்களை, அத்துறை கடந்த ஆண்டு பெற்றது.

பேரூராட்சிக்கு கடிதம்


நகராட்சிப் பகுதியில், மக்கள் 30,000த்திற்கும் மேல் வசிக்க வேண்டும். இங்கு மக்கள் தொகை குறைவு. ஆனாலும், சர்வதேச சுற்றுலா பகுதி முக்கியத்துவம் கருதி, நகராட்சியாக தரம் உயர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்.,ல் நடந்த, 2023 - 24 சட்டசபை மானிய கோரிக்கை விவாதத்தில், முக்கிய பேரூராட்சிப் பகுதிகளை, நகராட்சியாக தரம் உயர்த்துவது குறித்து, நகராட்சி நிர்வாக அமைச்சர் நேரு அறிவித்தார்.இவ்வூரை நகராட்சியாக தரம் உயர்த்த, தீர்மான ஒப்புதல் அளிக்குமாறு, அத்துறையின் முதன்மை செயலர், பேரூராட்சி நிர்வாகத்திடம் கடிதம் அளித்தார்.

பேரூராட்சி நிர்வாகத்தினர், இதுதொடர்பாக, கடந்த ஆண்டு நவ., 22ம் தேதி அவசர கூட்டம் நடத்தி, தீர்மானம் இயற்றி ஒப்புதல் அளித்தனர்.

தற்போது, ஜூன் 20ம் தேதி சட்டசபை கூட்டம் துவங்குகிறது. நகராட்சி நிர்வாக மானிய கோரிக்கை விவாதம் நடக்கும் 22ம் தேதி, மாமல்லபுரம் உள்ளிட்ட முக்கிய பேரூராட்சிப் பகுதிகளை, நகராட்சியாக தரம் உயர்த்துவது குறித்து அறிவிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

மாமல்லபுரம் பேரூராட்சி - ஒரு பார்வை

மாமல்லபுரம் பேரூராட்சிப் பகுதியின் பரப்பு, 12.568 ச.கி.மீ.,. மாமல்லபுரம், வெண்புருஷம், பூஞ்சேரி, பவழக்காரன்சத்திரம், தேவனேரி ஆகிய பகுதிகளுடன், 15 வார்டுகள் உள்ளன.2011 கணக்கெடுப்பின்படி, மக்கள்தொகை 15,000 பேர். தற்போது, 19,000த்திற்கும் மேல் வசிக்கின்றனர். வார இறுதி, அரசு விடுமுறை நாட்களில் பயணியர் குவிகின்றனர்.திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எடையூர் ஊராட்சி கொக்கிலமேடு, வடகடம்பாடி ஊராட்சி பெருமாளேரி உள்ளிட்ட பகுதிகளை, மாமல்லபுரத்துடன் இணைக்க வாய்ப்புள்ளது.பேரூராட்சி நிர்வாகத்தின் ஆண்டு சராசரி வருவாய் 10.28 லட்சம் ரூபாய். பேரூராட்சி செயல் அலுவலராக பணிபுரிந்த கணேஷ், கடந்த மே 31ம் தேதி ஓய்வுபெற்றார்.கருங்குழி பேரூராட்சி செயல் அலுவலர் அருள்குமார், அச்சிறுபாக்கத்திற்கு கூடுதல் பொறுப்பு வகிக்கும் நிலையில், தற்போது மாமல்லபுரத்திற்கும் கூடுதல் பொறுப்பு வகிக்கிறார்.நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டால், ஆணையர் நியமிக்கப்படலாம் என்பதால், தற்போதைக்கு செயல் அலுவலராக பணியாற்ற, அலுவலர்கள் தயங்குவதாக தெரிகிறது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us