Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ தேவைக்கேற்ப ரேஷன் கடை இல்லாமல் ஊரப்பாக்கத்தில் கார்டுதாரர்கள் தவிப்பு

தேவைக்கேற்ப ரேஷன் கடை இல்லாமல் ஊரப்பாக்கத்தில் கார்டுதாரர்கள் தவிப்பு

தேவைக்கேற்ப ரேஷன் கடை இல்லாமல் ஊரப்பாக்கத்தில் கார்டுதாரர்கள் தவிப்பு

தேவைக்கேற்ப ரேஷன் கடை இல்லாமல் ஊரப்பாக்கத்தில் கார்டுதாரர்கள் தவிப்பு

ADDED : மே 29, 2025 09:55 PM


Google News
ஊரப்பாக்கம்:ஊரப்பாக்கத்தில், மக்கள் தொகைக்கு ஏற்ப ரேஷன் கடைகள் இல்லாததால், கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. இதனால், கூடுதலாக மூன்று கடைகளை திறக்க வேண்டுமென, பகுதிவாசிகள் வலியுறுத்தி உள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுார் தாலுகா, ஊரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள 15 வார்டுகளில், 80,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.

தற்போது, ஊரப்பாக்கம் ஊராட்சியில், எட்டு ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இதில் பாரதி நகர், பிரியா நகர் மற்றும் கிளாம்பாக்கத்தில் இரண்டு என, மொத்தம் நான்கு கடைகள் இயங்கி வருகின்றன.

இந்த நான்கு கடைகளுக்கும், 1,000 கார்டுதாரர்களுக்கு குறைவாக உள்ளதால், பொருட்கள் தட்டுப்பாடின்றியும், கூட்ட நெரிசல் இல்லாமலும் உள்ளது.

ஊரப்பாக்கத்தில் மீதமுள்ள நான்கு கடைகளிலும், ஒவ்வொரு கடைக்கும் 2,200 கார்டுதாரர்களுக்கு மேல் உள்ளதால், பொருட்கள் வாங்க வரும் மக்கள், கூட்ட நெரிசலில் சிக்கித் தவிக்கின்றனர்.

எனவே, கூடுதலாக மூன்று ரேஷன் கடைகளை திறக்க வேண்டும் என, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

பேரூராட்சிக்கு இணையான மக்கள் தொகையும், பரப்பளவும் உள்ள ஊரப்பாக்கம் ஊராட்சியில், மக்கள் தொகைக்கு ஏற்ப ரேஷன் கடைகள் இல்லை.

மாதத்தின் முதல் வாரத்தில், அனைவரும் ஒரே நேரத்தில் பொருட்களை வாங்க விரும்புகின்றனர். இதனால், கடைகளில் வரிசையில் நிற்கும் பொதுமக்களிடையே வாக்குவாதம், கைகலப்பு அடிக்கடி நடக்கிறது.

ஒரு கடை ஊழியர் அதிகபட்சம் 1,200 கார்டுதாரர்களுக்குத் தான் பொருட்களை தர முடியும். ஆனால், ஊரப்பாக்கத்தில் உள்ள நான்கு ரேஷன் கடைகளில், தலா 2,200 கார்டுகளுக்கு மேல் உள்ளன.

எனவே, கூடுதலாக மூன்று ரேஷன் கடைகளை திறக்க வேண்டும் என, அதிகாரிகளிடம் பலமுறை விண்ணப்பம் அளித்தும் நடவடிக்கை இல்லை.

எனவே, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள், கூடுதல் எண்ணிக்கையில் ரேஷன் கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து, பகுதிவாசிகள் கூறியதாவது:


பழத்தோட்டம், ராஜிவ்காந்தி நகரில், 900 குடும்பங்கள் உள்ளன. இவர்களுக்கு அருகில் ரேஷன் கடை இல்லை. இதனால், 3 கி.மீ., துாரம் சென்று, ஊரணீஸ்வரர் கோவில் அருகே உள்ள கடையில் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.ஊரணீஸ்வரர் கடையில் எப்போதும் கூட்டம் அலைமோதுவதால், ரேஷன் பொருட்களை வாங்கிச் செல்ல, ஒரு நாளை செலவிட வேண்டி உள்ளது. இதனால் நேர விரயம், மன உளைச்சல் ஏற்படுகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us