/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ பாலம் அமைக்கும் பணியில் தொய்வு வண்டலுார் -- கேளம்பாக்கம் சாலையில் நெரிசல் பாலம் அமைக்கும் பணியில் தொய்வு வண்டலுார் -- கேளம்பாக்கம் சாலையில் நெரிசல்
பாலம் அமைக்கும் பணியில் தொய்வு வண்டலுார் -- கேளம்பாக்கம் சாலையில் நெரிசல்
பாலம் அமைக்கும் பணியில் தொய்வு வண்டலுார் -- கேளம்பாக்கம் சாலையில் நெரிசல்
பாலம் அமைக்கும் பணியில் தொய்வு வண்டலுார் -- கேளம்பாக்கம் சாலையில் நெரிசல்
ADDED : ஜூன் 13, 2025 02:18 AM

வண்டலுார்:வண்டலுார் -- கேளம்பாக்கம் சாலையில், ஊனமாஞ்சேரி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சாலையின் குறுக்கே, 'கல்வெர்ட்' எனப்படும் கீழ்மட்ட பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதனால், தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுார் முதல் கேளம்பாக்கம் வரையிலான, 20 கி.மீ., துாரமுள்ள சாலையில், ஒரு மணி நேரத்தில், 2,000க்கும் அதிகமான வாகனங்கள் பயணிக்கின்றன.
இந்த சாலையில், ஊனமாஞ்சேரி எல்லைக்கு உட்பட்ட வண்டலுார் காப்புக்காடு பகுதியிலிருந்து, சாலையின் மறுபக்கம் உள்ள நெடுங்குன்றம் தாங்கல் ஏரிக்கு, மழைக்காலங்களில், அதிக அளவில் நீர் வெளியேறுகிறது.
கன மழை பெய்யும் போது, சாலையின் குறுக்கே, 3 அடி உயரத்திற்கு மேல் மழைநீர் கடப்பதால், போக்குவரத்து தடைபடுகிறது.
இதற்கு தீர்வு காண, வண்டலுார் காப்புக்காடு பகுதியிலிருந்து நெடுங்குன்றம் தாங்கல் ஏரிக்கு மழைநீர் எளிதாக செல்ல, சாலையின் அடியில் தரைப் பாலம் அமைக்க, தமிழக நெடுஞ்சாலை துறை கடந்த ஆண்டு முடிவு செய்தது.
அதன்படி, 20 அடி அகலம், 5 அடி ஆழம், 65 அடி நீளமுள்ள 'கல்வெர்ட்' இணைப்பு தரைப் பாலம், 70 லட்சம் ரூபாய் செலவில் அமைக்க, கடந்த பிப்., மாதம் நிதி ஒதுக்கப்பட்டு, கடந்த மே மாதம் பணிகள் துவக்கப்பட்டன.
இந்த தரைப்பாலம் அமைக்கப்படும் இடத்தில், வண்டலுார் - - கேளம்பாக்கம் சாலையில், 492 அடி துாரத்திற்கு இருவழி சாலை, ஒரு வழிப் பாதையாக மாற்றப்பட்டது.
இதனால், அனைத்து வாகனங்களும் அந்த குறுகிய வழித்தடத்தில், மெதுவாக பயணித்து செல்வதால், குறிப்பிட்ட இடத்தில் மட்டுமின்றி, நீண்ட துாரத்திற்கு கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.
இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:
காலை மற்றும் மாலை வேளையில், 'பீக் ஹவர்ஸ்' எனும் துரித நேரத்தில், வண்டலுார் - - கேளம்பாக்கம் சாலையில், ஒரு மணி நேரத்திற்கு 3,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணிக்கின்றன.
இந்த வாகனங்கள் தற்போது, தரைப்பால பணி நடக்கும் இடத்தில், ஒரு வழிப் பாதையில் நுழையும் போது, கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால், ஆம்புலன்ஸ் மற்றும் பள்ளி வாகனங்கள் விரைந்து செல்ல முடியாத சூழல் நிலவுகிறது.
தவிர, வாகனங்கள் மிக நெருக்கமாக பயணிப்பதால், ஒன்றுடன் ஒன்று உரசி, விபத்துகளும் ஏற்பட்டு, வாகன ஓட்டிகளிடையே வாக்குவாதம், கைகலப்பு நடக்கிறது.
எனவே, தரைப்பாலம் அமைக்கும் பணிகளை துரிதப்படுத்தி விரைந்து முடித்திட, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.