/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ பணம், பட்டா பெற்றும் வீட்டை காலி செய்யாமல்...அடாவடி:ஆக்கிரமிப்பாளர்களால் ஆத்துாரில் சாலை பணி பாதிப்பு பணம், பட்டா பெற்றும் வீட்டை காலி செய்யாமல்...அடாவடி:ஆக்கிரமிப்பாளர்களால் ஆத்துாரில் சாலை பணி பாதிப்பு
பணம், பட்டா பெற்றும் வீட்டை காலி செய்யாமல்...அடாவடி:ஆக்கிரமிப்பாளர்களால் ஆத்துாரில் சாலை பணி பாதிப்பு
பணம், பட்டா பெற்றும் வீட்டை காலி செய்யாமல்...அடாவடி:ஆக்கிரமிப்பாளர்களால் ஆத்துாரில் சாலை பணி பாதிப்பு
பணம், பட்டா பெற்றும் வீட்டை காலி செய்யாமல்...அடாவடி:ஆக்கிரமிப்பாளர்களால் ஆத்துாரில் சாலை பணி பாதிப்பு
ADDED : மே 30, 2025 01:52 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு - வாலாஜாபாத் வரையிலான சாலை பணிகள் முடியும் தறுவாயில் உள்ள நிலையில், ஆத்துார் பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்படாததால், இழுபறி நீடிக்கிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றி, பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் முதல் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வரை, மாநில நெடுஞ்சாலை உள்ளது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் சென்னையையொட்டி அமைந்துள்ள நிலையில், வாகனங்களின் எண்ணிக்கை பெருகி, போக்குவரத்து அதிகரித்து உள்ளது.
செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலையானது வேலுார் மாவட்டம், ஆந்திர மாநில பகுதி வரை இணைக்கிறது.
இந்த சாலை போக்குவரத்திற்கு ஏற்ப அகலம் இல்லாமல், குறுகியதாக இருந்தது.
சாலையிலுள்ள பாலங்களும் சிறிய அளவிலேயே இருந்தன. கன ரக சரக்கு வாகனங்கள், டாரஸ் லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் அதிக அளவில் செல்வதால், இந்த சாலை சேதமடைந்து, போக்குவரத்திற்கு பயனற்றதாக மாறியது.
இதனால், இந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் நடந்து வந்தன. இதை தவிர்க்க, சாலையை விரிவாக்கம் செய்து மேம்படுத்துவது அவசியம் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, சென்னை - கன்னியாகுமரி தடத்தில், செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலையை மேம்படுத்த முடிவெடுக்கப்பட்டது.
அத்துடன், 2018ம் ஆண்டு நெடுஞ்சாலைத் துறைக்கு, 448 கோடி ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்தது. இதைத்தொடர்ந்து, செங்கல்பட்டில் இருந்து வாலாஜாபாத் அடுத்த வெண்குடி கிராமம் வரை, நான்கு வழிச் சாலையாக மேம்படுத்தும் பணிகள் துவங்கி, நடைபெற்று வருகின்றன.
வெண்குடி முதல் காஞ்சிபுரம் வரை, 13 கி.மீ., தொலைவுக்கு, இருவழிச் சாலையாக அமைக்கப்படுகிறது. இப்பணியை 2020ம் ஆண்டு துவங்கி, 2024 மார்ச்சில் முடிக்க வேண்டுமென, ஒப்பந்ததாரர்களுக்கு நெடுஞ்சாலைத் துறையினர் உத்தரவிட்டனர்.
இதன்படி, வெண்குடி - காஞ்சிபுரம் வரை இருவழிச் சாலை மற்றும் செங்கல்பட்டு - வாலாஜாபாத் வரை சாலை பணிகள் முடிந்துள்ளன. இந்நிலையில், செங்கல்பட்டு அடுத்த ஆத்துார் பகுதியில், சாலை பகுதியில் ஆக்கிரமித்து இருந்த 193 வீட்டு உரிமையாளர்களுக்கு, 2022ம் ஆண்டு நெடுஞ்சாலைத் துறையினர், இழப்பீட்டுத் தொகையாக மொத்தம், 3.25 கோடி ரூபாய் வழங்கினர்.
இதில், 153 பேர் வீடுகளில் இருந்து, உடனடியாக வெளியேறினர்.
ஆனால், 40 பேரை மட்டும், அங்கிருந்து அப்புறப்படுத்த முடியாமல், அதிகாரிகள் தவித்து வருகின்றனர்.
இதில், 25 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவும் வழங்கப்பட்டு உள்ளது.
அதன் பிறகும், வீடுகளை காலி செய்யாமல், அதே இடத்தில் தொடர்ந்து வசிக்கின்றனர். இந்த ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற, செங்கல்பட்டு வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், கடந்த ஏப்ரல் மாதம் சென்றனர்.
ஆனால், ஆக்கிரமிப்பாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அதிகாரிகள் திரும்பி வந்தனர்.
இந்த ஆக்கிரமிப்பு அகற்றப்படாததால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் அடிக்கடி நடைபெற்றுவருகின்றன.
எனவே, பொதுமக்கள் நலன் கருதி, சாலை பணிகள் முழுமை பெற, அங்குள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.