/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ நாட்டில் 2வது தீயணைப்பு பயிற்சி மையம் திருப்போரூரில் அமைக்க முதல்வர் அடிக்கல் நாட்டில் 2வது தீயணைப்பு பயிற்சி மையம் திருப்போரூரில் அமைக்க முதல்வர் அடிக்கல்
நாட்டில் 2வது தீயணைப்பு பயிற்சி மையம் திருப்போரூரில் அமைக்க முதல்வர் அடிக்கல்
நாட்டில் 2வது தீயணைப்பு பயிற்சி மையம் திருப்போரூரில் அமைக்க முதல்வர் அடிக்கல்
நாட்டில் 2வது தீயணைப்பு பயிற்சி மையம் திருப்போரூரில் அமைக்க முதல்வர் அடிக்கல்
ADDED : செப் 23, 2025 12:23 AM

திருப்போரூர்:திருப்போரூரில், மாநில தீயணைப்பு பயிற்சி மையம் அமைக்கும் திட்டம், 10 ஆண்டுகளுக்குப் பின், 21.85 கோடி ரூபாய் மதிப்பில் துவங்க, நேற்று அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
'செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் பேரூராட்சி, காலவாக்கம் கிராமத்தில், மாநில தீயணைப்பு பயிற்சி மையம் ஏற்படுத்தப்படும்' என, 2014ம் ஆண்டு சட்டசபை கூட்டத்தொடரில், 110 விதியின் கீழ், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
இதையடுத்து, காலவாக்கம் கிராமத்தில், 12.85 ஏக்கர் இடம் அளவீடு செய்யப்பட்டது.
பழைய மாமல்லபுரம் நான்கு வழிச்சாலையை ஒட்டிய பகுதியில், ஆக்கிரமிப்பு ஏற்படாமல் தடுக்க சுற்றுச்சுவர் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது.
அதன் பின், அடுத்தகட்டமாக கட்டடங்கள், தீயணைப்பு வாகனங்கள் நிறுத்துமிட வசதி, கருவிகள் வைக்கும் இடம் என, கட்டுமான பணிகள் துவக்கப்படவில்லை.
இத்திட்டத்தை கிடப்பில் போடாமல், நிதி ஒதுக்கீடு செய்து உடனே துவக்க வேண்டும் என, நீண்ட காலமாக சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதற்கிடையில், இப்பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டால், மீட்பு பணிக்கு சிறுசேரி, மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் போன்ற பகுதிகளில் இருந்து தான் தீயணைப்பு வீரர்கள் வர வேண்டும்.
அவர்கள் வருவதற்குள் பாதிப்பு அதிகரிக்கும். இதனால், திருப்போரூரில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, மேற்கண்ட மாநில தீயணைப்பு பயிற்சி மையத்திற்கு ஒதுக்கப்பட்ட ஒரு பகுதி இடத்தில், 2023ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த தீயணைப்பு நிலையத்தை முதல்வர் ஸ்டாலின், சென்னை தலைமை செயலகத்திலிருந்து,'வீடியோ கான்பரன்ஸ்' மூலமாக திறந்து வைத்தார்.
தற்போது இங்கு, ஒரு தீயணைப்பு நிலைய அலுவலர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் என மொத்தம் 10க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.
இருப்பினும், மாநில தீயணைப்பு துறை பயிற்சி மையம் துவங்கப்படாமல் கிடப்பில் இருந்து வந்தது.
இந்த பயிற்சி மையம் அமைந்தால், தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவில் அடிப்படை பயிற்சியான தடை தாண்டுதல், ஆழ்கடல் நீச்சல், கயிறு மூலமாக மீட்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் கற்றுத்தரப்படும்.
பயிற்சி முடித்து தேர்வு பெறுபவர்கள், தீயணைப்பு நிலையங்களில் நியமிக்கப்படுவர். மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அனைத்து தீயணைப்பு வீரர்களும், பயிற்சி மேற்கொள்வர்.
எனவே, திருப்போரூர் அடுத்த காலவாக்கத்தில் விரைவில் மாநில தீயணைப்புத் துறை பயிற்சி மையத்தை அமைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து வந்தது.
இதையடுத்து தற்போது, 21.85 கோடி ரூபாய் மதிப்பில், மாநில தீயணைப்பு பயிற்சி மையம் அமைக்க நிதி ஒதுக்கி, அரசு நடவடிக்கை எடுத்தது.
இதற்கான, அடிக்கல் நாட்டு விழா, காலவாக்கத்தில் நேற்று நடந்தது.
முதல்வர் ஸ்டாலின், இந்த மாநில தீயணைப்பு பயிற்சி மையத்திற்கு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
இதையொட்டி, பயிற்சி மைய வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், தீயணைப்புத் துறை இணை இயக்குநர் சத்தியநாராயணன், மாவட்ட அலுவலர் லட்சுமிநாராயணன், உதவி மாவட்ட அலுவலர் செந்தில்குமரன், காலவாக்கம் தீயணைப்பு நிலைய அலுவலர் துரைராஜ், வீரராகவன் உள்ளிட்டோர் பங்கேற்று, கல்வெட்டை திறந்து வைத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினர்.
இதுகுறித்து, தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
இந்தியாவில் நாக்பூரில் தான் பெரிய அளவில் தீயணைப்பு பயிற்சி மையம் உள்ளது. அடுத்ததாக, தமிழகத்தில் காலவாக்கம் பகுதியில் தான் அமைய உள்ளது.
இவ்வாறு, இந்திய அளவில் சிறப்புமிக்க பயிற்சி மையமாக உருவாக நிதி ஒதுக்கீடு செய்து அரசு நடவடிக்கை எடுத்தது மகிழ்சியளிக்கிறது. இங்கு அலுவலகம், விடுதி, சமையல் அறை, மாதிரி தீயணைப்பு நிலையம் என ஏற்படுத்தப்பட்டு, 300 பேர் பயிற்சி பெறும் அளவில் உருவாகுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.