Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ 50 வயதை நெருங்கியும் பணி நிரந்தரம் இல்லை: கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்கள் குமுறல்

50 வயதை நெருங்கியும் பணி நிரந்தரம் இல்லை: கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்கள் குமுறல்

50 வயதை நெருங்கியும் பணி நிரந்தரம் இல்லை: கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்கள் குமுறல்

50 வயதை நெருங்கியும் பணி நிரந்தரம் இல்லை: கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்கள் குமுறல்

UPDATED : செப் 15, 2025 12:21 PMADDED : செப் 14, 2025 10:28 PM


Google News
திருவாலங்காடு: ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணிபுரியும் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்கள், 22 ஆண்டுகளாக தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர்.

பலரும் 50 வயதை கடந்த நிலையில், எதிர்காலம் என்னாகுமோ என, கவலை அடைந்துள்ளனர். நிரந்தர பணியாளராக அரசு அறிவிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகம் முழுதும் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில், 2003ல் நிர்வாக பணி அனைத்தும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டது. கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் பணியிடம் உருவாக்கப்படாததால், தற்காலிக அடிப்படையில் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன.

அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவாலங்காடு, மீஞ்சூர், சோழவரம், பூண்டி, ஆர்.கே.பேட்டை, திருத்தணி உட்பட 14 ஒன்றியங்கள் உள்ளன. இங்கு, 230க்கும் மேற்பட்டோர் பணியில் சேர்ந்தனர். அந்தந்த மாவட்ட கலெக்டர் நிர்ணயம் செய்யும் குறைந்தபட்ச சம்பளம், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 14,000 - 20,000 ரூபாய் வரை வழங்கப்படுகிறது.

இந்நிலையில், 20 ஆண்டுகளை கடந்து பணியாற்றும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என, கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் துவங்கி, தற்போது வரை கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், எவ்வித பலனும் இல்லை.

எதிர்காலம் என்னாகுமோ?

கடந்த 22 ஆண்டுகளாக தற்காலிக ஊழியர்களாக பணிபுரிந்து வரும் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்களில், பெரும்பாலானவர்கள், 50 வயதை நெருங்கியுள்ளனர். சம்பளம் தவிர, அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் மற்ற சலுகைகள் எதுவும் கிடையாது. இனி, வேறெங்கும் வேலைக்கு செல்ல முடியாது என்ற சூழலில், எதிர்காலம் குறித்த கேள்வி எழுந்துள்ளது. தற்போது, மாவட்டம் முழுதும் 270 பேர் பணியாற்றி வருகிறோம். அரசு துறையில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் போது, தங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். - கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர், திருவள்ளூர்.


என்னென்ன பணிகள்

* பொது நிதி திட்ட பணிகள்.
* 15வது மாநில நிதிக்குழு மான்யம் திட்ட பணிகள்.
* பார்லிமென்ட் உறுப்பினர் நிதி திட்ட பணிகள்.
* சட்டசபை உறுப்பினர் நிதி திட்ட பணிகள்.
* அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள்.
* கலைஞர் கனவு இல்ல வீடுகள் திட்டம்.
* முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டமைப்பு திட்டம்.
* முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டம்.
* மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்.
* பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் - வீடுகள்.
* பழங்குடியினர் வீடுகள் திட்டம் - வீடுகள்.
* துாய்மை பாரத இயக்க திட்டம்.
* பழுதடைந்த வீடுகள் திட்டம் உள்ளிட்ட பணிகள் குறித்த விபரங்களை, கணினியில் பதிவேற்றி பராமரிக்கும் பணியை செய்து வருகின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us