/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ காலநிலை பூங்காவில் நீரூற்றுகள் பழுது கிளாம்பாக்கத்தில் குழந்தைகள் ஏமாற்றம் காலநிலை பூங்காவில் நீரூற்றுகள் பழுது கிளாம்பாக்கத்தில் குழந்தைகள் ஏமாற்றம்
காலநிலை பூங்காவில் நீரூற்றுகள் பழுது கிளாம்பாக்கத்தில் குழந்தைகள் ஏமாற்றம்
காலநிலை பூங்காவில் நீரூற்றுகள் பழுது கிளாம்பாக்கத்தில் குழந்தைகள் ஏமாற்றம்
காலநிலை பூங்காவில் நீரூற்றுகள் பழுது கிளாம்பாக்கத்தில் குழந்தைகள் ஏமாற்றம்
ADDED : ஜூன் 02, 2025 11:59 PM

கிளாம்பாக்கம், :கிளாம்பாக்கத்தில் உள்ள காலநிலைப் பூங்காவில், குழந்தைகளின் மனம் கவர அமைக்கப்பட்டுள்ள நீரூற்றுகள், சில மாதங்களாக செயல்படாததால், பகுதிவாசிகள் அதிருப்தியில் உள்ளனர்.
வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து முனையம் அருகே, ஜி.எஸ்.டி., சாலையோரம், 16 ஏக்கர் பரப்பில், 15.2 கோடி ரூபாய் செலவில், காலநிலைப் பூங்கா உருவாக்கப்பட்டு, 2024 டிச., 7ம் தேதி திறக்கப்பட்டது.
இங்கு தொல்லியல் விளக்க மையம், அகழிகள், மழைநீர் குளங்கள், உயர்மட்ட நடைபாதை, மரத்தோட்டம், சிறுவர் விளையாட்டு பூங்கா, சிலைகள், விளையாட்டு மைதானம், திறந்தவெளி அரங்கம், கண்காட்சி மேடைகள் என, பல பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.
தவிர, தமிழர்களின் ஐந்து வகை நிலங்களான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய இடங்களில் வளரக்கூடிய தாவர இனங்களும், அரிய வகை பூச்செடிகளும், கொடிகளும் வளர்க்கப்படுகின்றன.
இவற்றுடன், குழந்தைகளை கவரும் வகையில், மூன்று வகையான நீரூற்றுகள் அமைக்கப்பட்டன. தற்போது, அவை செயல்பாட்டில் இல்லை. இதனால், குழந்தைகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
இதுகுறித்து, பெற்றோர் கூறியதாவது:
இந்த பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த ஆறு அடி நீரூற்று, இசை நீரூற்று, வானவில் நீரூற்று ஆகியவை, குழந்தைகளை வெகுவாக கவர்ந்தன. இரவு நேரத்தில், இந்த நீரூற்றுகள், குழந்தைகளுக்கு உற்சாகமான மனநிலையை தந்தன.
இதனால் ஊரப்பாக்கம், வண்டலுார் பகுதிவாசிகள் தங்கள் குழந்தைகளோடு மாலை நேரத்தில் இந்த பூங்காவிற்கு வந்து ரசித்தனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக நீரூற்றுகள் எதுவும் செயல்படவில்லை.
நீரூற்றுகள் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துவிடும் என்ற நம்பிக்கையில், தினந்தோறும் குழந்தைகளை அழைத்து வந்து, ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கிறோம்.
தற்போது, நீரூற்றுகளின் கட்டுமானங்கள் முற்றிலும் வறண்டு, துருப்பிடித்த நிலையில் உள்ளன.
தவிர, பூங்காவில் உள்ள நடைபாதை தொகுதிகள் பல இடங்களில், நேர்த்தியாக இல்லை. நடைபாதைகளில், 'ரப்பர்' விரிப்பு வைத்தல் உட்பட, முடிக்கப்படாத பணிகளும் உள்ளன.
பூங்காவை பராமரிக்கும் தனியார் நிறுவனத்தாரிடம், இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும், நடவடிக்கை இல்லை.
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனம் செலுத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.