/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ஊராட்சி பொது பயன்பாட்டு நிலங்கள் ஆக்கிரமிப்பு...ஜோர்!:அதிகாரிகள் மெத்தனத்தால் கிடப்பில் பட்டா மாற்றம்ஊராட்சி பொது பயன்பாட்டு நிலங்கள் ஆக்கிரமிப்பு...ஜோர்!:அதிகாரிகள் மெத்தனத்தால் கிடப்பில் பட்டா மாற்றம்
ஊராட்சி பொது பயன்பாட்டு நிலங்கள் ஆக்கிரமிப்பு...ஜோர்!:அதிகாரிகள் மெத்தனத்தால் கிடப்பில் பட்டா மாற்றம்
ஊராட்சி பொது பயன்பாட்டு நிலங்கள் ஆக்கிரமிப்பு...ஜோர்!:அதிகாரிகள் மெத்தனத்தால் கிடப்பில் பட்டா மாற்றம்
ஊராட்சி பொது பயன்பாட்டு நிலங்கள் ஆக்கிரமிப்பு...ஜோர்!:அதிகாரிகள் மெத்தனத்தால் கிடப்பில் பட்டா மாற்றம்
ADDED : ஜூலை 09, 2024 08:07 PM
செங்கல்பட்டு:ஊராட்சிகளில் பொது பயன்பாட்டிற்கு உள்ள நிலங்களை, ஊராட்சி பெயரில் பட்டா மாற்றம் செய்ய, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். இந்த நிலங்களை சமூக விரோத கும்பல் ஆக்கிரமித்து, விற்பனை செய்வதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
சென்னையின் புறநகர் பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு, மறைமலைநகர், மகேந்திரா வேர்ல்டு சிட்டி, திருப்போரூர், கேளம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், அதிகளவில் தனியார் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.
இங்கு, பணிபுரிபவர்கள் மற்றும் சென்னையைச் சேர்ந்தவர்கள், அதிகளவில் வீட்டுமனைகளை வாங்கி வருகின்றனர். இதைத்தொடர்ந்து செங்கல்பட்டு, திருப்போரூர், தாம்பரம், பல்லாவரம், திருக்கழுக்குன்றம், மதுராந்தகம், செய்யூர் ஆகிய தாலுகாக்களில், விவசாய நிலங்கள் அதிகளவில் உள்ளன.
இந்த நிலங்களை தனியார் நிறுவனங்கள் விலைக்கு வாங்கி, வீட்டுமனைகளாக பிரித்து, டி.டி.சி.பி., சி.எம்.டி.ஏ., ஊராட்சி நிர்வாகம் ஆகியவற்றின் அங்கீகாரம் பெற்று விற்பனை செய்கின்றன.
இதில், செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம், திருப்போரூர் ஆகிய தாலுகா பகுதிகளில், வீட்டுமனைகள் அதிகளவில் உள்ளன. இதை தனியார் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நிறுவனங்களைச் சேர்ந்தோர் பொது பயன்பாட்டிற்காக, பூங்கா அமைப்பதற்கான இடத்தை, ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் மாநகராட்சி நிர்வாகங்களுக்கு ஒதுக்கீடு செய்தது.
இந்த நிலங்களுக்கு பட்டா மாற்றம் செய்ய, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஆணையாளர்கள், செயல் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊராட்சி பகுதிகளில் பொது பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட நிலங்களை, சமூக விரோத கும்பல் ஆக்கிரமிப்பு செய்து, விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதன்பின், பொது பயன்பாட்டில் உள்ள நிலங்களை பட்டா மாற்றம் செய்ய வருவாய்த் துறை, வட்டார வளர்ச்சித் துறை இணைந்து, 2022ம் ஆண்டு பட்டா மாற்றம் செய்ய, சிறப்பு கூட்டம் நடத்தி மாற்றம் செய்தனர்.
ஆனால், பொது பயன்பாட்டு நிலங்களை மாற்றம் செய்வதில், அதிகாரிகள் ஆர்வம் காட்டுவதில்லை. இதை கண்காணிக்க வேண்டிய ஊராட்சிகள் உதவி இயக்குனரும், கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டி வருகிறார்.
இதை பயன்படுத்தி, பொது பயன்பாட்டில் உள்ள நிலங்களை ஆக்கிரமித்து, சமூக விரோத கும்பல் விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
புனிததோமையார்மலை ஊராட்சி ஒன்றியத்தில் 228, திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்தில் 228, திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் 140, காட்டாங்கொளத்துாரில், 301, மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்தில், 90, லத்துார் ஊராட்சி ஒன்றியத்தில் 35.
சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்தில், 97, அச்சிறுபாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில், 89 என, மொத்தம் 1,208 வீட்டுமனை பகுதிகளில், பொது பயன்பாட்டிற்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதில், 875 பொது பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்ட நிலங்களுக்கு மட்டும் பட்டா மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. 333 நிலங்கள் பட்டா மாற்றம் செய்ய வருவாய்த் துறைக்கு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.
மீதமுள்ள நிலங்களுக்கு, பட்டா மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
எனவே, பொது பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்ட நிலங்களுக்கு, பட்டா மாற்றம் செய்து, ஊராட்சிக்கு சொந்தமானது என, பெயர் பலகை மற்றும் பூங்கா, விளையாட்டு திடல் அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொது பயன்பாட்டிற்கு ஒதுக்கீடு செய்த நிலங்களை, உள்ளாட்சி நிர்வாகங்கள் பெயரில் பட்டா மாற்றம் செய்ய வேண்டும். அதிகாரிகள் பட்டா மாற்றம் செய்யப்படாததால், நிலம் ஆக்கிரமிக்கப்படுகிறது. அரசுக்கு ஒதுக்கிய நிலங்களை, அதிகாரிகள் பாதுகாக்க வேண்டும்.
வி.ஏ.தமிழ்ச்செல்வன்,
சமூக ஆர்வலர்,
செங்கல்பட்டு.