Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ வண்டலுார் மேம்பாலத்தின் உறுதித்தன்மையில்... சந்தேகம்: 'டமால் டமால்' சத்தத்தால் வாகன ஓட்டிகள் பீதி

வண்டலுார் மேம்பாலத்தின் உறுதித்தன்மையில்... சந்தேகம்: 'டமால் டமால்' சத்தத்தால் வாகன ஓட்டிகள் பீதி

வண்டலுார் மேம்பாலத்தின் உறுதித்தன்மையில்... சந்தேகம்: 'டமால் டமால்' சத்தத்தால் வாகன ஓட்டிகள் பீதி

வண்டலுார் மேம்பாலத்தின் உறுதித்தன்மையில்... சந்தேகம்: 'டமால் டமால்' சத்தத்தால் வாகன ஓட்டிகள் பீதி

ADDED : செப் 17, 2025 09:47 PM


Google News
Latest Tamil News
வண்டலுார்:வண்டலுார், ரயில் நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தில், கான்கிரீட் சாலையை இணைக்க அமைக்கப்பட்டுள்ள இரும்பு சட்டங்களை வாகனங்கள் கடக்கும் போது, காதை பிளக்கும் வகையில், பயங்கர சத்தம் உருவாகிறது. இதனால் அச்சமடையும் வாகன ஓட்டிகள், மேம்பாலத்தின் உறுதித்தன்மை குறைந்துள்ளதாக சந்தேகப்படுகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுார் ரயில் நிலையம் அருகிலிருந்து, வாலாஜாபாத் சாலை துவங்குகிறது.

இந்த சாலை வழியாக காஞ்சிபுரம், வேலுார், பெங்களூரு, ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன.

காத்திருப்பு வண்டலுார் ரயில் நிலையம் வழியாக புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள் அடிக்கடி சென்று வருவதால், ரயில் தண்டவாளத்தைக் கடந்து வாலாஜாபாத் சாலைக்கு செல்ல, வாகனங்கள் அதிக நேரம் காத்துக்கிடந்தன.

இதனால், ஜி.எஸ்.டி., சாலையில் கடும் போக்கு வரத்து நெரிசலும், அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டன.

இதற்கு தீர்வாக, ஜி.எஸ்.டி., சாலையுடன், வாலாஜாபாத் சாலையை இணைக்கும்படி, ரயில்வே மேம்பாலம் கட்ட, கடந்த 2011ல், அ.தி.மு.க., ஆட்சியில் 27 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது .

அதன்படி, தாம்பரம் -- செங்கல்பட்டு மார்க்கத்தில் 600 மீ., செங்கல்பட்டு -- தாம்பரம் மார்க்கத்தில், 600 மீ., ஜி.எஸ்.டி., சாலை --- வாலாஜாபாத் சாலை இணைப்பிற்கு இருவழிப் பாதையாக, தலா 150 மீட்டர் என, மொத்தம் 1.5 கி.மீ., துாரம், 25 அடி அகலம் உள்ள மேம்பாலம் கட்டப்பட்டு, 2012ல் பணிகள் முடிந்து பயன் பாட்டிற்கு திறக்கப்பட்டது.

இரும்பு சட்டங்கள் இந்த பாலத்தின் மேல்பகுதி கட்டுமானத்தில் உள்ள கான்கிரீட் சாலை, 84 பெட்டிகளாக அமைக் கப்பட்டு, அவற்றை ஒன்றுடன் ஒன்று இணைக்க, இரும்பு சட்டங்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

இந்நிலையில் கடந்தாண்டு, சிமென்ட் சட்டங்களை இணைக்கும், 'எக்ஸ்பான்ஷன் ஜாய்ன்டு' எனப்படும் இணைப்பு விரிவு பகுதிகளில், இரண்டு இடங்களில் பொருத்தப்பட்டிருந்த இரும்பு சட்டங்கள் உடைந்தன.

இதனால், வாகனங்கள் மேம்பாலத்தில் செல்லும் போது, உடைந்த இரும்பு சட்டங்கள் கான்கிரீட் சாலையுடன் உராய்ந்து, காதைப் பிளக்கும் சத்தம் ஏற்பட்டு வந்தது.

ஒரு மணி நேரத்திற்கு, 2,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த பாலத்தின் மீது பயணிப்பதால், தினமும் சத்தம் உருவாகி, வாகன ஓட்டிகளை அச்சுறுத்தியது.

இது குறித்து, வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் என, பல தரப்பிலிருந்தும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.

சீரமைப்பு பணி இதையடுத்து, மேம் பாலத்தை ஆய்வு செய்த தமிழக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், உடைந்த இரும்பு சட்டங்களை அப்புறப்படுத்தி, தேவையான இடங்களில் புதிய இரும்பு சட்டங்களை பொருத்த முடிவு செய்தனர்.

அதன்படி, கடந்த ஜூலை மாதம் 20ம் தேதி, இரும்பு சட்டங்களை சீர் செய்யும் பணிகள் துவக்கப்பட்டன.

அந்த பணி, ஒரு வார காலம் தொடர்ந்த நிலையில், கூடுதலாக 33 இடங்களில் இரும்பு சட்டங்கள் சேதமாகி உள்ளதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, 45 நாட்கள் தொடர்ந்து பணிகள் செய்து, அனைத்து இரும்பு சட்டங்களையும் சரி செய்தனர்.

இந்நிலையில், சரி செய்யப்பட்ட இரும்பு சட்டங்கள் மீண்டும் சேதமடைந்து, மேம்பாலத்தின் மீது வாகனங்கள் செல்லும் போது, அதே போன்று காதைப் பிளக்கும் சத்தம் ஏற்பட்டு வருகிறது.

இந்த சத்தம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பாலத்தின் உறுதித்தன்மை குறைந்துள்ளதாக, வாகன ஓட்டிகள் சந்தேகம் எழுப்பி உள்ளனர்.

10 நாளில் மீண்டும் சத்தம்


இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது: தாம்பரம் -- கூடுவாஞ்சேரி மார்க்கத்தில், மிக முக்கிய சந்திப்பாக வண்டலுார் மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் வழியாகவே வாலாஜாபாத், காஞ்சிபுரம், வேலுார், பெங்களூரு உட்பட பல முக்கிய இடங்களுக்கு அரசு பேருந்துகள் உட்பட, பலவித கனரக வாகனங்கள் பயணிக்கின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு முன், மேம்பாலத்தில் கனரக வாகனங்களை இயக்கும் போது, ஓரிடத்தில் மட்டும் சிறிய அளவில் சத்தம் எழுந்தது. நாளடைவில், பல இடங்களில் இதுபோல சத்தம் ஏற்பட்டது. தவிர, சத்தத்தின் அளவும் அதிகரித்துக் கொண்டே சென்றது.
இதுகுறித்து, புகார்கள் வந்ததால், தமிழக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, கடந்த ஜூலையில் இரும்பு சட்டங்களை சீரமைக்கும் பணிகள் துவக்கப்பட்டு, ஆகஸ்டில் முடிந்தன. ஆனால், சீரமைப்பு பணிகள் முடிந்து 10 நாட்களே ஆன நிலையில், மீண்டும் இரும்பு சட்டங்களில் இருந்து காதைக் கிழிக்கும் அளவிற்கு சத்தம்ஏற்படுகிறது. தவிர, மேம்பாலத்தில் உள்ள கான்கிரீட் சாலையும், பல இடங்களில் பெயர்ந்து, விரிசலுடன் காணப்படுகிறது. இந்த விரிசல் பகுதிகளும், நாளுக்கு நாள் பெரிதாகி வருகின்றன. மழைக் காலங்களில் இந்த விரிசல்களில் தண்ணீர் புகுந்து, பாலத்தை வலுவிழக்கச் செய்யும். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, இரும்பு சட்டங்களில் இருந்து எழும் சத்தத்தை நீக்க, தரமான முறையில் பழுது பார்ப்பு பணிகளை செய்ய வேண்டும். தவிர, ஆங்காங்கே பெயர்ந்துள்ள சிமென்ட் பூச்சுகளையும் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.



துாக்கமின்றி தவிப்பு


அப்பகுதிமக்கள் கூறியதாவது: கார் உள்ளிட்ட இலகு ரக வாகனங்கள் பயணிக்கும் போது, மேம்பாலத்தில் ஏதோ விபத்து நடப்பது போல் சத்தம் கேட்கிறது. கனரக வாகனங்கள் பயணிக்கும் போது, பாலம் உடைந்து விழுவது போன்று, 500 மீட்டர் சுற்றுப்பகுதி யில், சத்தம் காதைப் பிளக்கிறது. இரவு நேரங்களில் சத்தத்தின் அளவு அதிகமாக உள்ளதால், துாக்கமின்றி தவிக்கிறோம். பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன், மேம்பாலத்தின் உறுதித்தன்மையை அதிகாரிகள் சோதனை செய்து, சத்தம் வராமல் சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us