/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/தேசிய ஊரக வேலை வாய்ப்பு பணியை விவசாய பருவங்களில் நிறுத்த கோரிக்கைதேசிய ஊரக வேலை வாய்ப்பு பணியை விவசாய பருவங்களில் நிறுத்த கோரிக்கை
தேசிய ஊரக வேலை வாய்ப்பு பணியை விவசாய பருவங்களில் நிறுத்த கோரிக்கை
தேசிய ஊரக வேலை வாய்ப்பு பணியை விவசாய பருவங்களில் நிறுத்த கோரிக்கை
தேசிய ஊரக வேலை வாய்ப்பு பணியை விவசாய பருவங்களில் நிறுத்த கோரிக்கை
ADDED : பிப் 09, 2024 10:23 PM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் நேற்று நடந்தது.
மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, கூடுதல் கலெக்டர் அனாமிகா, வேளாண்மை இணை இயக்குனர் அசோக், மாவட்ட வன அலுவலர் ரவி மீனா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 115 மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்கள் மீது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கலெக்டர் உத்தரவிட்டார்.
இந்த கூட்டத்தில், விவசாயிகள் பேசியதாவது:
செங்கல்பட்டு மாவட்டத்தில், விவசாய நெல் சாகுபடி செய்யும்போது, வேலை செய்ய ஆட்கள் கிடைக்காததால், பணிகளில் தொய்வு ஏற்படுகிறது. இப்பணி செய்யும்போது, தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை நிறுத்த வேண்டும். விவசாய பணிகள் முடிந்த பின், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டப் பணிகளை செயல்படுத்தலாம்.
ஒரு டன் கரும்புக்கு, 4,000 ரூபாய் உயர்த்தி வழங்க, அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகள் வங்கி கணக்கிற்கு உடனுக்குடன் பணம் செலுத்துவதை போல, கரும்பு அறுவடை செய்து ஆலைக்கு வரும்போதே, விவசாயிகள் வங்கி கணக்கில் பணம் செலுத்தினால், கரும்பு சாகுபடி பரப்பை அதிகப்படுத்தலாம்.
மதுராந்தகம் ஏரியில், கடந்த இரண்டு ஆண்டுகளாக சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க, அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
கல்பாக்கம் அடுத்த வாயலுார் பகுதியில், கிழக்கு கடற்கரை சாலையில் செயல்படும் டாஸ்மாக் கடைக்கு வரும் குடிமகன்களால், விபத்துகள் அதிகமாக நடக்கின்றன.
இதனால், பள்ளி, கல்லுாரி மாணவியர், பெண்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க, 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு, விவசாயிகள் பேசினர்.
தொடர்ந்து, கலெக்டர் அருண்ராஜ் பேசியதாவது:
மாவட்டத்தில், விவசாயத்திற்கு முக்கியத்துவம் தரப்படும். விவசாயிகள் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படும்.
விவசாயிகள் கோரிக்கைகள் அனைத்தும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.